மட்டக்களப்பு கல்குடாப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மது உற்பத்திச்சாலை ஊழியர்களால் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை 25.03.2017 காலை 9 மணிக்கு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா. கிருஸ்ணகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை 24.03.2017 வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊடகவியலாளர்கள் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக செயற்படுத்தும் நிலைமை உருவாக்கப்படவேண்டும்,
தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளின் நிர்மாண வேலைகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆகிய மூன்று பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தக் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஊடகவியலாளர்களையும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும், சமூக ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அழைப்பு விடுக்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.