எஸ்.அஷ்ரப்கான்-
முஸ்லிம் சமுதாயம் மஹிந்தவின் விடயத்தில் ஒன்றுபட்டது போல் மீண்டும் ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அநியாயங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடும்போது,
ஞானசார தேரரினதும் ஏனைய இனவாத சக்திகளினதும் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள்தான் கடந்த அரசை தூக்கிவீச ஏனைய சிறுபான்மைகளுடன் முஸ்லீம்களும் ஒன்றுபட்டதாகும். இந்நாட்டில் சகலரும் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை புதிய ஆட்சி தோற்றுவிக்கும்; என்று எல்லோரும் நம்பினோம்.
புதிய ஆட்சி தோற்றுவிக்கப்பட்டதும் இனவாதிகளும் பெட்டிப்பாம்பாய் சில காலம் அடங்கியிருந்தார்கள். சிறுபான்மையின் தயவினால் உருவான புதிய ஆட்சி தம்மை என்ன செய்யுமோ? என்ற அச்சம் அவர்களுக்கு இருந்தது. புதிய ஆட்சி அவர்களை எதுவும் செய்யவில்லை . புதிய ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கின்ற நம்மவர்களும் இந்த இனவாதிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுமில்லை. அதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கவுமில்லை. எனவே நாட்கள் செல்லச் செல்ல இனவாதிகள் தமது கைவரிசையை காட்ட ஆரம்பித்தார்கள் . இன்று அது மஹிந்தவின் காலத்தில் இருந்ததைப் போன்ற ஓர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கின்றது.
ஞானசாரர் வழைமையான பாணியில் இஸ்லாத்தை தொடர்ச்சியாக அவமதித்துக் கொண்டிருக்கின்றார். அவருக்கெதிராக பல சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்களாலும் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு அவரது பேச்சு அடங்கிய ஒலி, ஒளி நாடாக்களும் சமர்ப்பிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே முறைப்பாட்டாளர் பட்டியலில் தற்போது அமைச்சர்களும் பெருந்தலைவர்களும் இணைந்து கொண்டிருக்கின்றார்கள் .
ஒருவர் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு யாராவது பொலிசில் முறைப்பாடு செய்யவேண்டியது அவசியமாகும். அந்த முறைப்பாட்டைப் பலர் செய்துள்ளார்கள். குறிப்பாக அரசாங்கத்தை நேரடியாக கேள்விக்குட்படுத்துகின்ற அதிகாரமில்லாத சமூக அமைப்புக்கள் தங்களால் செய்யக் கூடியதான முறைப்பாட்டை ஏற்கனவே செய்திருக்கின்றார்கள். ஆனால் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் ? அவர்களுக்கு அதிகாரமில்லை என்பதாலா? அல்லது பொது அமைப்புகளோ அல்லது தனிநபர்களோ செய்கின்ற முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது, அமைச்சர்கள் முறைப்பாடு செய்தால்தான் நடவடிக்கை எடுக்கலாம் ; என ஏதும் சட்டம் இருக்கின்றதா? ஏன் பொலிசார் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றார்கள் . ஏனெனில் நடவடிக்கை எடுப்பதற்கு மேலிடம் அவர்களை அனுமதிக்கவில்லை, என்பது மிகத்தெளிவானதாகும்.
ஒரு மதகுரு ஒரு சிங்களவருக்கெதிராக ஒரு குற்றம் புரிகின்றபோது யாரிடமும் கேட்காமல் நடவடிக்கை எடுக்கின்ற பொலிசார் , அதே மதகுரு முஸ்லிம்களுக்கெதிராக குற்றம் புரிகின்றபோது செயற்பட மறுப்பதேன்? இந்த இடத்தில்தான் மேலிடம்தான் பொலிசாரை செயற்பட விடாமல் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது, என்பது தெளிவில்லையா? இந்நிலையில் அமைச்சர்கள் முறைப்பாடு செய்தால் மட்டும் நடவடிக்கை எடுத்துவிடுவார்களா?
சமூகத்திற்கு பாதிப்பு
மாறாக, இந்த முறைப்பாடுகளால் சமூகம் எதிர்நோக்கும் பாதிப்புகளென்ன? இந்நாட்டில் 99 வீதத்திற்கு மேற்பட்ட சிங்கள மக்கள் ஞானசார தேரரையோ ஏனைய இனவாதிகளையோ ஏற்றுக்கொள்ளவில்லை; என்பது எல்லோருக்கும் தெரியும். இந்நிலையில் அமைச்சர்கள் இவ்வாறான முறைப்பாடுகளைச் செய்து அதை அரசியல் ஆதாயத்திற்காக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துகின்றபோது அதை இனவாதிகள் சிங்களமக்களுக்கு மத்தியில் கொண்டு சென்று சிங்கள மக்களை தட்டி எழுப்புகின்ற வேலையைச் செய்யலாம். ஏற்கனவே கண்டியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆட்சேர்பதற்கு தங்களது பெயர்களை பிழையாக பயன்படுத்தியதாக முறையிட்ட சில முஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாறான முறைப்பாடுகளைச் செய்து அதற்கு விளம்பரமும் கொடுப்பதன் நோக்கமென்ன?
