சிறுபான்மையினருக்கெதிரான வன்முறைகளை கவனத்திற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

யுத்தத்திற்குப் பின்னர் வெளிப்படையாகவே நாட்டில் தலைதூக்கியுள்ள சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தன்னைச் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார்.

பிலிப் க்ஸேகோர்ஸெவ்கி (Fillip Grzegorzewski ) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள அவருடைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 06.06.2017 இடம்பெற்றது,

இதன்போது சமகால நாட்டு நடப்புக்களில் இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறிப்பாக யுத்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சிறுபான்மை மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் அவலங்கள் குறித்து முதலமைச்சர் ஐரோப்பிய ஒன்றிய பிரிதிநிதிகளிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர்ளூ

சிறுபான்மையினர், அவர்களது மதஸ்தலங்கள் மற்றும் உடமைகள் மீதான வன்முறைச் சம்பவங்கள் குறித்து நாம் கரிசனையுடன் உள்ளோம்.

சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையிலான அரசியல் தீர்வொன்று விரைவில் முன்வைக்கப்பட வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு உள்ளது.

நாட்டில் இயல்பு நிலை தொடர்ந்த போதிலும் இதுவரை பொதுமக்களின் குடியிருப்புக் காணிகள் மற்றும் விவசாயக் காணிகள் விடுவிக்கப்படாதுள்ள அவல நிலை இருந்து வருகின்றது.

காணிகளை விடுவிப்பது தொடர்பில் கடந்த அரசாங்கத்தை விட இந்த அரசாங்கம் கரிசனை காட்டிய போதிலும் அதற்கான நடவடிக்கைகள் மக்களிடையே பெருமளவு திருப்தியை ஏற்படுத்தக் கூடியதாய் அமையவில்லை.

அது மாத்திரமன்றி தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்ற போர்வையில் சிறுபான்மையினரின் காணிகள் அபகரிக்கப்படுவது தொடர்கிறது.யுத்தத்தின்போது மற்றும் அதன் பின்னரான காலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் கடந்த அரசாங்கமோ இந்த அரசாங்கமோ இதுவரை ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றினை முன்வைக்கவில்லை.

எனவே இன்றும் அவர்களது உறவினர்கள் வடக்கு கிழக்கில் தமக்கான தீர்வு கோரி போராடி வருகின்றனர்.

யுத்தம் முடிந்து ஆண்டுகள் பல கடந்த போதிலும் அதனால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாண மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.கிழக்கில் யுத்தத்தால் விதவைகளாக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் வாழ்வாதார உதவிகளின்றி பாரிய சிரமங்களுக்கு மத்தியில் தமது வாழ்வினை கொண்டு செல்கின்றனர். எனவே அவர்களுடைய வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கான திட்டங்களை முன்னெடுக்க ஐரோப்பிய நாடுகள் முன்வரவேண்டும்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் வேலையில்லாப் பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக அமைந்துள்ளதுடன் புதிய தொழில் வாய்ப்புக்களை வழங்கும் தொழிற்துறைகளை உருவாக்க உதவ வேண்டும்' என்றும் முதலமைச்சர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

யுத்தத்திற்கு பின்னர் கட்டியெழுப்பப்பட்டு வரும் இலங்கைபோன்ற நாடுகளுக்கு இவ்வாறான சிறுபான்மையினருக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்கள் ஆரோக்கியமானதல்ல என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இதன்போது கருத்துத் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -