ஹிறா மகா வித்தியாலயத்தின் நீண்ட நாள் கனவை நனவாக்கவும் நடவடிக்கை இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க, கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மற்றும் அல் ஹிறா மகா வித்தியாலயம் என்பற்றில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திப் பணிகள் மற்றும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டிடம் என்பவற்றை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது, கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பொறியியலாளர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும் இராஜாங்க அமைச்சருடன் குறித்த மூன்று பாடசாலைகளுக்கும் விஜயம் செய்தனர்.
உயர் அதிகாரிகளுடன் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அங்கு தனது கோரிக்கையின் நிமித்தம் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற ஆராதனை மண்டபம் மற்றும் வகுப்பறை கட்டிடம் என்பவற்றின் நிர்மாணப்பணிகளை பார்வையிட்டதோடு, அப்பணிகளை துரிதப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
பின்னர், காத்தான்குடி அல் ஹிறா மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர், எதிர்காலத்தில் குறித்த பாடசாலையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் பாடசாலைக்கான தேவைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
இதன்போது, அல் ஹிறா மகா வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு அங்கத்தவர்கள் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் பாடசாலைக்கு பூப்பந்து மைதானமொன்றை (பெட்மின்டர் கோட்) அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
பாடசாலையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற இராஜாங்க அமைச்சர், பூப்பந்து மைதானம் அமைப்பதற்கு தேவையான மதிப்பீட்டறிக்கையை தயார் செய்து தனக்கு சமர்ப்பிக்குமாறும் பின்னர் அதற்கான நிதியை உடனடியாக தான் வழங்குவதாகவும் உ
றுதியளித்தார்.
இதேவேளை, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டிட நிர்மாணப்பணிகளை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் அதன் தேவைப்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.