க.கிஷாந்தன்-
துயரம் நடந்ததன் பின்பு துக்கம் தெரிவிப்பது எதற்கு..! என தெரிவித்து லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை ஹோல்ட்ரீம் தோட்ட மக்கள் போராட்டம் ஒன்றில் 29.06.2017 அன்று ஈடுப்பட்டனர். 2015ம் ஆண்டில் இப்பகுதியில் பெய்த கடும் மழையினால் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக 24 குடும்பங்களை சேர்ந்தவர்களின் வீடுகளில் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளதுடன், சுவர்களும் வெடிப்புற்றுள்ளது.
இந்த நிலையில் தோட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் கிராம சேவையாளர் மக்களை மழைக்காலங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என்று தெரிவிக்கின்றார்களே தவிர நிரந்தரமாக வதிவிடத்தை அமைக்க நடவடிக்கை எடுப்பதில்லை. இது தொடர்பில் வீடுகளை அமைத்து தருமாறு மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் இ.தொ.கா பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரிடத்தில் முறைபாடுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தும், நடவடிக்கைகள் எதுவும் எடுக்காத பட்சத்தில் நாம் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை போராட்டகாரர்கள் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவண்ணம் போராட்டத்தில் ஈடுப்பட்டதுடன், இந்த போராட்டத்தில் சுமார் 50ற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டமை குறிப்பிடதக்கது.