பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியில் முரளி விஜய், கேப்டன் வீராட்கோலி ஆகியோர் சதம் அடித்தனர். முரளி விஜய் 136 ரன்னில் அவுட் ஆனார்.
நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 451 ரன் குவித்தது. வீராட்கோலி 147 ரன்னுடனும், ஜெயந்த் யாதவ் 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-ம் நாள் ஆட்டம் நடந்தது. வீராட்கோலியும் ஜெயந்த்யாதவும் தொடர்ந்து விளையாடினார்கள்.
இருவரும் துரிதமாக ரன் சேர்க்கும் விதமாக ஆடினர். கோலி 246 பந்துகளில் 150 ரன்னை கடந்தார். இதில் 18 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் இருந்த ஜெயந்த் யாதவ் அரை சதம் அடித்தார்.
3-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 2-வது அரை சதமாகும். இதற்கு முன்பு விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் அரை சதம் அடித்து இருந்தார். நேற்று பொறுமையாக விளையாடிய கோலி இன்று அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். பவுண்டரிகளாக விளாசி ரன்கள் சேர்த்தார்.
இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ரன் குவித்து வருகிறது. 153-வது ஓவரில் 500 ரன்னை எடுத்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீராட் கோலி 302 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 53-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 3-வது இரட்டை சதமாகும்.
இதற்கு முன்பு நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்த ஆண்டிலேயே இரட்டை செஞ்சுரி அடித்து இருந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 558 ஆக இருந்தது.
மறுமுனையில் இருந்த ஜெயந்த் யாதவும் சதத்தை நோக்கி சென்றார்.
