முஸ்லிம்களின் அரசியல் கலாச்சாரம் கட்சிப் பிரிவுகளால் கேள்விக் குறியாகும் போக்குக்கு உள்ளாகியுள்ளது.

சத்தார் எம் ஜாவித்-

ந்த நாட்டில் முஸ்லிம் சமுகம் சிறுபான்மையாக இருந்தாலும் அரசியல் இருப்புக்களுடன் கௌரவமாக வாழ வேண்டும் என்பதற்காகவே அக்கால முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் ஆட்சியாளர்களுடன் இணைந்து தமது பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தி முஸ்லிம் சமுகத்தின் அரசியல் பிரவேசங்களை சமுகத்திற்கு அடையாளப்படுத்தினர் எனலாம்.

ஓல்லாந்தரின் ஆட்சியில் இருந்து ஆங்கிலேயர் இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னர் இலங்கை மக்களின் அரசியல் இருப்புக்கள் படிப்படியாக முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கியது எனலாம். 1833இல் கோல்புறுக் குழுவினரால் சட்ட நிரூபன சபையொன்று ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட அரசியல் பிரவேசங்களில் பௌத்த, பறங்கிய மற்றும் தமிழ் சமுகங்களுக்கு ஒவ்வொரு பிரதி நிதித்துவங்கள் வழங்கப்பட்ட போதிலும் முஸ்லிம் சமுகம் புறக்கணிக்கப்பட்டது. இது அக்கால முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் பாரியதொரு குறைபாடான விடயமாக பேசப்பட்டது.

இவ்வாறான நேரத்தில் மேற்படிச் சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் தேவைப்பாடுகள் அக்கால முஸ்லிம் பிரமுகர்களால் சுட்டிக்காட்டப்பட்டதன் பிரகாரம் நீண்டதொரு பயணத்தின் பின்னர் 1889ஆம் ஆண்டு எம்.சி.அப்துர் ரஹ்மான் என்பவர் உள்வாங்கப்பட்டதன் விளைவாக ஓரளவு முஸ்லிம் சமுகத்தின் கவலைகள் குறைவடைவதற்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தியது எனலாம்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் மனிதராக அரசியல் அந்தஸ்துள்ள ஒருவராக எம்.சி.அப்துர் ரஹ்மான் பிரவேசித்ததைத் தொடர்ந்து 1899இல் அஹமத் லெப்பை முஹம்மத் ஷெரிப் தெரிவானார் (இவர் தெரிவாகி இராஜினாமாச் செய்து விட்டார்), இவருக்குப் பதிலாக டபிள்யு.எம்.ஏ.ரஹ்மானும், 1917இல் என்.எச்.எம்.அப்துல் காதர் மற்றும் எம்.எச்.மாக்கான் மாக்கார், ரி.பி.ஜாயா, எம்.ரி.அக்பர், ஈ.ஜி. ஆதம் அலி, என்.ஆர். முஹம்மத் சுல்தான் ஆகியோரும் 1942இல் எம்.சீ.எம். கலீல் உள்ளிட்டவர்களுடன் எஸ்.எச்.இஸ்மாயில், ஏ.ஆர்.எம்.அபூபக்கர், எம்.எம்.இப்ராஹிம், எம்.எஸ்.காரியப்பர், ஏ.எல்.சின்னலெப்பை, ஏ.அஸீஸ் போன்றவர்கள் முஸ்லிம் அரசியல் பிரவேசங்களாக அக்கால அந்நிய அரசியல் கலாச்சாரத்தில் பங்கேற்றனர் என்றால் அது மிகையாகாது.

இவ்வாறு சுதந்திரத்திற்கு முன்னரான அக்கால அரசியல் தலைமைகள் அவர்களுக்குள் எந்தவித பிணக்குகளுமின்றி முஸ்லிம் சமுகத்தினதும், இஸ்லாமிய சமய விழுமியங்களையும் ஏதோ ஒருவகையில் கட்டிக்காப்பதற்கு தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கிக் காத்தனர் எனலாம்.

சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் முஸ்லிம்களின் அரசியல் பயணத்தில் பல்வேறுபட்ட ஏற்றத்தாழ்வுகள் முஸ்லிம் சமுகத்தினை வாட்டி வதைத்து வருகின்றது எனலாம். எனினும் மேற்படி நிலைமைகளுக்குள் ஒருசில முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமுகத்திற்காக குரல் கொடுத்த வரலாறுகளும் இருக்கின்றது எனலாம்.

