தற்போது நடைபெறுகின்ற நல்லாட்சியில் நிலவும் குறைபாடுகள் களையப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதம் சனிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
இந்த ஆண்டு விளையாட்டு அமைச்சின் மூலம் திருகோணமலை மாவட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக சுமார் 55 மில்லியன் ரூபா ஒதுக்கப் பட்டுள்ளதாக அறிகின்றேன். இது எமது மாவட்டத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்ற வகையில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
எனினும் நமது நல்லாட்சியில் சில குறைபாடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது களையப்பட வேண்டும். இந்த ஆட்சியின் பங்குதாரர்களாக இருக்கின்ற கட்சிகளைச் சேர்ந்த சில அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நாட்டின் அபிவிருத்தி வேலைகளை அவர்கள் சார்ந்த கட்சி அபிவிருத்தி வேலைகளாக கருதிச் செயற்படுகின்றனர்.
அவர்கள் சார்ந்த கட்சிக்காரரின் வேண்டுகோளை மட்டும் ஏற்று செயற்படுவது இப்படியான அபிவிருத்தி வேலைகள் நடைபெறும் போது எங்களைப் போன்றோரைப் புறக்கணிப்பது போன்ற பொருத்தமற்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றன. இவை களையப்பட வேண்டும்.
விளையாட்டுத் துறையைப் பொறுத்த வரையில் தேசிய மட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளில் திருகோணமலை மாவட்டம் மகத்தான பங்கு வகித்து வருகின்றது. பல தேசிய மட்ட வெற்றிகள் திருகோணமலை மாவட்டத்திற்கு கிடைத்து வருகின்றன. எனினும் சகல வசதிகளும் கொண்ட சரியான விளையாட்டு மைதானம் திருகோணமலை மாவட்டத்தில் இல்லை. இது பாரிய குறைபாடாகும். இது குறித்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
கிண்ணியா எழிலரங்கு மைதானம் கடந்த 4 வருடங்களாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. எனினும் இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன? கொந்தராத்து வேலைகளை முன்னெடுப்பவர் யார்? எந்த அடிப்படையில் கொந்தராத்து வழங்கப்பட்டது என்பன போன்ற தகவல்களைப் பெற முடியாத நிலை உள்ளது.
இது கிண்ணியா நகரசபைக்கு சொந்தமான மைதானமாக இருந்தாலும் அங்கு இது பற்றிய எந்த தகவலும் இல்லை. பிரதேச செயலகம்ää கச்சேரிää உள்@ராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் போன்ற இடங்களில் கூட இதன் தகவல் இல்லை. இது நல்லாட்சிக்குப் பொருத்தமானதல்ல. கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் இப்படியான குறைபாடுகளைப் போக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த எழிலரங்கு மைதானம் எனது தந்தை முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹ_ம் எம்.ஈ.எச்.மகரூப் அவர்களால் உருவாக்கப்பட்டது. எனினும் அவர் இந்த மைதானத்திற்கு அவரது பெயரைச் சூட்டவில்லை. எழிலரங்கு என்று பொதுவான பெயரையே சூட்டினார். ஆனால் இன்று யாருக்கும் தெரியாது தனிப்பட்ட ஒருவரின் பெயர் அந்த மைதானத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இது ஒரு அரசியல் நாகரீகமாகத் தெரியவில்லை. இது போன்ற செயல் மிகவும் கவலையைத் தருகின்றது. நல்லாட்சியில் இது போன்ற குறைபாடுகள் இடம்பெறக் கூடாது எனக் கெட்டுக் கொன்கிறேன். என கூறினார்.
