இது மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். தந்தை செல்வநாயகம் அன்று அகிம்சைவழி போராட்டம் நடத்தியபோதும் வெற்றி கிடைக்கவில்லை, அதே நேரம் திலீபனின் உண்ணாவிரத போராட்டமும், அன்னை பூபதியின் உண்ணாவிரத போராட்டமும் கூட யாரினாலும் அன்று கண்டுகொள்ளப்படவில்லை.
ஆனால் கோப்பாவுல மக்களின் அகிம்சை வழி போராட்டம் இன்று வெற்றிகண்டுள்ளது, அந்த வெற்றியை தொடர்ந்து, தமிழ் அரசியல்வாதிகளினால் பெற்றுத்தர முடியாமல் போன பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தமிழ் மக்கள் இந்த வழியைத்தான் இனி பின்பற்றப்போகின்றார்கள்.
அதே நேரம் இந்த போரட்டத்தின் காரணமாகத்தான் காணிகளை அரசாங்கம் விடுவித்தது என்று சிங்கள மக்கள் என்னுவார்கள் என்றால், அந்த என்னம் இந்த அரசாங்கத்துக்கு பெரியதொரு பின்னடைவை ஏற்படுத்தலாம்.
மக்களின் நியாயமான பல போராட்டங்கள் முன்னய காலங்களில் அரசாங்கங்களினால் திட்டமிட்டே அடக்கப்பட்டுள்ளன, காரணம் அவர்களின் போராட்டத்துக்கு பயந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால், மற்றவர்களும் இதனை பின்பற்றுவார்கள். அதனால்தான் அவர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும், அரசாங்கங்கள் அந்த போராட்டங்களுக்கு இந்த காரணங்களுக்காகவே இடம்கொடுப்பதற்கு அனுமதிப்பதில்லை.
அதன் காரணமாகவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல அகிம்சை வழி போராட்டங்கள் தோல்வியை தழுவிய வரலாறுகளும் இருக்கின்றன. அந்த வகையில் கோப்பாவுல மக்களின் அகிம்சைவழி போராட்டத்துக்கு அரசாங்கம் தலைசாய்த்த விடயம், போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாக இருந்தாலும், மறுபக்கம் சிங்கள அரசாங்கங்கள் எதிர்வரும் காலங்களில் மிகப்பெரியதொரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படக்கூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.
காணிப்பிரச்சினைகள், காணாமல்போனோர் விடயம், யுத்தக்குற்ற மீரல்கள் என பல விடயங்களை அகிம்சை வழி போராட்டங்கள் மூலம் மக்கள் கேட்கத் துவங்கினார்கள் என்றால், அதனை அரசாங்கம் வன்முறையை கொண்டு அடக்கிவிடவும் முடியாது, தமிழ் மக்கள் ஆயுதபோராட்டங்களின் மூலம் பெறமுடியாத விடயங்களை, அகிம்சைவழி மூலமாக பெற்றுக்கொள்வதற்கு இந்த வெற்றி அவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை எனலாம்.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் அகிம்சைவழியில் போராடியபோது அவர்களுக்கு அடியும் உதையும்தான் பதிலாக கிடைத்தது, ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல உலகநாடுகள் இலங்கை பிரச்சினையை உன்னிப்பாக கவணித்துக் கொண்டிருப்பதாலும், ஐ.நா. சபையில் இலங்கை பிரச்சினை விவாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதனாலும் அவர்களின் அகிம்சைவழி போராட்டத்தை வன்முறையை கொண்டு அடக்க முயற்சிக்கவும் முடியாது, முன்னய காலங்களில் இப்படியான சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு கிடைத்திருக்கவில்லை,
பலஸ்தீன பிரச்சினை எப்படி இன்று பேசும்பொருளாக இருக்கின்றது என்றால், அதற்கு காரணம் ஐ.நா சபையின் கவணம் அவர்களின் மேல் இருப்பதுதான், அந்த வகையில் இலங்கை பிரச்சினையும் ஐ.நா. சபையின் கவனத்தில் இருப்பதனால் தமிழ் மக்களின் அகிம்சை வழி போரட்டத்துக்கு இனிமேல் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கத்தான் போகின்றது, அதேநேரம் சிங்கள அரசாங்கமும் அதற்கு பதில் கூறியே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும்.
எம்.எச்.எம்.இப்ராஹிம்,
கல்முனை.
