அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த நோயாளியை இம்மாதம் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எச்.எம்.ஹம்ஸா இன்று (01) உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை. மனையாவெளி பகுதியைச்சேர்ந்த எஸ்.புஸ்பகுமார (47வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நெஞ்சு வலி காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் 17ம் களத்தில் சிகிச்சை பெற்று வந்த இவர் நோயாளர்கள் பார்வையிடும் நேரத்தில் வைத்தியசாலைக்கு வெளியில் சென்று ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 அழைப்பு விடுத்து தெரிவித்ததுடன் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இதேவேளை நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தவரை சோதனையிட்ட போது ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள நோயாளி சிறைச்சாலை காவலாளி பாதுகாப்பில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
