கட்டுரையாளார் நிலாமுடீன் -
நமது சமூகத்தினை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும் தொற்று நோய்களில் பன்றிக்காய்ச்சலும் ஒன்றாகும். அண்மைக்காலமாக இந்நோயினால் பீடிக்கப்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே.....நேற்று திருகோணமலையில் 2 பேர் பன்றிக் காய்ச்சல் மூலம் மரணமடைந்து விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மறுபுறம் இலங்கையில் இன்னும் 6 மாதங்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரவக்கூடிய நிலை உள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .அதனால் பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன அதன் தாக்கம் என்ன இந்த நோய் எங்கிருந்து யாரால் யாருக்கு எப்படி ஏற்படுகின்றது அதன் அறிகுறி என்ன என்பது குறித்து மக்கள் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசர தேவை வந்துள்ளது. பன்றிக் காய்ச்சல் குறித்த முழு விபரங்களை டாக்டர் மாசாத் இங்கு தெரிவித்துள்ளார்.
பன்றி காய்ச்சல் என்றால் என்ன
பன்றிக் காய்ச்சல் என்பது ஒரு வகை வைரஸ் காய்ச்சலாகும்.இது இன்புளுவன்ஸா (Influenza) வகை வைரஸ் கிருமியினால் ஏற்படும் ஒரு வகை சுவாச நோயாகும்.இன்புளுவன்ஸா வைரஸ் கிருமிகள் ஜந்து வகைகள் உள்ளன.அதில் H1 N1 என்பதே பன்றிக் காய்ச்சல் வைரஸ் ஆகும்.
பன்றிக் காய்ச்சலானது 1918 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் முதன் முதலாகப் பரவியது. இது ஆரம்ப காலத்தில் பன்றிகளில் இருந்து பன்றிகளுக்குப் பரவியது. பின்னர் பன்றிகள் கோழிகளில் இருந்து மனிதனுக்குப் பரவியது. தற்போது மனிதர்களிலிருந்து மனிதர்களிற்கு பரவி வருகின்றது.
பன்றி காய்ச்சல் யாருக்கு பரவும்
பன்றிக் காய்ச்சல் ஏற்பட்ட ஒருவர் இருமும் போது அல்லது தும்மும் போது மூக்குத் திவளைகளிலிருந்து வைரஸ் கிருமியானது மற்றவரை சென்றவடைவதன் மூலமாகப் பரவுகின்றது.
இதன் தாக்கத்திற்கு உள்ளாக்கப்படக் கூடியவர்கள் கூடுதலாக கர்ப்பவதிகள், 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 65 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள், நாள்ப்பட்ட நோய்நிலையால் பாதிக்கப்பட்டோர் (அதாவது நாள்ப்பட்ட சிறுநீரக வழுவல், நுரையீரல் நோய் , நாள்ப்பட்ட ஈரல் நோய் , இருதய நோய் போன்றன) மற்றும் நீர்ப்பீடன சக்தி குறைந்தோர் (கசநோயாளர் புற்று நோயாளர்) ஆவர்.
பன்றி காய்ச்சல் அறிகுறிகள்
பன்றிக் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டவர்களிற்கு உரிய அறிகுறிகள் காய்ச்சல், தொண்டை நோ, மூக்கால் நீர்வடிதல், சளித்தொல்லை , சோர்வு, தாங்க முடியாத உடல்வலி, பசியின்மை, வாந்தி, வயிற்றுப் போக்கு இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். மயக்கம் ஏற்படலாம்.காய்ச்சல் பற்றிக் குறிப்பிட்டு சொல்லுவதாயின் முதல் 5 நாட்களிற்கு சாதாரண காய்ச்சல் போன்றிருக்கும் பின்னர் காய்ச்சல் கடுமையாகும்.
பன்றிக் காய்ச்சல் தொற்றுக்குள்ளானவர்களை A,B,C என்ற மூன்று பிரிவினராக வகைப்படுத்தலாம்.
A - பிரிவினர் - சாதாரண சளி சுரத்துடன் காணப்படுவர்.
B - பிரிவினர் - சளி சுரத்துடன் தொண்டை நோவாலும் அவஸ்தை உறுவர்.
A, B பிரிவினர் வெளிநோயாளராக அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர் ஆலோசனைப்படி சிகிச்சை மேற்கொள்ள முடியும். விடுதியில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை.
C - பிரிவினர் - இவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துச் சிகிச்சையளிக்கப்பட வேண்டியவர்கள். இப்பிரிவினருக்குரிய குணங்களாக
சிறுவர்களிற்கு ....
வேகமாக சுவாசித்தல்/ சுவாச சிரமம், தோல் நீல நிறமடைதல், நீராகாரம் போதியளவு, உள்ளெடுக்காமை,சோர்வாக இருத்தல்.அசௌகரியமாக இருத்தல் / சினத்தல்.தோலில் சிவப்பு நிற புள்ளிகள் ஏற்படல்.