ஒரு புறம் இவர்கள் முறைப்பாடு செய்துவிட்டார்கள்; என்பதற்காக பொலிசார் நடவடிக்கை எடுக்கப்போவதுமில்லை. மறுபுறம் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்ததுபோல் ஞானசாராவைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்ற சிங்கள மக்களை தட்டி எழுப்பிவிடுகின்ற வேலையைத்தான் அது செய்யப் போகின்றது . அதாவது உதவி எதுவுமில்லை ஆனால் உபத்திரவமாய் முடியப்போகின்றது. வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசியல்
விளம்பரம் கிடைக்கும்.
இவர்கள் செய்ய வேண்டியதென்ன?
இன்றைய அரசாங்கம் சிறுபான்மையில் தங்கி இருக்கின்றது . ரணில் மைத்திரியின் காலை வாருவாரா? அல்லது மைத்திரி ரணிலின் காலை வாருவாரா ? என்ற நிச்சயமற்ற தன்மையில் தள்ளாடுகின்ற அரசு. இந்நிலையில் சிறுபான்மைப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களின் பலம் சாதாரண காலத்தை விடவும் அதிகமாகும் . இன்று சிலரை கம்பி எண்ணுவதிலிருந்து காப்பாற்றி வைத்திருப்பதும் இந்த பலம்தான். எனவே 21 முஸ்லிம் பிரதிநிதிகளும் ஒரு காலக்கெடுவை விதித்து அந்த கால எல்லைக்குள் இனவாதிகளுக்கெதிராக நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் நாம் எதிர்க்கட்சியில் அமருவோம்; என்று ஒரு உறுதியான எச்சரிக்கையை விடுத்தால் போதும். அனைத்தும் தானாக நடைபெறும் . அரசாங்கம் மனதுவைத்தால் இதனைக் கட்டுப்படுத்துவது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை. தமது file களை பாதுகாப்பதா? சமூகத்தைப் பாதுகாப்பதா? என்பது இவர்களது பிரச்சினை. இன்று முஸ்லிம்கள் அச்சத்தின் காரணமாக தொழுகையில் குனூத் ஓதுகின்றார்கள். ஆனால் இவர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்து விளம்பரம் தேடுகின்றார்கள். இதனை ஆங்கிலத்தில் populist politics என்பார்கள் . அதாவது சமூகத்திற்கு தேவையானதைச் செய்யாமல் எதன் மூலம் போலி விளம்பரம் கிடைக்குமோ அதனைச் செய்வது.
1983 வரை வட கிழக்கிற்கு வெளியே வருடாந்தம் தமிழர்கள் இனக்கலவரத்தில் கொல்லப்பட்டார்கள் . 1983ம் ஆண்டு 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்காகத்தான் ஜூலை இனக்கலவரத்தையே நடத்தினார்கள் . அதன்பின் J R தீர்மானித்தார் , இனக்கலவரத்திற்கு இந்த நாட்டில் இடமில்லை; என்று. அதன் பின் ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோதும் தமிழர்களுக்கெதிராக எதுவித இனக்கலவரமும் இடம்பெறவில்லை . எனவே, அரசு மனசு வைத்தால் இது ஒரு சிறிய விடயம். ஆனால் அரசு ஏன் மனம் வைக்காமல் இருக்கின்றது . அதை உங்களால் தட்டிக்கேட்க முடியாவிட்டால் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு ஏன் அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்.
முஸ்லிம் சமுதாயம் மஹிந்தவின் விடயத்தில் ஒன்றுபட்டது போல் மீண்டும் ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது . இந்த முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் அரசுக்கு ஒரு காலக்கெடுவை விதித்து அதற்குள் தீர்வுகிடைக்காவிட்டால் அரசை விட்டு வெளியேறச் சொல்லி அழுத்தம் கொடுக்க வேண்டும். இதுதான் முஸ்லிம் சமுதாயம் இந்தக்கால கட்டத்தில் செய்யக்கூடிய ஒரேயொரு அர்த்தமுள்ள செயற்பாடாகும்
