சத்தார் எம் ஜாவித்-
இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஒரு இக்கட்டான நிலையில் இருந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அன்மைய சில வாரங்களாக இனவாத சக்திகளால் எந்தவிதமான அடிப்படை குற்றங்களுமின்றி சொல்லாலும், செயலாலும் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அவல நிலைக்கு முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமைதியாவும், சுயகௌரவத்துடனும் இந்த நாட்டில் நிம்மதியாக ஏனைய சமுகங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது ஒருசில இனவாதக் குழுக்கள் பொய்யான விடயங்களை திணித்து ஏனைய சமுகங்களுக்கு மத்தியில் குற்றவாளிகளாக சித்தரித்து வேறுபடுத்தும் விடயங்களே மறைமுகமாகவும், நேரடியாகவும் மேற்கொண்டு நாட்டை அதாளபதாளத்திற்கு கொண்டு செல்லும் செயற்பாட்டிற்கு எதிராக கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நாட்டின் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாக நாட்டின் நலன்களுக்கு கலங்கங்களை ஏற்படுத்தாது அமைதியாகவும், நல்லுறவுடனும் ஆட்சியாளர்களுடன் இணைந்து செயற்பட்டு வரும் முஸ்லிம் சமுகத்தினை வலிந்து வன்முறைக்கு இழுத்துத் துரத்தும் விடயம் முழு முஸ்லிம் சமுகத்தினையும் மனவேதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன் முஸ்லிம்களை கோபமூட்டி வெறுப்படையச் செய்து வரும் மற்றொரு செயலாகவுமே அவதானிக்க முடிகின்றது.
இதுவரை காலமும் முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக இனவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் மண்ணிக்க முடியாத குற்றங்களையும், செயற்பாடுகளையும் அனுபவித்த நிலையிலும் இந்தச் சமுகம் அமைதியையும், பொறுமையையுமே தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்துள்ளதை வரலாற்றுச் சம்பவங்கள் பல இருக்கின்ற நிலையில் இனவாதத்திற்காக மீண்டும், மீண்டும் துரத்தும் செயற்பாடுகளுக்கு மத்தியில் நிதானமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளதால் ஒவ்வொரு முஸ்லிமும் விரும்பியோ அல்லது விரும்பாமலோ இந்த விடயத்தில் கவனஞ் செலுத்த வேண்டியது காலத்தினதும், நாட்டினதும் தேவையாகும் என்பதனை முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் தெளிவுபடுத்தி வருகின்றனர்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் இன்றுள்ள விடயமல்ல 1915 ஆம் ஆண்டிலிருந்தே இந்த மக்களை நேரடியாக காவு கொள்ளத் தொடங்கி விட்டது எனலாம். குறிப்பாக 1915ஆம் ஆண்டு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கண்டிய இனக் கலவரத்தினை குறிப்பிடலாம். அக்காலத்திலும் சமுக விரோதிகளும், இனவாதிகளும் இருந்தே வந்துள்ளனர். ஆனால் அந்தக் கலவரம் ஏற்படக் காரணமானவர்கள் முஸ்லிம்கள்தான் என்ற விடயத்தினையும் இங்கு சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.
காரணம் அக்காலத்தில் இலங்கையை பிரித்தானியரே ஆட்சி செய்து வந்துள்ளனர். இவர்களின் பிடியிலிருந்து இலங்கையர்கள் விடுபட வேண்டும் என்ற ஒரு வகையான வெறி அக்கால சிங்கள அரசியல் தலைமைகள் மத்தியில் இருந்துள்ளது. இதன் காரணமாக பல அகிம்சைப் போராட்டங்களும், சில வேளைகளில் வன்முறைப் போராட்டங்களும்கூட இடம் பெற்றுள்ளதை வரலாறுகள் குறிப்பிடுகின்றன. இந்த நிலையில் கண்டியில் பிரித்தானியருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றபோது அவர்களின் ஊர்வலம் கம்பளை புதிய பள்ளிவால் வீதியூடாக ஆடல்பாடல்கள், மேளதாளங்களுடன் சென்றபோது தமது தொழுகை நேரத்தில் அதனைக் குழப்பவே அது மேற்கொண்டதாக நினைத்த ஒருசில முஸ்லிம்கள் அவர்களுடன் முரண்பட மேற்கொண்ட நடவடிக்கைகள் வன்முறைகளாக மாறியமையே வரலாற்று உண்மையாகவுள்ளது.