ஆனால் இன்று இலங்கையில் முஸ்லிம் சமுகத்தின் அரசியல் கலாச்சாரத்தினை எடுத்து நோக்கும் போது மிகவும் கவலைகுரிய விடயமாகவே இருக்கின்றது. காரணம் முற்று முழுதாக தற்போதைய முஸ்லிம் அரசியல் தலைமைகளின் போக்கு என்பது மக்கள் நலன்களுக்கு மாற்றமான முறையில் தத்தமது கட்சிகளை வளர்த்துக் கொள்வதற்கும், பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்கும் அதன் மூலம் குளிர்காய நினைக்கும் கட்சி அரசியலாகவே இருக்கின்றது எனலாம்.


சமுகத்தின் அடையாளத்தை தக்கவைத்த அரசியல் தலைமைகளுக்குப் பின்னர் சுதந்திரத்துக்கு பின்னரான குறிப்பாக 90 களுக்குப்பின்னரான காலத்தில் முஸ்லிம்களுக்கு என தனியானதொரு அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்து அதன்படி மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அதனை ஏற்படுத்தினார்.

இலங்கையில் குறிப்பாக 80ற்குப் பின்னர் இனமுறுகள்கள் ஏற்பட்டு நாடு பல பிரச்சினைகளுக்கு உட்பட்டு வடகிழக்கில் தமிழ் இளைஞர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்து நாட்டில் ஒருபக்கம் யுத்தம் மறுபக்கம் இனவாதச் செயற்பாடுகள் தோற்றம் பெற்றன. இவ்வாறானதொரு நிலையில் தமிழ் சமுகத்தினை தமிழ் தலைவர்கள் தத்தமது அடையளங்களுக்குள் உட்படுத்தி வழி நடத்திச் சென்ற வேளையில் முஸ்லிம் சமுகம் இரண்டும் கெட்டான் நிலையில் சிறந்த தலைமைத்துவங்களும், வழிகாட்டிகளும் இல்லாது இருந்த போது மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம் சமுகத்திற்கு ஒரு அரசியல் அடையாளத்தினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை மரச் சின்னத்தில் தோற்று வித்து இலங்கை வாழ் சகல முஸ்லிம்களையும் ஒன்று திரட்டி ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்து இந்த நாட்டின் அரசியல் வரலாற்றை குறிப்பாக ஆட்சி முறையை மாற்றியமைக்கும் அல்லது அரசாங்கத்தினை பேரம்பேசித் தீர்மாணிக்கும் ஒரு சக்தியாக திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது.

இவ்வாறு தனது சிறந்த ஆழுமையால் ஏனைய சமுகங்களுக்குச் சமமாக இலங்கை வாழ் முஸ்லிம் சமுகத்தினை அரசியல் நீரோட்டத்தில் சங்கமிக்க வைத்த பெருமை அஷ்ரபையே சேரும். அவர் இருந்த காலங்களில் இலங்கை அரசியலில் ஒரு பலம்பொருந்திய கட்சியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அடையாளப் படுத்தியிருந்தார். மர்ஹூம் அஷ்ரபின் காலமே முஸ்லிம் சமுகத்தின் அரசியல் பொற்காலம் என்றும் அரசியல் ஆய்வாளர்களர் மெச்சுகின்றனர்.

எனினும் துரதிஸ்டவசமாக அஷ்ரபின் மறைவு ஏற்பட்ட பின்னர் முஸ்லிம் சமுகத்தினை ஒற்றுமைப்படுத்தி உறுதிப்படுத்தப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஒற்றுமை சீர்குலையத் தொடங்கி பல்வேறு கட்சிகளாக பிரிந்து இன்று மக்கள் குழப்பத்தில் பின்னோக்கிச் செல்வதற்கு அரசியல் பிரமுகர்களின் ஒற்றுமையற்ற தன்மைகளும், கருத்து முறண்பாடுகளும் ஏற்பட்டு இன்று முஸ்லிம் அரசியல் பின்னடைவுகளுக்கு வழிவகுத்து விட்டது எனலாம்.

இன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரிவு அகில இலங்கை மக்கள் காங்கிரசாக ஒரு பக்கமும், அதாவுல்லாவின் கட்சி ஒருபக்கமும், முன்னாள் அமைச்சர் சேகு இஸதீன் ஒரு கட்சியைத் தோற்று வித்து இன்னொரு பக்கமுமாக முஸ்லிம் சமுகத்தின் அரசியல் இருக்கைகள் சின்னா பின்னமாகின்றமையானது எதிர் காலத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்கள் அது பாராளுமன்றமாக இருக்கட்டும், மாகாண சபைகளாக இருக்கட்டும், நகர சபைகளாக இருக்கட்டும், பிரதேச சபைகளாக இருக்கட்டும் மிகவும் கீழ் மட்டத்திற்குச் சென்று இருப்பதையும் அரசியல் பிரதிநிதித்துவங்களை இழக்கும் நிலைக்கே தற்போதைய அரசியல் தலைமைகள் தங்களுக்குள் சண்டை பிடித்து முஸ்லிம்களை வங்குறோத்து நிலைமைக்கு இட்டுச் செல்கின்றதாக முஸ்லிம் சமுக ஆர்வளர்களும், சமயப் போதகர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலைமைகளுக்குள் தாண்டவமாடும் முஸ்லிம் சமுகத்தின் விடயத்தில் முஸ்லிம் புத்தி ஜீவிகளும், சமயத் தலைவர்களும், கல்வி மான்களும் அதீத கவனமெடுத்து தற்போதுள்ள அரசியல் தலைமைகளிடத்தில் கட்சி அரசியல் கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு எதிர் கால முஸ்லிம் சமுகத்தின் நலன்களில் அக்கறையுடன் கூடிய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வழியுறுத்த வேண்டிய தேவைப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.

காரணம் குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் பௌத்த இனவாதக் குழுக்களால் சமய ரீதியாக பல்வேறுபட்ட வகையிலும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றனர். இவர்கள் இலங்கை முஸ்லிம்களையும் மற்றுமொரு பர்மாவின் ரோங்கிய முஸ்லிம்களின் நிலைக்கு கொண்டு செல்ல முனைகின்றனர். இதன் ஒரு கட்டத்தை கடந்த மஹிந்த ராஜபக்ஷக்களின் காலத்தில் அளுத்கம, தர்ஹா டவுன், பேருவளை போன்ற பகுதிகளில் அரங்கேற்றிய கொலைக் கலாச்சாரத்தினை குறிப்பிடலாம்.

எனினும் அவர்களின் அடாவடித் தனங்கள் தற்போதைய அரசின் உதயத்தால் சற்றுத் தனிந்திருந்தாலும் அது மீண்டும் உருவெடுத்து தமிழ் மக்களையும்கூட தாக்கும் அளவிற்கு வந்துள்ளமை ஒரு பாரிய அழிவுக்கு பொதுபல சேனா உள்ளிட்ட தீய சேனாக்கள் முரண்டு பிடிப்பதைக் காண முடிகின்றது. இவர்கள் விடயத்தில் 99 சதவீதமான மக்கள் வெறுப்பாகவே உள்ளதுடன் அவர்கள் தொடர்பாக தத்தமது கடுமையான எதிர்ப்புக்களையும், கண்டனங்களையம் அரசுக்கு தெரிவித்து வருவதையும் காண முடிகின்றது.

இந்த வகையில் அரசாங்கம் நாட்டின் இறைமையைக் காப்பற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் கொண்டுள்ளதால் அதற்கான அவசர நடவடிக்கைகளை எடுத்து இனவாத சக்திகளை அடியோடு ஒழிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதால் இந்த விடயத்தில் முஸ்லிம் சமுகமும் அரசுடன் இணைந்து தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டிய விடயத்தில் இணைந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு அரசியல் ரீதியான ஒரு தேவைப்பாடு என்பது முக்கியமானதாகும். இதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் அவசியம் இன்றியமையாததாகும் என்பதால் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தத்தமக்குள் இருக்கும் கட்சிப் பிணக்குகளைக் களைந்து எறிந்து விட்டு சமுகத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு அரசுடன் இணைந்து காய் நகர்த்த வேண்டிய முக்கியமான பங்களிப்பு உள்ளது.

எனவே முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைமைகளும் சமுக நலனுக்காக சிந்திக்க வேண்டிய இத்தருணத்தில் கட்சிப் பிளவுகளை விட்டு விட்டு ஒன்றுபட்டு இந்த நாட்டின் முஸ்லிம் சமுகத்தின் இருப்புக்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர அற்ப, சொற்ப அரசியல் வங்குறோத்து விடயங்களுக்காக ஒருவருக்கொருவர் குறைகளைகளைக் கூறிக் கொண்டும், குற்றங்களைச் சுமத்திக் கொண்டும் பகிரங்கமாக ஊடக அறிக்கைகளை விடுவது. தொலைக்காட்சிகளில் வெட்டுப்பேச்சுக்களை பேசுவதாலும் முஸ்லிம் சமுகம் மீட்சி பெறாது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே சமாதானத்தை விரும்பும் முஸ்லிம் சமுகத்தின் வேண்டுகோலாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -