அப்பொழுதே அவர் இப்படித்தான்....! ஓர் உண்மைச் சம்பவம்-

எஸ். ஹமீத்-

ற்றைக்குச் சரியாக இருபத்தேழு வருடங்களுக்கு முன்னம் நடந்த சம்பவம் இது. விளையும் பயிரொன்றின் இளமைக் காலத்து இயங்குதல் பற்றிய சத்தியம் இது. தனது சமூகத்தின் பசி போக்கும் எத்தனத்தில் அந்தச் சிறிய சிட்டுக் குருவி ஆழிக் கடலின் அலைகளை எதிர்த்துப் போராடிக் கரை மீண்ட நிகழ்வின் சாட்சியம் இது.

அது 1990ம் ஆண்டின் இதே கால கட்டம். பாசிஸப் புலிகளின் வெறித்தனமான அடக்குமுறைக்குள் வட, கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம் சமூகம் பரிதவிப்புகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த எரிதழற் காலம். பசியும் பஞ்சமும் கோலோச்சிய கொடுமையான நேரம்.

மன்னார்த் தீவையும் பெருநிலப் பரப்பையும் இணைக்கின்ற தரை மற்றும் இரயிற் பாலங்கள் புலிகளினால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டிருந்தன. ஆதலால், மன்னார்த் தீவுக்குள் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள்.

மன்னாரிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் செல்வதற்கு ஒரே மார்க்கம்தான் இருந்தது. அது கடல் மார்க்கம்.

இந்த நிலையில் தனது மண்ணின் உறவுகள் போதிய உணவின்றி, தேவையான உடைகளின்றி, நோய்களுக்கான மருந்துகளின்றி வாடுவதை அந்தச் சிறுவன் கண்டான். பிறர் துன்பம் காணச் சகியாத பெருமனம் அவனுக்கு. தன்னால் தனது மக்களுக்கு என்ன செய்யலாமென இரவும் பகலும் சிந்தித்தான். பாடசாலையில் உயர்தரம் கற்றுக் கொண்டிருந்த பதினேழு வயதுச் சிறுவனான தன்னால் தனது மக்களுக்கு ஏதாவது செய்ய முடியுமென நிச்சயமாக நம்பினான். அந்த நம்பிக்கை தந்த துணிவில் அவன் தனது மாமனார் முறையான ஒருவருடன் இணைந்து, படகு மூலம் கடல் கடந்து, கற்பிட்டி வந்து பின்னர் கொழும்பையடைந்தான்.

தனது ஊரவர்கள் உட்படக் கொழும்பில் பல தனவந்தர்கள் பரோபகாரிகளிடம் தனது மக்களின் நிலையை எடுத்துச் சொல்லி உணவுப் பொருட்களை சேகரித்தான். மீண்டும் கற்பிட்டி வந்து படகு மூலம் அவற்றை ஏற்றிக் கொண்டு தனது ஊர் நோக்கிப் பயணப்பட்டான்.

படகு கரையையடையும் நேரம். அலைகள் பெரிதாகக் குமுறி எழுந்தன. அவ்வாறெழுந்த அலைகள் ஆக்ரோஷமாகப் படகைக் கடலில் மூழ்கடிக்கப் பார்த்தன. படகிலிருந்தவர்களைக் கடலுள் குதித்து நீந்தும்படிப் படகோட்டி சொன்னான். அந்த இளைஞனும் அவனது மாமாவும் கடலில் குதித்தனர்.

அந்த இளைஞன் ஒருவாறு கரையையடைந்து தனது மாமாவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஆனால், மாமா மௌத்தாகி, அவரது மய்யித்துத்தான் கரை வந்து சேர்ந்தது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

இவ்வாறு தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது மக்களுக்கு உதவப் பாடுபட்ட அந்த இளைஞன் வேறு யாருமல்ல.... இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்னும் கட்சியின் தேசிய தலைவராகவும் கைத்தொழில் வாணிப அமைச்சராகவும் இருக்கும் கௌரவ றிசாத் பதியுதீன்தான் அந்த இளைஞன்.

அன்று அவர் எவ்விதம் தனது மக்களின் துயர் துடைக்கப் பாடுபட்டாரோ அவ்வாறே இன்றும் பாடுபடுகிறார். அலைகடலைப் போல அவரது எதிரிகள் அவரை மூழ்கடிக்கப் பார்த்தாலும் அவற்றிலிருந்து அல்லாஹ் அவரைக் காப்பாற்றிக் கொண்டேயிருக்கிறான். இன்ஷா அல்லாஹ்.... இன்னும் பல்லாண்டுகள் அவரது சேவைகள் நமது மக்களுக்குக் கிடைக்க வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -