![]() |
கிழக்கு பல்கலைக் கழகம் - மட்டக்களப்பு |
ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
கிழக்கு பல்கலைக் கழகத்தின் 21ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா புதிய வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா வின் பிரசன்னத்துடன் மட்டக்களப்பு-வந்தாறுமூலை வளாக, நல்லையா மண்டபத்தில் ஜுன் 18ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து மாலை வரை நடைபெறவுள்ளதாக அப்பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு, வந்தாறுமூலை மற்றும் திருகோணமலை ஆகிய வளாகங்களைச் சேர்ந்த உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 852 பேர் இதன்போது பட்டம் பெறுகின்றனர்.
முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய நேர அட்டவணைப்படி நான்கு அமர்வுகளாக இந்த பட்டமளிப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைகலாசார பீடம், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம், சித்த மருத்து கற்கைகள் பிரிவு, வணிக முகாமைத்துவ பீடம், விவசாய பீடம், தொடர்பாடல் மற்றும் வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், சுவாமி விபுலாநந்தா அழகிய கற்கைகள் நிறுவனம் ஆகியவற்றில் பட்டப்படிப்பை மேற்கொண்டவர்களே பட்டங்களைப் பெறுகின்றனர்.
அதி கூடிய அளவாக கலை கலாசாரத்துறையில் கற்ற 450 பேரும், வைத்தியத் துறையில் 50 பேரும், வி;வசாயத் துறையில் 11 பேரும் சித்த மருத்துவத் துறையில் 10 பேரும் பட்டம் பெறுகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் இரண்டு நாட்கள் இந்த பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு முதற்கொண்டு அவை ஒரு நாளில் 4 அமர்வுகளாக நடத்தப்பட்டு வருகின்றது.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் வேந்தராகப் பதவி வகித்த பேராசிரியை யோகா இராசநாயகத்தின் பதவிக்காலம் ஏற்கெனவே கடந்த 2016 ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்ததையடுத்து அப்பதவிக்கான வெற்றிடம் நிரப்பப்படாமல் இருந்ததன் காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தினால் கடந்த ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி இடம்பெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த அப்பல்கலைக் கழகத்தின் 21வது பொதுப் பட்டமளிப்பு விழாவும் புதிய வேந்தர் நியமனம் இடம்பெறும் வரை காலவரையறையின்றி பிற்போடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும் போது சம்பிரதாயப்படி அதன் வேந்தர் பிரசன்னமாகியிருக்க வேண்டும் என்பது மரபாகும்.
புதிய வேந்தர் கடந்த 09.05.2017 முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 வருட காலத்திற்குரிய பதவிக்காக பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபார்சில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தார்.