பெரியவர்களிற்கு.....
சுவாச சிரமம்.மார்பு /வயிற்றுப்பகுதியில் வலி /அழுத்தமான உணர்வு.திடீர் மயக்கம்.தடுமாற்றம்.,கடுமையான வாந்தி. மேற்குறிப்பிட்ட குணங்களுடன் காணப்படின் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்படல் வேண்டும். பன்றிக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களிற்குரிய சிகிச்சைகள் அவர்களிற்குரிய குணங்குறிகளிற்கு ஏற்ப அமையும்.
சிகிச்சைகள்
ரமிபுளு (Tamiflu) என்ற மாத்திரை இவர்களிற்கு சிகிச்சையாக அளிக்கப்படுகின்றது.
தொண்டை நோவிற்கு மிதமான சூடான உப்புக் கலந்த நீரினால் அடிக்கடி கொப்புளித்து வரின் தொண்டை நோ படிப்படியாகக் குறையும். பானங்கள் அடிக்கடி உள்ளெடுப்பதன் வாயிலாகவும் தொண்டை தீவிரத்தன்மையை குறைத்துக் கொள்ளலாம்.
தினமும் குறைந்த பட்சம் 10 குவளை நீராவது உள்ளெடுக்க வேண்டும்.
பரிசோதனை
பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நோய் நிர்ணயம் செய்ய அவர்களின் தொண்டை மற்றும் மூக்குத்துவாரங்களில் பஞ்சுத்தூரிகையினால் (Swap Culture) மாதிரி எடுத்து ஆய்வு கூட பரிசோதனையினூடாக H1N1 கிருமியிருப்பதைக் கண்டறியலாம்.
எப்படி மற்றவருக்கு தொற்றும்
பன்றிக் காய்ச்சல் பரவக் கூடிய காலப்பகுதியானது பன்றிக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான ஒருவரின் அறிகுறி தென்படுவதற்கு ஒரு நாள் முதலிருந்து நோய்வாய்ப்பட்ட ஏழாம் நாள் வரைக்கும் மற்றொருவரிற்கு இந்நோயானது தொற்றும்.
எப்படி தடுக்கலாம்
பன்றிக் காய்ச்சல் நோய் வராமல் தடுக்க கீழ்வரும் சுகாதார பழக்கவழக்கங்கள் கையாளுவதனூடாக நோய்த்தாக்கத்திலிருந்து நம்மையும் நமது சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பன்றிக் காய்ச்சல் தொற்றுக்குள்ளானவருடன் நெருங்கிப் பழகுதலை தவிர்த்தல். ஏறத்தாழ ஒரு மீற்றர் இடைவெளி இருத்தல் வேண்டும்,பாதிக்கப்பட்டவரிற்கு முகமூடி அணிதல்; பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிப் பழகவேண்டிய சந்தர்ப்பத்தில் பராமரிப்புக் கொடுப்பவரும் முகமூடி அணிதல், நோய்வாய்ப்பட்டவர் இருமல் தும்முதலின் போது கைக்குட்டை ரிசு பாவித்தலை பழக்கத்தில் கொண்டு வரல். பாவித்த ரிசுவை முறையான விதத்தில் வெளியகற்றல்.கைக்குட்டையை சவர்க்காரமிட்டுக் கழுவி சூரிய வெளிச்சம் நேரடியாகப் படக்கூடியவாறு உலரவிடல்.இருமல் தும்மல் ஏற்படுகையில் உள்ளங்கையால் மறைத்தபடி இருமுதல் தும்முதல். பின்னர் நன்கு கைகளைச் சவர்க்காரமிட்டு கழுவுதல் .அற்ககோல் திரவமிருப்பின் கைகளுவுவதற்றுகு பதிலாக அதனைப் பயன்படுத்தல்.
தவிர்த்தல்
தேவையற்று பன்றிக்காய்ச்சல் தாக்கத்திற்குள்ளானவர்களை பார்வையிடலை தவிர்க்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் கர்பவதிகள் மற்றும் முதியோர்கள் இயன்றவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவர்களின் இலகுவில் நோய்க்கத்திற்கு உள்ளாகக்கூடிய பிரிவினர் ஆவர்.நோய்த்தாக்கத்திற்கு உள்ளானவர்களைத் தனிமைப்படுத்தல் இயன்றவரை பொது இடங்கள் சனநெருக்கடியான இடங்கள் மாணவர்கள் எனின் பாடசாலை செல்வதைத் தவிர்த்தல்.வீட்டில் குணம மடையும் வரை ஓய்வாக இருத்தல். மற்றவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்க ஏதுவாக அமையும். வெளியிடங்களிற்கு சென்று விட்டு வந்த பின் கை கால், முகம், கழுத்துப் பகுதிகளை நன்கு சவர்க்காரமிட்டு ஓடும் நீரில் கழுவுதல்.