இலங்கையில் ஐ எஸ் இருப்பதாகவும் முஸ்லிம்கள் பற்றி பொதுபலசேனா சொல்வது சரியானது எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருப்பதை உலமா கட்சி வன்மையாக கண்டித்திருப்பதுடன் அவ்வாறு ஐ எஸ் இருப்பதாக ஒரு மாத காலத்துள் அவரால் நிரூபிக்க முடியாது போனால் தனது அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்வாரா எனவும் அக்கட்சி சவால் விடுத்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்திருப்பதாவது, சம்பிக்க என்பவர் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சராக உள்ள நிலையில் இலங்கையிலும் ஐ எஸ் அச்சுறுத்தல் உள்ளது என பூச்சாண்டி காட்டுவது அவரது தேசப்பற்றை சந்தேகிக்க வைக்கிறது.
ஐ எஸ் என்ற பெயரை இந்த உலகம் கேள்விப்படுமுன் சுமார் பத்து வருடங்களுக்கு முன் கிழக்கில் முஜாஹிதீன் ஆயுதக்குழு இருப்பதாக கதைகள் கட்டி விட்டு சிங்கள மக்களை பிழையாக வழி நடத்தினார். இன்று வரை கிழக்கில் ஆயுதம் தாங்கிய முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த எவரும் கைது செய்யப்படவில்லை என்பதன் மூலம் சம்பிக்க சொன்னவை பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதன் பின் ஐ எஸ் என்ற பெயர் மத்திய கிழக்கில் ஆட்சி அதிகாரத்துக்காக உருவான போது அந்தப்பெயரை வைத்துக்கொண்டு இப்போது மக்களுக்கு பிசாசு காட்டுகின்றார். நாளை இன்னொரு இயக்கம் பிரபல்யமானால் அதனை இலங்கையுடன் சம்பந்தப்படுத்தி மக்களை வழி கெடுப்பார்.
உலகின் எந்தவொரு பயங்கரவாதமும் இன்னொரு நாட்டில் தாக்குதல் மேற்கொள்ளவில்லை என்றும் ஐ எஸ் மட்டுமே இப்படி செய்கிறது என அமைச்சர் சம்பிக்க சொல்லியிருப்பதன் மூலம் பயங்கரவாதம் என்றால் என்ன, அதன் வரலாறு என்ன என்பது பற்றிய அறியாமையில் இருக்கிறார்.
ஒரு காலத்தில் இந்தியா இலங்கை போன்ற நாடுகளும் வெளிநாட்டு கிறிஸ்தவ பயங்கரவாதத்துக்கு முகம் கொடுத்ததை இவர் மறந்து விட்டார். போர்த்துக்கீசரும், பிரித்தானியரும் இலங்கையை தாக்கி இந்நாட்டை ஆக்கிரமித்தமையை பயங்கரவாதம் என்றில்லாமல் சமாதானப்படை என்றா சொல்லப்போகிறார் என்று நாம் கேட்கிறோம். அவர்கள் பயங்கரவாதிகள் என்பதால்த்தான் இந்நாட்டு தேசிய பற்றாளர்கள் அவர்களுக்கெதிராக ஆயுத ரீதியில் போராடி அவர்களை வெளியேற்றினர். அன்று அவர்கள் செய்ததை இன்று ஐ எஸ் பயங்கரவாதம் செய்கின்றது. அத்துடன் விடுதலைப்புலிகள் இந்தியாவில் அதன் பிரதமரையே குண்டு வைத்து தாக்கியது இவருக்கு தெரியாதா அல்லது இந்தியாவின் ஒரு மாநிலம்தான் இலங்கை என்ற எண்ணத்தில் இருக்கிறாரா?
ஆகவே அமைச்சர் என்ற பதவிக்காக இல்லாத பொய்களை சொல்லி சிங்கள மக்களிடம் ஐ எஸ் பற்றி பயமுறுத்துவது அரசியல் விபச்சாரமாகும். இந்த வகையில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் சம்பிக்க இலங்கை புலணாய்வு பிரிவை பயன்படுத்தி இலங்கையில் உண்மையான ஐ எஸ் ஆயுததாரி ஒருவராவது உள்ளாரா என அவர் நிரூபிக்க வேண்டும். இல்லையேல் அவர் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்வாரா என உலமா கட்சி சவால் விடுகிறது. அதற்காக யாரும் அப்பாவியை கொண்டு வந்து நிறுத்த வேண்டாம் எனவும் கூறுகிறோம்.
பிரபாகரனையே பிடித்த நமது ராணுவத்துக்கும் பொலிசுக்கும் ஞானசாரவை பிடிக்க முடியாது போனாலும் ஒரு ஐ எஸ்சையாவது பிடிக்க முடியாமல் போகாது. ஆனாலும் இல்லாத ஒன்றை பிடிக்கச்சொன்னால் அவர்கள் என்னதான் செய்வார்கள்? என முபாறக் மௌலவி மேலும் தெரிவித்தார்.