சொத்துக்களை வெளியிடாத கட்சிகளுக்கு ஆப்பு..!!

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த அறிவிப்புக்களை கையளிக்காத அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

நாட்டில் 64 அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ள போதும், இதில் இரண்டில் மூன்று பங்கான அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கடந்த வருடத்துக்கான தமது சொத்து மற்றும் பொறுப்புப் பற்றிய தகவல்களை வழங்கவில்லை.

இவ்வாறு சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய அறிவிப்புக்களை வழங்காதவர்களில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். "தேர்தல்கள் ஆணைக்குழுவானது சகல அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த அறிவிப்புக்களை பெற்றுக் கொள்ளவேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது. நாட்டில் 64 அரசியல் கட்சிகள் உள்ளன. இவற்றில் 50 அரசியல் கட்சிகள் தமது சொத்து மதிப்புக்களை சமர்ப்பிக்கவில்லை" என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறானவர்களில் யாராவது பாராளுமன்றத்துக்கு தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்தவேண்டியுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ கையளிப்புக்கள் பற்றி பாராளுமன்றம் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், அரசியல் கட்சிகள் சார்பில் இன்னமும் இந்தத் தகவல்களை வழங்காதுள்ளவர்கள் யார் என்பதை குறிப்பிட்டுக் கூறமுடியாது என்றும் அவர் தெரிவித்தார். பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் சொத்து மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்களை சமர்ப்பித்துள்ளனர். எஞ்சியவர்கள் தமது விபரங்களை வழங்கவில்லை.

அதேநேரம், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய தகவல்களை கையளிக்காமலிருப்பது இலஞ்ச மோசடி விசாரணைச் சட்டத்தின் கீழ் குற்றமாகுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

இது இவ்விதமிருக்க, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வழங்காத அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக்குழு செல்வதை வரவேற்பதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பான "கபே" அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.

பொது மக்களின் பிரதிநிதிகள் என்ற ரீதியில் நிதி ரீதியாக அவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனரா இல்லையா என்பதை அறிவதுடன், அவர்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட அதிகாரங்களை துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்குகின்றனரா என்பதை உறுதிபடுத்தவே அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளிடமிருந்து சொத்து மற்றும் பொறுப்பு உறுதிப்படுத்தல் பத்திரம் கோரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சகல பொதுமக்கள் பிரதிநிதிகளும் தமது சொத்துக்களை வருடாந்தம் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணையாளரிடமும் முன்வைக்க வேண்டும் எனவும் அவர் விளக்கமளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -