கட்டாரில் வசித்து வரும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் நாடு திரும்ப முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
கட்டாரில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினால், அங்குள்ள இலங்கையர்கள் எவரேனும் நாடு திரும்ப வேண்டுமென விரும்பினால் கால தாமதமின்றி அவர்கள் நாடு திரும்ப முடியும் என அமைச்சர் அதுகோரல கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கட்டாரில் வசித்து வரும் இலங்கையர்கள் நிலைமை தொடர்பில், குறித்த கொழும்பு ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் நாடு திரும்ப விரும்பினால் கட்டாருக்கான இலங்கை தூதரகத்திற்கு சென்று அதன் ஊடாக நாடு திரும்ப தேவையான வசதிகளை செய்து கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டாரில் சுமார் ஒருலட்சத்து நாற்பதாயிரம் இலங்கையர்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். கட்டாரில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையினால் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது எனவும், சிலர் அச்சம் காரணமாக உணவு, குடிநீர் போன்றவற்றை சேகரித்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.