பெருந்தோட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 22 பாடசாலைகளுக்கு 2 ஏக்கர் வீதமான காணிகளை வழங்குவதற்கு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
கடந்த காலங்களில் பாடசாலைகளுக்காக 2 ஏக்கர் காணிகள் தேவைப்படும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அரசாங்கம் மற்றும் அமைச்சுகள் மட்டத்தில் பல்வேறு வழியுறுத்தல்கள் இடம்பெற்றும் நிறைவேற்றமடையாத நிலையில் இருந்தது.
இந்த நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையிலான குழு ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இவ்விடயம் தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து தற்பொழுது 2 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டு வருகின்றது என மத்திய மாகாண விவசாயம், தோட்ட உட்கட்டமைப்பு மீன்பிடி, இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று லிந்துலை டெல் தமிழ் வித்தியாலயத்திற்கான ஐந்து வகுப்பறைகளை கொண்ட கட்டிடம் ஒன்று நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரை நிகழ்த்துகையில்,
மலையகம் எழுச்சி பெற வேண்டும் என்றால் கல்வி முக்கியத்துவம் பெற வேண்டும். இதற்காக வித்திட்டவர் மறைந்த தலைவர் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களாவார்.
வீடுகளும், காணிகளும் தேவைப்படும் பட்சத்தில் எதிர்கால மலையகம் கல்வி முன்னேர வேண்டும் என இலக்கினை கொண்டு அவர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
இந்த ரீதியில் இன்று மலையகம் அவர் எண்ணியதை போல் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றது. சமூகத்தில் மாற்றத்தையும் வாழ்வு நிலையையும் உயர்த்திக்கொள்ள இன்று கற்றவர்கள் பாடுபட்டு வருகின்றனர். இதுவும் ஒரு சாதனையாக அமைகின்றது.
மலையகத்தில் தெரிவு செய்யப்பட்ட 22 தோட்டப்புற பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அப்பாடசாலைகளுக்கு வளங்களை பெருக்கிக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் 2 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டு வரும் அதேவேளை பாடசாலை அபிவிருத்திக்கென மத்திய அரசாங்கத்துடன், மத்திய மாகாண அமைச்சும் இணைந்து அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து செல்கின்றது.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியின் ஊடாக கல்விக்கு பாரிய உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது. இதனூடாக மலையக தமிழ் கல்வி படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருவதற்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் வாய்ப்பாக அமைந்துள்ளது.
கல்வியில் எவ்வாறு முன்னேற்றம் அடைந்து வர ஒவ்வாரு வரும் நினைக்கின்றார்களோ அதேபோன்று பொருளாதார முன்னேற்றமும் இவர்களுக்கு அவசியமாகின்றது. இந்த நிலையில் பொருளாதாரத்தில் பின்னடைவில் இருக்கும் எமது சமூகம் தேவையற்ற விடயங்களு்ககு வளங்களை விரயோகம் செய்யாமல் கல்விக்கும் தமது வாழ்வின் எழுச்சிக்கும் செலவு செய்வதை குறிக்கோளாக கொண்டு செயற்பட வேண்டும்.
சேமிப்பு பழக்கங்கள் இவர்கள் மத்தியில் வரும் பொழுது வாழ்வில் முன்னேற்றமடைய கூடிய சேமித்த பணங்களை இம்மக்கள் செலவு செய்வார்கள் என நம்பிக்கை பிறந்துள்ளது. இதனை பின்பற்றி கல்வி காணி, வீடு என்ற ரீதியில் தமக்கென அமைத்துக் கொண்டு வாழ்வை சுபீட்சமடைய செய்ய வேண்டும் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
