புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், ‘ரூபாய் நோட்டு விவகாரத்தில் பாராளுமன்றத்தில் நான் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் அனுமதிப்பதில்லை. எனவேதான் மக்கள் சபையில் பேச நான் முடிவு செய்து இருக்கிறேன்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் அரசுக்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன்” என்றார்.
பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
மோடி அவர்களே, உங்களது நாடகத்தனமான வசனங்களை கேட்டு நாட்டு மக்கள் களைப்படைந்து விட்டனர். நாடக வசனங்கள் இனி மக்களிடம் எடுபடாது.
எனவே பாராளுமன்றத்துக்கு வந்து அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

