கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப்பின் தெற்காசிய பிராந்தியத்தியத்திற்கான பணிப்பாளர் ஜீன் கப் (JEAN GOUGH) உட்பட அவரது பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்,
இதன் போது கிழக்கு மாகாணத்தில் வறுமை காரணமாக இடை விலகிய மாணவர்கள் மற்றும் போர்சூழல் காரணமாக விதவையாக்கப்பட்டவர்களின் சிறுவர்கள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் யுனிசெப் பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்,
குறித்த சிறுவர்களுக்கு கல்வி வழங்குவதற்கான திட்டங்களை வகுப்பதற்கு யுனிசெப் நிதியுதவி வழங்க வேண்டுமென கிழக்கு முதலமைச்சர் இதன் போது யுனிசெப்பின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜீன் கப்பிடம் வேண்டுகோள் விடுத்தார்,
வறுமை காரணமாக பாடசாலையிலிருந்து இடைவிலகும் சிறுவர்கள் வழி தவறிச் சென்று போதை பாவனை போன்ற பல கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடிய சந்தரப்பம் உள்ளதெனவும் அவர்களுக்கு கல்வி கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் ஊடாக சிறந்த பிரஜைகளை இந்த நாட்டிற்கு உருவாக்கிக் கொள்ளக் கூடிய சாத்தியம் இருக்க என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்,
இதேவேளை மத்திய அரசு மாகாணங்களுக்கு போதிய அதிகாரங்களை வழங்கும் பட்சத்தில் மாத்திரமே மக்களுக்கு ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை விரைவில் வழங்க முடியுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதன் போது சுட்டிக்காட்டினார்,
அத்துடன் இலங்கையில் சிறுபான்மையினரின் மத மற்றும் கலாசார நடைமுறைகளுக்கு தற்போது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து யுனிசெப் அரசாங்காத்திடம் வலியுறுத்திக் கூற வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் பல நாட்களாக வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை கிழக்கின் வெற்றிடங்களுக்கு உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இதற்கு சாதகமான முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்,
அத்துடன் கிழக்கில் புதிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் விதமான தொழிற்துறைகள் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட வேண்டுமெனவும் கிழக்கு மாகாணத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தொழில்வாய்ப்பின்றி இருக்கும் நிலையில் அவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.