எஸ்.அஷ்ரப்கான்-
ஞானசாரவை கைது செய்ய விடாமல் தடுப்பது அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவே என்ற ஆசாத் சாலியின் குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா என ஐ தே க தலைவரும் பிரதமருமான திரு. ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது விடயமாக கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விஜயதாச என்பவர் ஐ தே கவின் முக்கிய உறுப்பினர் நாட்டின் நீதி அமைச்சர். அப்படிப்பட்ட ஒருவர் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கைது செய்வதிலிருந்து தடுக்கின்றார் என்பது உண்மை என்றால் அது இந்த நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம் மட்டுமல்ல மிஸ்டர் கிளீன் என்ற பெயர் பெற்ற ரணில் விக்ரமசிங்கவுக்கும் அவமானமாகும். ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய விடாமல் சட்டத்தை மதிக்காத ஒருவரை ரணில் எப்படி தனது கட்சி அங்கத்தினராகவும் தனது கட்சி சார்பு அமைச்சராகவும் வைத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
அதே போல் சில மாதங்களுக்கு முன் ஞானசார கோஷ்டியினர் கண்டியில் ஊர்வலம் சென்று அங்குள்ள பள்ளிவாயல் பெயர் பலகையை தகர்த்த பின்னர் திரு. விஜயதாச ஞானசாரவை தனது அமைச்சுக்கு அழைத்து பேசினார். அதன் பின் ஆசாத் சாலியும் மசூரா சபை உறுப்பினர்களும் அமைச்சர் விஜயதாசவுடன் பேசி விட்டு இனி எல்லாம் சரி. முஸ்லிம்களுக்கு எந்தப்பிரச்சினையும் வராது என ஆசாத் சாலி பகிரங்கமாக கூறியிருந்தார். அதன் பின்னரும் முஸ்லிம் சமூகம் நிறைய அடி வாங்கி விட்டது. அன்று விஜயதாசவை நம்ப முடியும் என சொன்ன ஆசாத் சாலி இன்று ஞானசாரவை அவர்தான் காப்பாற்றிக்கொண்டிருப்பதாக சொல்வதன் மூலம் எங்கேயோ பாரிய திட்டமிடப்பட்ட ஏமாற்று நாடகம் நடப்பதாகவே தெரிகிறது.
ஐ தே க ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாரிய பல பாதிப்பை அடைவர் என்ற எமது கருத்து உறுதிப்படுத்தப்பட்டு வரும் இவ்வேளையில் ஆசாத் சாலியின் ஐ தே க அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கு பிரதமர் ரணில் கட்டாயம் பதில் தர வேண்டும். இதற்குரிய அழுத்தத்தை ஐ தேகவுக்கு வாக்களித்த முஸ்லிம்கள் கொடுக்க வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.