மேற்படிக் கலவரம் முஸ்லிம்களின் பொறுமையற்ற தன்மையின் விளைவாக துர்ரதிஸ்டவசமாக நிகழ்ந்து அது ஒரு அரசியல் ரீதியான கலவரமாகவே நடந்தேறியது. அக்காலத்தில் உள்ள ஒருசில இனவாதக் கும்பல்கள் முஸ்லிம் சமுகம் மீது கொண்டிருந்த கசப்புணர்வுளும் சமாதானமாகப் போகவேண்டிய நிலையில் அதன கலவரமாக மேற்கொண்டிருந்தனர் எனலாம். எந்தவொரு கட்டத்திலும் அது எந்த நாடாக இருந்தாலும் சிறுபான்மை பெரும்பான்மையை வென்றதில்லை என்ற வரலாறு இருக்கையில் பெரும்பான்மை என்ற கர்வத்தினாலும், இனவாதக் கருத்துக்களாலும் முஸ்லிம்களை நசுக்கிய வரலாற்றை முஸ்லிம் அனுபவித்து விட்டனர்.
1915ஆம் ஆண்டின் சம்பவங்களின் பின்னணியில் இன்று இனவாதக் குழுக்கள் முஸ்லிம்களின் பள்ளிகளைத் தாக்குவதும், மத்ரஸாக்களையும், அறபுக் கல்லூரிகளையும், ஏனைய மத நிறுவனங்களையும் மூடச் சொல்வதும், சமய விழுமியங்களை கொச்சைப்படுத்துவதும், சமய நடவடிக்கைகளை தடுப்பதும், முஸ்லிம்கள் தீவிரவாத்தை போதிக்கின்றார்கள் என்றும், முஸ்லிம்களின் பொருளாதாரத்தினை முடக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து முஸ்லிம்களுடனான தொடர்புகைள அறுக்க அப்பாவி சிங்கள மக்களை முஸ்லிம்களின் எதிரிகளாகவும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், பௌத்த மதத்தினை அழிக்க வந்தவர்கள் என்ற மாயையைக் காட்டி நாட்டில் குரோதங்களை வளர்க்கவும் மேற்கொள்ளும் செயற்பாடுகளே இன்று முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக இடம் பெற்று வருகின்றது.
உண்மையில் முஸ்லிம் சமுகம் இந்த நாட்டின் பௌத்த மதத்திற்கும், அதன் நற்பெயருக்கும் மதிப்பiயும், மரியாதையையும் கொடுக்கும் ஒரு சமுகமாகவே இருந்து வருகின்றனர். இன, மத பேதமின்றி வாழ்ந்து வருவதுடன் எந்வொரு கட்டத்திலும் அவர்கள் பௌத்த சமயத்திற்கு எதிராக நடந்த வரலாறுகளே இல்லை. ஆனால் பௌத்த இனவாதிகளின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது அவர்களுக்கே அவர்களின் மதத்தில் நம்பிக்கையற்ற நிலையிலேயே அவர்கள் தமது மதம் அழிந்து போய்விடுமோ என்ற என்னத்தில் செய்கின்றார்களோ என்ற சிந்தனையும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. அவ்வாறு அவர்களுக்கு ஒரு சிந்தனை ஏற்படுமானால் அது அவர்களின் மடமைத்தனத்தின் உச்சக் கட்டமே எனலாம்.
குறிப்பாக இலங்கையில் பௌத்தர்களின் விஷேட தினங்களாக போயா மற்றும் பௌர்ணமி தினங்களில் அவர்கள் இறைச்சிக் கடைகள், மீன்கடைகளை மூடி தமது மத்தின் சமய அனுஷ்டானங்களை கடைப்பிடிக்கின்றனர். இந்தத்தினங்களில் முஸ்லிம்கள் என்றாவது ஒருநாளில் நாங்கள் இறைச்சி சாப்பிட வேண்டும், மீன் சாப்பிட வேண்டும் என அடம் பிடித்து அக்கடைகளை திறக்குமாறு பிரச்சினைகள் கொடுத்த வரலாறுகள் இருக்கின்றதா? இல்லவே இல்லை. அந்தளவிற்கு அவர்களின் சமய, சமுக செயற்பாடுகளுடன் முஸ்லிம் சமுகம் இணைந்து மதிப்பளித்து வருவதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இவ்வாறு சமயக் கொள்கைகளுக்கு பலமான நன்மதிப்புக்களைக் கொடுத்து மதிப்பளித்து வரும் முஸ்லிம் சமுகம் எவ்வாறு பௌத்த மத்திற்கு கலங்கத்தினை ஏற்பட்டுத்துவர்? அல்லது அதனைக் குறைகூறுவர்?; என்ற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வர். 70.19 சதவீத பௌத்தர்களின் செயற்பாடுகளை 9.7 சதவீத முஸ்லிம்கள் எவ்வாறு தாண்ட அல்லது தடை செய்ய முடியும் என்ற சிந்தனை தெரியாத பொதுபல சேனா, ராவணபலய, சிங்கலே, சிஹல உறுமைய போன்ற இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் அனைத்துமே சிறுபிள்ளைத்தனமான புரிந்து கொள்ளாத செயற்படுகளாகவே நோக்கப்படுகின்றது.
இன்றைய தேசிய நல்லிணக்க அரசில் இன்று எழுந்துள்ள இந்த கொந்தளிப்பு நிலைமைகள் இந்த நாட்டில் சமாதானத்தினை விரும்பும் அல்லது எதிர்பார்க்கும் அனைவரதும் நிம்மதியினை சீர்குலைக்கும் கைங்கரியங்களாக இருப்பதையிட்டு கவலை கொண்டுள்ளனர். குறிப்பாக ஒருசில அமைச்சர்களின் அடிப்படையற்ற எதிர்மாறான கருத்துக்கள்கூட தற்போதைய நிலையில் பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் தெரிவிக்கப்பட்டு வருகின்றமைகூட ஒரு பாரதூரமான விடயமாகும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சமுகங்களை ஒற்றுமைப்படுத்த வேண்டியவர்களே தவிர வன்முறைகளை அல்லது பிரச்சினைகளை தோற்று விக்கும் நடவடிக்கைகளில் அல்லது செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்வதே சிறந்தாகும்.
குறிப்பாக நீதியமைச்சரும், புத்தசாசன அமைச்சருமான விஜயதாஸ ராஜபக்ஷ ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பாக இலங்கை முஸ்லிம்களை தொடர்புபடுத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தும், வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் பலஸ்தீனுக்கு எதிராக செயற்பட்டமை போன்ற விடயங்கள் இலங்கைவாழ் இனவாதக் குழுக்களால் வரவேற்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளமை எல்லாம் முஸ்லிம்களின் மனதில் கலங்கத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் இவர்களும் இந்த நல்லாட்சியிலும் இருக்கின்றார்களா?
இவர்களும் இனவாதிகளின் கொள்கை பரப்பாளர்களா? என்பது போன்ற சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை பொதுபல சேனா பாராளுமன்றத்தில் மூடிய அறைக்குள் சந்தித்து கதைத்துள்ளதுடன் பேச்சவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்ற செய்தியை அவர்கள் வெளியிட்டுள்ளனர் இந்த வார்த்தை இதயசுத்தியுடன் இருந்தால் அதனை வரவேற்கலாம். ஆனால் இனவாத குழுக்களை பாராளுமன்றத்தில் மூடிய அறைக்குள் சந்தித்துக் கதைத்த விடயத்தில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இதேவேளை அமைச்சரை கடந்த புதன்கிழமை முஸ்லிம் அமைப்புக்கள் சந்தித்து முஸ்லிம்களின் உண்மையான நிலைப்பாடுகள் மற்றும் தேவையற்ற விதத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விடயங்கள், அமைச்சர் முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புபடுத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான முஸ்லிம்களின் கண்டனங்களையும் தெரிவித்தமை மற்றும் எதிர்கால பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்ட விடயங்களையும் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாதச் செயற்பாடுகளை உடன் நிறுத்தவது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை போன்ற விடயங்கள் அமைச்சர் ஏற்றுக் கொண்டாலும் இனவாத சக்திகள் ஏற்றுக் கொள்ளுமா? போன்ற விடயங்களில் பலத்த சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம்.
காரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன இலங்கையில் இனவாதமற்ற ஒரு நல்லாட்சி இடம் பெறவேண்டும் என்ற முழு மனதுடன் தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதுடன் அதற்கு எதிரான கருத்துக்களை அமைச்சர்கள் தெரிவித்து வருவதுடன் தனது ஜனாதிபதிக் காலத்தில் இனவாதம் ஒழிய வேண்டும் என தொடராக குரல் கொடுத்து வரும் நிலையில் அமைச்சர்கள் ஒரு சமுகம் தொடர்பாக தெரிவிக்கும் கருத்துக்கள் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக அமைவதுடன் முஸ்லிம் சமுகம் ஜனாதிபதி மீது நம்பிக்கையற்றுச் செல்வதற்கும் வழிவகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை எனலாம்.
இவ்வாறான நிலையில் ஏற்பட்டு பதட்ட நிலைமைகளைத் தனிக்க முஸ்லிம் அமைப்புக்களும், சமயத் தலைவர்களும் முனைப்புடன் செயற்பட்டு வருவது முஸ்லிம் சமுகத்திற்கு சிறு மன நிம்மதியைக் கொடுத்தாலும் இனவாதக் குழுக்கள் இஸ்லாம் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி தனிவதாகத் தெரியவில்லை என்ற விடயத்தில் முழு முஸ்லிம் சமுகமும் கவலை கொண்டுள்ளனர்.
இவ்வாறான சூழ் நிலையில் முஸ்லிம் சமுகத்தினை துரத்திவரும் இனவாதத்திற்குள் எத்தனை இடர்களும், பிரச்சினைகளும் வந்தாலும் நிதானமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுக்கும் முக்கியமானதொரு விடயமாகும். இந்த விடயத்தில் சிறு சறுக்ககள்கள் ஏற்பட்டாலும் அதனை சாட்டாக வைத்து இனவாதக் கும்பல் பர்மாவில் ரோங்ஹிய முஸ்லிம்கள் மீது ஈவிரக்கமற்ற வகையில் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை மேற்கொள்ளவே காத்துக் கொண்டிருக்கின்றனர்.
என்றாலும் முஸ்லிம்கள் மீது இனவாதிகள் அவ்வாறு செய்ய முடியாது காரணம் 97 சதவீதமான பௌத்த சகோதரர்கள் மற்றும் நல்லபல பௌத்த துறவிகளும், பௌத்த கல்விமான்கள், சமுக ஆர்வளர்கள், சமுக அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்களும் முஸ்லிம் சமுகத்தில் நல்ல நம்பிக்கையும், நற்பும் வைத்துள்ளனர். இதேபோல் முஸ்லிம் சமுகமும் பௌத்த தர்மத்திற்குரிய சகல மதிப்புக்களையும், மரியாதைகளையும் வழங்கி அவர்களுடன் இரண்டறக் கலந்து வருகின்றனர். ஒருசில கழுதைகள் துள்ளுகின்றது என்பதற்காக முழு நாட்டையும் இழக்க யாரும் விரும்பமாட்டார்கள் என்பதே யதார்த்தமான உண்மைகளாகும். இதனையே இந்த நாட்டின் 97 சதவீதமான சகல இலங்கைவாழ் மக்களும் கொள்கையாகக் கொண்டுள்ளனர் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.
எனவே ஜனாதிபதியுடன் முழு நாட்டு மக்களும் ஒன்றினைந்து இந்த நாட்டில் சமாதானத்தினையும், இன ஒற்றுமையையும் சீர்குலைத்து நாட்டின் ஜனநாயக விழுமியங்களுக்கு தீ மூட்ட நினைக்கும் இனவாதக் கும்பலின் ஆணி வேரைப்பிடிங்கி இந்த நாட்டில் இன ஒற்றுமையை மேலோங்கச் செய்யும் கைங்கரியங்களில் பொறுப்புணர்வுடன் செயற்படும்போது சுபீட்சமானதொரு சிறந்த இலங்கையைக் கட்டியெழுப்பலாம் என்ற எதிர்வு கூறலை அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
