ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
உலக சுற்றாடல் தினத்தையிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டுநாள் பொருட்காட்சி மட்டக்களப்பு - கிரான் றெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
வேள்ட் விஷன் நிறுவனத்தின் கிரான் பிராந்திய அலுவலகம் ஒழுங்குசெய்திருந்த இப்பொருட்காட்சிக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை , கிரான்- பிரதேச செயலகம், பிரதேச சுகாதார வைத்தியதிகாரி அலுவலகம், கோரகலிமடு- ரமண மகரிஷி பாடசாலை, கல்குடா வலயக் கல்வியலுவலகம், ஜனதக்ஷன ரிச்மார்கட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்களிப்புச் செய்திருந்தன.
வேள்ட் விஷன் நிறுவனத்தின் கிரான் பிராந்திய முகாமையாளர் திருமதி ஹிந்து றோகாஸ் தலைமையில் நடைபெற்ற இப்பொருட்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம் , பிரதேச சுகாதார வைத்தியதிகாரி ஆர். ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இயற்கைப் பசளையில் காய்கறி உற்பத்திக்கான பயிர்க் கன்றுகள் , ஆடை அலங்காரப் பொருட்கள், சுகாதார முறையிலான உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட தரப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் ஆர்வத்துடன் இங்கு பிரசன்னமாகி பொருட்களை பார்வையிட்டனர். பல பொட்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.