அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன்-
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரையுள்ள புகையிரத சேவையை பொத்துவில் அறுகம்பே சுற்றுலா நகர்வரை விஸ்தரிக்குமாறும் கல்முனையில் இயங்கும் இலங்கை போக்குவரத்துச் சபையின் கிழக்கு மாகாண தலைமைக் காரியலயத்திற்கு நிரந்தர கட்டடம் அமைத்துத் தருமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சிற்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்படி வேண்;டுகோளை விடுத்தார்.
பிரதி அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
நாட்டில் போக்குவரத்துத் துறையானது வரலாற்றில் என்றுமில்லாதவாறு முன்னேற்றமடைந்து காணப்படுவது போற்றத்தக்கதாகும். அந்த வகையில் அதிவேக நெடுஞ்சாலைகள், அதிவேக புகையிரத போக்குவரத்துச் சேவை, பஸ் போக்குவரத்துச் சேவை என்பன தாராளமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருந்த போதிலும் கொழும்பிலிருந்து கிழக்கு மாகாணத்திற்கான அதிவேக நெடுஞ்சாலையோ கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா நகராக காணப்படும் பொத்துவில் அறுகம்பே வரையான புகையிரத சேவையோ உருவாக்கப்படாமல் உள்ளது.
கிழக்கு மாகாணமானது கடந்த 30 வருடகால யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாகாணமாக காணப்படுகிறது. அதேவேளை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற மாகாணமாகவும் திகழ்கிறது. கைத்தொழில், மீன்பிடி, விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளையும் கனிய வளம் போன்ற இயற்கை வளங்களையும் கொண்ட மாகாணமாகும். ஆனால் போக்குவரத்துத் துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து கொண்டிருக்கிறது.
புகையிரத சேவையானது மட்டக்களப்பு நகர்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இருந்து கொண்டிருக்கிறது. இதனை பொத்துவில் அறுகம்பே சுற்றுலா நகர்வரை விஸ்தரிக்கின்றபோது இப்பிரதேசத்தின் சுற்றுலாத்துறை உள்ளிட்ட ஏனைய துறைகள் வளர்ச்சியடையும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கல்முனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் வாக்குறிதியாக குறித்த விடயத்தினை தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரையுள்ள புகையிரத சேவையை பொத்துவில் அறுகம்பே சுற்றுலா நகர்வரை விஸ்தரிக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன். கல்முனையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் இலங்கை போக்குவரத்துச் சபையின் கிழக்கு மாகாண தலைமைக் காரியாலயத்திற்கு நிரந்தரக் கட்டடம் இல்லாமல் இருந்து கொண்டிருக்கிறது. இதற்கான கட்டடத்தை அமைப்பதற்குத் தேவையான அரச காணிகள் இப்பிரதேசத்தில் காணப்படுவதோடு அவற்றை வழங்குவதற்கு பிரதேச செயலகம் தயாராக உள்ளது.
எனவே, அடுத்த வருட ஜனவரியிலாவது இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து குறித்த கட்டடத்தை அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இச்சபையில் போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் பிரசன்னமாகி இருக்கின்றனர், எனவே இங்கு என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அவர்கள் கருத்தில் கொண்டு அவற்றை செயற்படுத்தத் தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
