நாடாளுமன்றத்திற்கு அருகில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் தமது பிரதிநிதிகளை சந்திக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட வருவதற்கு தடையேற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
எனினும் தினேஷ் குணவர்தன சுமத்தி இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தான் வருந்துவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பாதுகாப்பு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அறிவிக்கப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலய எல்லையை எந்த காரணத்தினாலும் மாற்ற தான் நடவடிக்கை எடுக்கவில்லை. தினேஷ் குணவர்தன சுமத்திய குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
சபையில் எழுந்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, தேவையானால், கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி அதியுயர் பாதுகாப்பு வலய பகுதியில் எல்லையை வரையறுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது குறிக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பெயரிடுவது கட்சி தலைவர்களின் பணியல்ல எனவும் அது பாதுகாப்பு தரப்பினரின் பணி எனவும் கூறியுள்ளார். இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அமைய அறிவிக்கப்பட்டுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு இணக்கம் தெரிவித்த சபாநாயகர், நாடாளுமன்றத்தில் சிரேஷ்ட உறுப்பினரான தினேஷ் குணவர்தன பொய் கூறி, தன் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது குறித்து மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
