ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு மாவடியோடைப் பகுதி விவசாயிகள் நெற்செய்கையில் மட்டுமல்லாது மாற்றுப் பயிர் வகைகளையும் பயிரிட்டு அமோக விளைச்சலை ஏற்படுத்தி பெரும் மாற்றத்தையும் புரட்சியையும் செய்து தேசிய விவசாய உற்பத்தியில் பங்குகொண்டுள்ளனர். இது ஏனைய பிரதேச விவசாயிகளுக்கு ஒரு எடுத்துக் காட்டாக அமையும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராசசிங்கம் தெரிவித்தார்.
ஆற்றுப்படுக்கைகளை அண்டிய மானாவாரி நெற்காணிகளில் விதை உற்பத்தி மற்றுமு; வர்த்தக ரீதியிலான நிலக்கடலை உற்பத்தி அறுவடை விழா மாவடியோடையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 09.06.2017 இடம்பெற்றது.
கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் வீ. பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவதுளூ
நமது பிரதேசத்தில் விவசாயம் என்றால் பொதுவாக நெற்செய்கையைத்தான் பெரும்பாலானோர் நினைப்பதுண்டு ஆனால் இந்த மாவடியோடை, புத்தம்புரி விவசாயப் பிரதேசங்களில் மாற்றுப் பயிர்ச் செய்கையில் விவசாய புரட்சியே இடம்பெற்றுள்ளது.
இங்குள்ள விவசாயிகள் நெல்லுக்குப் பதிலாக நிலக்கடலை, வற்றாளை, எள் போன்ற பயிர்களை மிக திறம்படப் பயிரிட்டு அமோக விளைச்சல் கண்டுள்ளனர்.
இந்த விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம், பெரிய அளவிலான நீர் இறைக்கும் இயந்திரங்களை வழங்குவதுடன் விவசாயிகளுக்கு திறம்பட சேவை வழங்கக் கூடியவித்தில் விவசாய இயந்திரங்களை கையாளக்கூடிய பயிற்சிகளை விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளார்.
மாற்றுப் பயிர்ச் செய்கையினை இன்னும் விரிவாக்குகின்ற முயற்சிகளிலே எங்களுடைய மாகாண விவசாயத் திணைக்களம் மத்திய அரசின் விவசாயத் திணைக்களத்தோடு சேர்ந்து செயற்படுவது தொடர்பில் இரண்டுமே ஆரோக்கியமான செயற்பாட்டினை காட்டிக்கொண்டிருக்கின்றது.
இந்த வகையிலே மாகாண மத்திய அரசு என்ற பாகுபாடில்லாமல் மத்திய அரசாங்கத்தின் விவசாயம் தொடர்பான எல்லாத் திட்டங்களும் மாகாண அமைச்சினூடாக, மாகாண திணைக்களங்களினூடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்கின்ற விடயத்தை கடந்த ஆண்டு வாத்துவவில் நடைபெற்ற விவசாய அமைச்சர்களுடைய மகாநாட்டிலே விவசாய அமைச்சர் துமிந்த டி சில்வா ஏற்றுக்கொண்டு அதனை அமுல்படுத்த உடன்பட்டிருக்கின்றார்.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக வங்கியினுடைய செயற் திட்டங்கள் நடைபெறுவதற்கான இடங்களை அடையாளப்படுத்துவதற்கான நிகழ்வு நடைபெற்றது அதற்காக வந்திருந்த உலக வங்கியினுடைய உத்தியோகத்தர்கள் வாத்துவை உடன்படிக்கையின பிரகாரம் இரு அமைச்சுக்களும் சேர்ந்து செயற்பட வேண்டும் என்பதைப் பற்றி வலியுறுத்தி;னார்கள்.
ஆனால் இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவதென்பது நிருவாக உத்தியோகத்தர்களுடைய கடமையாகும் இந்த நிருவாக உத்தியோகத்தர்கள் அரைகுறை மனம் உள்ளவர்களாக இருந்தால் அரசியலாளர்கள் மேற்கொள்கின்ற செயற்பாடுகள் முற்றாக மக்களுக்கு பயன்தருவதாக அமைவதில்லை. கிழக்குப் பல்கலைக்கழகம் விவசாய நடவடக்கைகளுக்கு தரும் ஆதரவும் ஒத்துழைப்பும் போதுமானதாக இல்லை. இனி வரும் காலங்களில் அவர்கள் இந்த விவசாய ஆராய்ச்சி உள்ளிட்ட நடவடிக்கையிலே எம்முடன் இணைந்து செயற்படுவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.
யுத்தம் காரணமாக தகர்க்கப்பட்ட விவசாய ஆராய்ச்சி நிலையம் இப்போது புதிதாக அமைத்து வருகின்றோம். இதனால் கிழக்குப் பல்கலைக் கழக விவசாய பீடத்தின் செயற்பாட்டுத் திறன் இதனூடாக அதிகரிக்க வேண்டும்.