
சென்னை: அ.தி.மு.க.வில் ஜெயலலிதா வசித்து வந்த பொதுச் செயலாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
கடந்த 2 நாட்களாக போயஸ் கார்டனில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 32 அமைச்சர்களும் சசிகலாவை சந்தித்து அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று மதியம் அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, கோகுலஇந்திரா, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், மற்றும் நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்து அ.தி.மு.க. தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதுபற்றி நிருபர்களிடம் கூறியதாவது:-
புரட்சித்தலைவி அம்மாவின் நிழலாக இறுதிவரை இருந்து அவரின் மெய்க் காப்பாளராக உயிர் காக்கும் தோழியாக உன்னத சேவகியாக உறுதுணையாக நிற்கும் தங்கையாகவே வாழ்ந்து வருபவர் சசிகலா.
எண்ணில்லாத சோதனைகளையும், வேதனைகளையும் ஜெயலலிதா சந்தித்த காலகட்டங்களில் அவருக்கு உற்ற துணையாக இருந்து அந்த துன்பங்களை பகிர்ந்து கொண்டவர் சசிகலா.
ஜெயலலிதாவுடன் 33 ஆண்டு காலம் இணைந்து நின்று அவரது சிந்தனையை செயலாற்றலை, தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருப்பவர் சசிகலா.
இந்த இயக்கத்தை ஜெயலலிதா வைத்திருந்த அதே கட்டுக் கோப்புடன் ராணுவ அமைப்பு போல் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஒரே வழி சசிகலா இந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆகி வழிநடத்துவது ஒன்றே ஆகும்.
அதனால்தான் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிறைவு செய்திட கழக முன்னணியினர் சசிகலாவை சந்தித்து தலைமை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறோம். அவர் தலைமை ஏற்பார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் ராஜு, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக் குமார், சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், டாக்டர் சரோஜா, சம்பத், கருப்பண்ணன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர். துரைக்கண்ணு. கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், வெல்லமண்டி நடராஜன், வீரமணி, பாண்டியராஜன், ராஜேந்திரபாலாஜி, பெஞ்சமின், நிலோபர்கபில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மணிகண்டன், ராஜலட்சுமி, பாஸ்கரன், சேவூர் ராமச் சந்திரன், வளர்மதி, பாலகிருஷ்ணரெட்டி ஆகிய 31 அமைச்சர்களும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் கூறுகையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா வரவேண்டும் என்று அவரிடம் கூறி இருக்கிறோம் என்றார்.(மாம)
