பாறுக் ஷிஹான்-
வலி வடக்கு தையிட்டி பகுதி கிணற்றிலிருந்து கைக்குண்டுகள் உட்பட அதிகளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. தையிட்டி அரசடிப்பிள்ளையார் கோயிலை அண்மித்துள்ள காணி ஒன்றைத் துப்புரவு செய்யும் பணி இடம்பெற்ற நிலையில் நேற்றுக் குறித்த காணியிலுள்ள கிணற்றை உரிமையாளர் இறைத்துச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதற்குள் இறங்கியவர்கள் பெட்டிகள் பலவற்றை அவதானித்துள்ளனர்.
அத்துடன் கிணற்றில் காணப்பட்ட அந்தப் பெட்டிகளில் சில உடைந்து அவற்றிலிருந்த கைக்குண்டுகள் உட்பட சில ஆயுதங்கள் வெளியே தெரிந்துள்ளன. அது தொடர்பில் காணி உரிமையாளரினால் காங்கேசந்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
பின்னர் அங்கு வந்த பொலிஸார் கிணற்றை பார்வையிட்டதன் பின்னர் கிணற்றில் உள்ள கைக்குண்டுகள் இன்னும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன என்றும் அங்குள்ள இன்னும் பல பெட்டிகளை மீட்டு ஆராய வேண்டும் என கூறி விசேட அதிரடிப் படையினரின் உதவியை நாடினர்.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு விரைந்த அதிரடிப்படையினரால் கிணற்றில் இருந்து 20 பெட்டிகள் மீட்கப்பட்டன. அந்த பெட்டிகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் 300 கைக்குண்டுகள் 40 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் 31 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 41 இருப்பது கண்டறியப்பட்டன. தற்போது மீட்கப்பட்ட அந்த வெடிபொருள்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் பாதுகாப்பான முறையில் செயலிழக்கம் செய்வதற்காக எடுத்து செல்லப்பட்டன.




