இனவாத செயற்பாடுகளைத் தடுக்க காத்திரமான நடவடிக்கை அவசியம் - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி – நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் காத்திரமான நடவடிக்கை அவசியம் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அதேவேளை, சிறுபான்மை மக்களது ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ள நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை மக்களது உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட வேண்டும் எனவும், இனவாத பேச்சுக்களுக்கு அது ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டதாவது:-

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பமான நிலை தொடர்பில் சிறுபான்மை மக்கள் அச்சமடைந்துள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க காரணமாக இருந்த சிறுபான்மை மக்கள் தங்களது மத – அரசியல் உரிமைகள் நல்லாட்சியில் பாதுகாக்கப்படும் என நம்பியிருந்தனர். ஆனால், அண்மைக்காலமாக நடந்தேறும் சில சம்பவங்களினால் நல்லாட்சி மீது சிறுபான்மை மக்கள் வைத்திருந்த நம்பிக்கை குறைந்துள்ளது. எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். 

கடந்த அமைச்சரவை கூட்டத்தில் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதன் போது பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோர் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை அமைச்சரவையில் எடுத்துரைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தனிப்பட்ட ரீதியிலும் சந்தித்து பேசியுள்ளனர். 

இதன்போது, சிறுபான்மை மக்கள் மாத்திரம் வாழும் இறக்காமம் - மாணிக்கமடு பிரதேசத்தில் பலவந்தமாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம். சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளன. அதில் இனவாத பேச்சுக்களும் - சமூக வலையத்தளங்களில் இனவாத பிரசாரங்கள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனை தடுப்பதற்கு அரசினால் நடவடிக்கை எடுக்க முடியும். வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் - இனவாத கருத்துக்கள் பரப்புவதை தடுப்பதற்கான சட்டங்கள் கொண்டுவரப்படும் என நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் காலங்களில் குறிப்பிட்டது. இதனை காலம் தாமதிக்காது அமுல்படுத்த வேண்டும். அதனால், நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத சக்திகளை தடுப்பதற்கும் - அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்க முயற்சிகளுக்கும் அது பக்கபலமாக அமையும். – என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -