“இலங்கை அமைச்சர்களுக்கு, அமெரிக்காவில் மருத்துவச் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான முறைமையொன்று, தயாரிக்கப்படவேண்டும்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிகிச்சைகளுக்காக, அமெரிக்காவுக்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சனிக்கிழமை மாலை 3:45 மணியளவில், இலங்கையை வந்தடைந்தார்.
அவரை, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றனர். அத்துடன் நலம் விசாரித்தனர்.
அங்குவைத்து, கருத்துரைக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
‘ நான், இரண்டு வாரங்கள் விடுமுறையில் இருந்தேன். போக்கும் வழியில், சிங்கபூரில் தங்கியே சென்றேன். அங்கிருக்கும் வைத்திய உபகரணங்கள்- உலகில் எங்குமே இல்லை. சிங்கபூர் அமைச்சர் ஒருவருக்கு, அமைச்சரவையில் வைத்தே, மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது’ என்றார்.
‘அமெரிக்காவில், சகல நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம். அந்தளவுக்கு அங்கு வசதிகள் உள்ளன. எங்களுடைய அமைச்சர்களும், அமெரிக்காவுக்குச் சென்று, சிகிச்சை பெற்றுக்கொள்ளும் முறைமையை ஏற்படுத்தவேண்டும்’ என்றார்.
அப்போது, அங்கிருந்தவர்களில் ஒருவர், அப்படியென்றால், விலாசத்தை தேடிப்பிடித்து கொள்ளவேண்டும் என்று கூறவே, பிரதமர் உள்ளிட்ட சகலரும் சிரித்துவிட்டனர்.
தொடர்ந்து கருத்துரைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு தங்கியிருந்த காலத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டர்ஸையும், பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லேனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியன தொடர்பிலான செயற்பாடுகள் குறித்து இவ்விருவரும், விரிவாக கேட்டறிந்து கொண்டதுடன், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். அந்த வகையில், நாமும் வேலைச்செய்யவேண்டும் என்றார்.