அகமட் எஸ்.முகைடீன்-
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை நகர கிளைக் காரியாலயத்தை இடமாற்றம் செய்வதற்கு நினைத்துக்கூட பார்க்கவில்லை எனக் கூறியதோடு அக்காரியாலயம் எக்காரணம் கொண்டும் இடமாற்றப்படமாட்டாது என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனையில் செயற்பட்டுவரும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நகரக் கிளைக் காரியாலயத்தை மூடும்வகையில் குறித்த காரியாலய முகாமையாளருக்கு பதவி உயர்வு வழங்கி இடமாற்றம் செய்திருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து அம்பாறைக்கு அக்காரியாலயம் இடமாற்றம் செய்யவிருப்பதாகவும் இணையத் தளங்களிலும் முகநூல்களிலும் வெளிவந்துள்ள செய்தி தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவை தொடர்பு கொண்டு வினவியபோது கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் மிகவும் பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவராக சிறுபான்மை மக்களை அரவணைப்பவராக தான் இருப்பதாகவும் ஒருபோதும் கல்முனையில் செயற்படுகின்ற குறித்த அலுவலகத்தை மூடுவதற்கு நினைத்தும் பார்க்கவில்லை என்றும் அலுவலர்கள் இடமாற்றம், பதவி உயர்வு என்பன சாதாரணமான விடயம், அதனை வேற்றுக் கண்கொண்டு நோக்க வேண்டாம் எனவும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, பிரதி அமைச்சரிடம் தெரிவித்ததோடு கல்முனை கிளைக்கு பொறுப்பான முகாமையாளரை மிக விரைவில் நியமிக்குமாறு தனது அதிகார சபையின் தலைவருக்கு பணிப்புரை விடுப்பதோடு குறித்த கிளையினை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையினை எடுப்பதாகவும் கூறினார்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை நகர கிளை தொடர்பில் வெளிவந்துள்ள செய்தி பொய்யானதாகும். செய்திகளை வெளியிடுகின்ற போது பொறுப்புவாய்ந்தவர்களுடன் தொடர்பு கொண்டு பூரண விபரங்களை அறிந்தபின் செய்திகளை வெளியிடவேண்டும். வெறுமனே யூகங்களை செய்தியாக வெளியிட்டு மக்களை குழப்புவது தவிர்க்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாகவும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளதனால் குறித்த விடயம் தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.