புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு, கிழக்கு மீண்டும் இணைக்கப்பட மாட்டாது

புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட மாட்டாதென்றும் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் மீன்பிடித்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கியே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமே தவிர எவரும் நினைத்தப்படி இதில் மாற்றங்களை செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நாடு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுவிடுமென ஒரு சிலர் புரளியை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதில் எவ்வித உண்மையும் இல்லை.புதிய அரசியலமைப்பின்படி நாடு ஒன்பது துண்டுகளாக பிரிக்கப்படமாட்டாது. வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்பட மாட்டாது.அரசாங்கம் ஒருபோதும் "பெடரெல்" முறையை அறிமுகம் செய்யாது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தப்பட மாட்டாது. இதை மக்கள் நம்ப வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மாத்தறை கோட்டேகொட பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அமைச்சர் தொடர்ந்தும் கூறியதாவது:

மீன்பிடி அமைச்சு என்பது நாட்டுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டித் தரும் அமைச்சாகும்.இருந்தாலும் கடந்த பல தசாப்தங்களாக திறமையற்ற அதிகாரிகளால் எந்தவொரு அரசாங்கத்தாலும் இதனை சரியான முறையில் செயற்படுத்த முடியாமல் போனது. உதாரணமாக இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் 1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் ஒருபோதும் இலாபம் அடைந்திருக்கவில்லை. இதன் காரணமாகவே அதனை மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனினும் எமது அதிகாரிகளின் முயற்சியால் இந்த டிசம்பர் மாதம் முதற்தடவையாக இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் இலாபம் அடைந்துள்ளது.

மீனவ சமூகம் இல்லாவிடில் மீன்பிடி அமைச்சுக்ேகா மீன்பிடிக் கூட்டுதாபனத்துக்ேகா வேலையில்லை. அதனால் நாம் மீனவ சமூகத்தினருக்கு உதவி செய்ய வேண்டும். அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். அவர்களை அலட்சியப்படுத்துவதற்கு எந்தவொரு அதிகாரிக்கும் உரிமை இல்லை.

தற்போதைய அரசாங்கம் குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றனர். அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய அரசியலமைப்புக் குறித்தும் பலர் விமர்சனம் செய்கின்றனர். குறைகூறும் பலர் இந்த அரசியலமைப்பை கண்ணாலும் கண்டதில்லை என்றும் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -