கைதுசெய்யப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் 7 ஆம் திகதி அவரை அடையாள அணிவகுப்புக்கும் உட்படுத்துமாறும் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.
இதனைவிட இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நால்வரை பொலிசார் கைது செய்திருந்த நிலையில் அவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
300 வருடங்கள் பழமையான வி.ஓ.சி இலச்சினையுடைய புராதன பெறுமதிமிக்கது என நம்பப்படும் இடிதாங்கி ஒன்றினை 14 கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்வது போன்று நாடகமாடி அந்த இடிதாங்கி கொள்ளையிடப்பட்டிருந்தது. கொழும்பு கருவாத்தோட்டம் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள வீடொன்றுக்கு பொலிஸ் சீருடை தரித்த நபரொருவருடன் வந்த கொள்ளை குழு இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியிருந்தது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கொழும்பு தெற்கு சட்டத்தை அமுல் செய்யும் பொலிஸ் குழு கிருளப்பனை பகுதியில் பாழடைந்த வீடொன்றிலிருந்து 4 சந்தேக நபர்களை கைது செய்திருந்தனர்.
இந்த இடிதாங்கியை விற்பனை செய்ய வந்ததாக கூறப்படும் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் கொள்ளை இடம்பெற்றதாக கூறப்படும் வீட்டுக்கு வெளியே இருந்தபோது ஆயுதமுனையில் கொள்ளை இடம்பெற்றதாக பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொள்ளை குழுவில் பொலிஸ் சீருடை தரித்த ஒருவர் இருந்துள்ளமையை குறித்த மாகாணசபை உறுப்பினரே பொலிசாருக்கு தெரிவித்துள்ளார். குறித்த புராதன இடிதாங்கியானது அம்மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினாலேயே விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொலிஸ் சீருடையில் இருந்த நபர் பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் அதிகாரியென பின்னர் விசாரணையின் மூலம் தெரியவந்ததையடுத்தே அவர் நேற்று நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்தே அவரை எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம். அன்றைய தினம் குறித்த பொலிஸ் பரிசோதகரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.(வீ)