முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளை உடன் நிறுத்துவதற்கு ஜனாதிபதி பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் முதல் அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.
ஆலோசனை மற்றும் நல்லிணக்கப் பேரவை (ARC) கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு – மருதானை சாஹிரா கல்லூரி பள்ளிவாசலுக்கு எதிரில் ஏற்பாடு செய்திருந்த ‘இலங்கைத் தாய்க்கு பிரார்த்தனை’ எனும் தொனிப்பொருளிலான துஆ பிரார்த்தனையில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையின் சமாதான சகவாழ்வுக்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இன நல்லிணக்கத்துக்கும் நாட்டின் அபிவிருத்திக்காக இந்த ‘இலங்கைத் தாய்க்கான பிரார்த்தனை' அரபு மொழியிலும் சிங்கள மொழியிலும் நடாத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையையடுத்து பள்ளிவாசலுக்கு வெளியில் நடைபெற்ற இப்பிரார்த்தனை நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்தும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கருத்து தெரிவிக்கையில்
‘தற்போது முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான பௌத்த கடும்போக்கு வாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. முஸ்லிம் சமூகத்துக்கும் தாய்நாட்டுக்கும் ஏதும் ஆபத்துகள் ஏற்படக்கூடாது என்றே அல்லாஹ்விடம் இந்தப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும் பாதுகாப்பதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். சட்டம் அனைத்துப் பிரஜைகளுக்கும் சமமாக அமுல் நடத்தப்பட வேண்டும் என்றார்.
சுமார் 45 நிமிட நேரம் துஆ பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக கடும் போக்குவாத சிங்கள அமைப்புகள் செயற்பட முயற்சிக்கும் போதெல்லாம் ஆலோசனைக்கும் இன நல்லிணக்கத்துக்குமான பேரவை (ARC) துஆ பிரார்த்தனைகளை சிங்கள மொழியில் மேற்கொள்ளுமென அதன் தலைவர் அஸ்லம் ஒத்மான் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
