கட்டார் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.தொடர்ந்தும் பல நாடுகள் கட்டாருக்கு எதிரான செயற்பாடுகளைப் பலப்படுத்தி வருகின்றன.
ஜிகாத், அல்கைதா மற்றும் ஈரானின் பயங்கரவாத அமைப்புக்களுக்கு கட்டார் அரசாங்கம் நிதியுதவி வழங்குவதாகத் தெரிவித்து 7 நாடுகள் அந்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு வந்தன.
இன்று அந்த பட்டியலில் ஜோர்தானும் இணைந்து கொண்டது. அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கான அனுமதிப் பத்திரத்தினை இரத்து செய்து, கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை மட்டுப்படுத்துவதாக ஜோர்தான் அறிவித்திருந்தது.
கொன்ராஸ் விமான நிறுவனமும் கட்டாருக்கான விமான சேவைகளை இன்று காலை முதல் நிறுத்துவதாக அறிவித்தது.
சவுதி அரேபியா, கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்தின் போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தினை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் பஹ்ரேய்ன், எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் என்பன கட்டார் எயார்வேஸ் நிறுவனத்துடனான விமான சேவையை முற்றாக நிறுத்தியுள்ளது.
இன்று அதிகாலை மொராக்கோவிற்கு சொந்தமான ரோயல் எயார் மெரோக் நிறுவனமும் கட்டார் ஊடாக சவுதி, ஏமன், ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து ஆகிய நாடுகளுக்கான விமான சேவையை இரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததாக சர்வதேசத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கட்டார் ரியால்களை விற்பனை செய்யுமாறு சவுதி மத்திய வங்கி அந்நாட்டின் உள்நாட்டு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதுடன், புதிதாக கட்டார் ரியாலை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் பணித்துள்ளது.
கட்டாரை தனிமைப்படுத்துவது சிறந்தது அல்லவென தெரிவித்துள்ள துருக்கியும் பிரான்ஸும் இராஜதந்திர தலையீட்டுக்குத் தயாராகி வருகின்றன.
தமது மத்திய கிழக்கு விஜயத்தின் போது வலியுறுத்தப்பட்ட விடயங்கள் மறைமுகமாக அல்லது நடைமுறை ரீதியாக செயற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று (06) மகிழ்ச்சி வெளியிட்ட டொனால்ட் ட்ரம்ப், மத்திய கிழக்கின் சமாதானத்தைப் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படை முகாமான அல் உடிட், கட்டாரின் தென்மேல் பகுதியில் அமைந்துள்ளது.
அந்த முகாமிற்கான நிதிச்செலவுகள் மற்றும் அனுசரணையை கட்டார் அரசாங்கம் வழங்குவதுடன், பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கட்டாரின் செயற்பாடு பாராட்டுக்குரியது என பென்டகன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதி மற்றும் அயதுல்லாஹ் கொமெய்னி நினைவிடம் ஆகிய இடங்களில் இன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
தற்கொலை குண்டுதாரி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அதற்கு முன்னதாக அவரது இரண்டு சகாக்கள் குறித்த இரண்டு இடங்களிலும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இரண்டாவது துப்பாக்கிதாரி அயதுல்லா கொமெய்னி சமாதி அருகே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.
இந்த இரண்டு இடங்களும் 25 கிலோமீற்றர் இடைவெளியில் அமைந்துள்ளன.
இந்த தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல்களின் பின்னர் குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய பெண் ஒருவரை ஈரான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.