கடந்த காலக் காத்தான்குடி..!

கடந்த காலக் காத்தான்குடி
++++++++++++++++++++++

எண்பதின் தொடக்கத்தில் இங்கிருந்த
பண்பாடு பழக்கங்கள் நடைமுறைகள்
இன்று மாறி மறைஞ்சிடுச்சு
எழுத்தில் சிலதைத் தருகின்றேன்


காட்டுத் தேங்காய் மரத்துக்கு
கல்லால் அடிக்கும் இளைஞர்கள்
கூட்டம் கூட்டமாய் சேர்ந்து நின்று
குண்டு விளையாடும் சிறுவர்கள்
வீட்டுக் கேற்றின் ஓட்டையினால்
வேடிக்கை பார்க்கும் தாவணிகள்
ஓட்டோ இன்றிப் பாதைகளின்
ஓரமாய் நடக்கும் மூத்த பெண்கள்
எண்பதில் இங்கே கண்ட காட்சி
இப்போது எங்கோ ஓடிப் போச்சி.

கிறவல் போட்ட வீதிகளில்
கிட்டிப் புள் ஆடும் சிட்டுக்கள்
இரவில் இருளில் டோச் அடித்து
பறவை பிடிக்கும் பழக்கங்கள்
கறவைப் பசுக்கள் வளர்ப்பவரிடம்
காலையில் வாங்கிய பால் போத்தல்
இருந்த வழக்கம் மாறிடுச்சு
மறந்து மாறிப் போயிடுச்சு.

மைய வாடிக் காட்டுக்குள்ளே
மணிக்கூட்டுப் பட்டம் ஏற்றுவதும்
வெய்யில் கூடிய வேளையிலே
வேப்பையின் கீழே இருப்பதுவும்
கையால் பின்னிய கதிரைகளும்
கரத்தையில் பூட்டிய மாடுகளும்
மெய்யாய் இப்போ காணவில்லை
ஐயா எல்லாம் மறைஞ்சிடுச்சு

குட்வின் மார்கட் சந்தையிலே
குவியல் விலை மீன் விற்றதுவும்
நெட்டை பனையின் நிழலின் கீழ்
நீண்ட கதைகள் பேசியதுவும்
குட்டையில் நிற்கும் வெள்ளத்தில்
கூடி மீன்கள் பிடிப்பதுவும்
வெட்டை வெளியில் மேடை கட்டி
வில்லுப் பாட்டு படிப்பதுவும்
முற்றாக இன்று மாறிடுச்சு
முகவரி இன்றிப் போயிடுச்சு.

ஆல ஊடு உள்ளூடு
அதற்கு முன்னால் மண்டபம்
மூலையில் குசினி அமைந்திருக்கும்
முன்னால் ஹோலில் மரக் கப்பேர்ட்
மேலே மாடி கிடையாது
மிகப் பெரும் முதலாளி வீடெனினும்
ஏழை கட்டும் வீடெனினும்
இந்த டிசைனை மாற்றமாட்டார்.

வீட்டுக்கு வீடு சைக்கிலிருக்கும்
வார்ட்டுக்கும் டவுனுக்கும் போவதென்றால்
ரோட்டில் ஓடும் ருக்மணியில்
ரொம்ப நெருங்கி தொங்கிச் செல்வார்.
மேற் 50 சீடி 50 
மேலதிக செல்வம் உள்ளோர்க்கு
இந்தியன் பைக்கள் வந்த பின்னால்
இந்த முறைகள் மாறிடுச்சு.

இன்னும் இருக்கு எழுதுவதற்கு
இன்ஷா அள்ளாஹ் தொடர்கின்றேன்...
முஹம்மட் நிலூஷ்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -