”சிறுமை புரியாத கம்பீரம்”

நஸீர் ஹாஜி-
க்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு மற்றும் வெள்ளைப்பாதுகாப்பு வீதி மேடைகளில் பேசிய சகோதரர் சேகு இஸ்ஸத்தீன் அவர்களது பேச்சுக்கள், செப்டம்பர் 2016 நிஜம் சஞ்சிகையில் அவரது பேட்டி ஆகியவைகளிலிருந்து 1987ல் வடக்கும் கிழக்கு எவ்வாறு இணைந்தது?, அதற்கு அவர் எவ்வாறு சேவகம் செய்தார்?, நடந்தது என்ன? ஒரு பேத்தியின் திருமணத்தை பார்த்து ரசிக்க வேண்டிய அவர் ஏன் இன்னும் வாப்பா வேசம் பூண்டு "வலி"காறனாக மாற துடிக்கிறார்? என்பதை அறிந்த ஒருவன் என்பதால் இதை எழுதுகிறேன்.

1981ல் ஜே.ஆர்.ஜயவர்த்தனா ஜனாதிபதியாகி ஆற்றிய உரையில் இலங்கையை ஒரு குட்டி சிங்கப்பூராக்குவேன் என்று பேசினார். அன்றுதான் இந்தியா இலங்கையில் தனது சதிவலையை விரித்தது.

இலங்கையில் பல்தேசிய கம்பனிகள் அமையும், வெளி நாட்டு முதலீடுகள் வந்து குவியும், பொருளாதாரம் வளரும். அத்தோடு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை வல்லரசுகள் ஆட்கொள்ளும் என அண்டை நாடான இந்தியா பயந்தது. வங்களாதேசம்,நேபாள், பூட்டான் ஆகிய நாடுகள் போல தனது வெளிநாட்டு விஸ்தரிப்பு வாதம் எனும் ஆக்கிரமிப்புக்குள் இலங்கையை வளைத்துப் போட இந்தியா தீர்மானித்தது.

இலங்கையில் புரையோடிப்போய் இருந்த தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண சாத்வீக வழியில் தந்தை செல்வா முயன்றார். எப்போது தமிழர்கள் ஆயுதம் ஏந்துகிறார்களோ அப்போதே சிங்களவர்கள் விழித்துக் கொள்வார்கள் என அப்போதே தந்தை செல்வா சொன்னார்.

தமிழர்களது சாத்வீக போராட்டத்தை இந்தியா தனது நலனுக்காக ஆயுதப்போராட்டமாக மாற்றியது. இராணுவ பயிற்சி பெற்று வெளியேறிய டெலோ அமைப்பின் இராணுவ அணிவகுப்பு மரியாதையை இந்திராகாந்தி பார்வை இட்டார். (அவரவர் அளந்த சுண்டால்தான் அவர்களுக்கு இறைவன் அளப்பது என்பதை இந்திராவினதும், மகன் ரஜீவினதும் மரணங்கள் உணர்த்தின.)

அதன்பின் இந்தியாவின் தூண்டுதலில் அதன் நலனுக்காக பல ஆயுதக்குழுக்கள் உருவாகின "வங்கம் தந்த பாடம்" எனும் புளட் இயக்கம் வெளியிட்ட நூலில் இது அழகாக கூறப்பட்டுள்ளது. அதன்பின் நடந்த சகோதரச் சண்டைகள் இயக்கவெறி என்பன தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தின. ஆனால் புலி இயக்கம் ஆயுதரீதியாக பலம் பொருந்தி நின்றது. பெரும்பாமையான தமிழர்கள் அதன்பின்னால் நின்றார்கள்.

அக்கால கட்டத்தில் தமிழ் - முஸ்லிம் இனவன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசத்தை பிரித்த இந்தியாவின் இராஜதந்திரி திரு.திக்சித் இலங்கையில் தூதுவராக பதவியேற்கிறார். அவர் மூலம் இந்தியா தனது கைவரிசையை இலங்கையில் ஆரம்பிக்கின்றது. இந்திய இராணுவம் உணவுப் பொட்டலத்துடன் இலங்கையை ஆக்கிரமிக்கின்றது. இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றது. புலிகளை தவிர ஏனைய தமிழ் இயக்கங்கள் அதை ஆதரிக்கின்றன.

மர்ஹூம் அஸ்ரப் அவர்கள் இலங்கை இந்திய ஒப்பந்தம் முஸ்லிம்களது அடிமைச் சாசனம், அல்லாஹ் தான் முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டும் என்று ஒப்பந்தம் கைச்சாத்தான அன்று மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ. கட்டிடத்தில் வைத்து கூறுகிறார். அப்போது நான்,ஹஸன் அலி, ஹிஸ்புல்லாஹ், சேகு இஸ்ஸத்தீன் 1987ம் ஆண்டு பிரதேச சபைக்கு தராசு சின்னத்தில் போட்டி இட்ட சகலரும் புலிகளது மரண தண்டனை கடிதத்தை கையில் வைத்தவண்ணம் இருந்தோம்.இந்தகால கட்டத்தில் வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. வடக்கிலும் கிழக்கிலும் உறுப்பினர்கள் ஏகமனதாக எதிர்ப்பின்றி தெரிவானால் உலகம் அதை நம்பாது. ஆதலால் தேர்தலில் போட்டியிட கட்சிகளை தயார்படுத்தும் முயற்சியில் திக்சித் மும்முரமாக இருக்கிறார். சகோதரர் எம்.ஐ.எம்.முகைதீனுடன் பேச்சுவார்த்தை நடக்கின்றது. காரணம் அவர் இந்தியாவுக்கு போய் முஸ்லிம்கள் விடயமாக புலிகளுடன் பேசியவர். முஸ்லிம்களைபற்றி ஒரு வார்த்தைதானும் இல்லாத இந்த ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு சமுகத்துக்கு இந்த துரோகத்தை செய்ய தான் தயாரில்லை என்று கூறிவிட்டு வந்துவிட்டார்.

இக்கால கட்டத்தில் மர்ஹூம் அஸ்ரப் நிந்தவூரில் மர்ஹூம் பசில் ஏ மஜீட் அவர்களது வீட்டில் கிழக்கிலுள்ள கட்சி முக்கியத்துவர்களை அழைத்து வடகிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டி இடுவதா? இல்லையா? என எடுத்தறிகின்றார். புலிகள் கலந்து கொள்ளாத தேர்தல் ஒரு போதும் சமாதானத்தை, அமைதியை கொண்டுவராது அத்தோடு நமது அடிமைச்சாசனத்துக்கு கட்டுப்பட்டு தேர்தல் கேட்பதில்லை என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகின்றது.

அதிலிருந்து சிறிது நாள் கழித்து ஹஸன்அலி அவர்களது நிந்தவூர் வீட்டில் அஸ்ரப் அவர்கள் பேசும்போது "கட்சி பதிவு செய்யப்பட்டதும் திக்சித்தை சந்தித்தோம், திக்சித் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார், ஆசிகளை வழங்கினார். கிழக்கில் மட்டுமல்ல நாட்டின் சகல பாகங்களிலும் தேர்தலில் போட்டி இட்டு வெல்வதற்காக தங்களாலான சகல உதவிகளையும் வழங்குவதாக சொன்னார்.அதற்காக எத்தனை கோடி வேண்டுமென்றாலும் தருவதாக சொன்னார். I will give you any amount of money என்று சொன்னார். ஒரு கட்டத்தில் சொன்னார்.. You nominate a person I will give the money யாரையாவது சாட்டிவிடுங்கள் பணத்தை கொடுத்து அனுப்புகிறேன் என்றார். ஆம் அந்த பணத்திற்கு மாற்றீடாக, கைமாறாக வடகிழக்கை இணைக்க வேண்டும் என்றார்.அல்லாஹ் என்னை பாதுகாத்தான்" என்று அஸ்ரப் பேசினார். அஸ்ரப் வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார்.

வடகிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் இரவு 11 மணிவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அப்போதைய அம்பாரை மாவட்ட அமைப்பாளர் சட்டத்தரணி சறூக் சேர் அவர்களது வீட்டில் இருக்கின்றோம்.வீரகேசரி காரியாலயத்திலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு "முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலில் போட்டி இடுகிறதா? எனக் கேட்கிறார்கள். இல்லை என்று நாங்கள் கூறுகிறோம்." இரவு 11.30க்கு நாங்கள் அங்கிருந்து கலைந்து செல்கின்றோம்.

நாளை நண்பகல் 1.30க்கு தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் செய்வதாக அஸ்ரப் அவர்கள் சறூக்காரியப்பருக்கு தொலைபேசியில் கூறியுள்ளார். அன்று அந்த 1.30 மணிக்குள் நடந்த மாயம் என்ன? வடகிழக்கு மாகாணசபையின் முன்னாள்
போக்குவரத்து அமைச்சர் அபூ-யூசுப் அவர்களும் சேகு இஸ்ஸத்தீன் அவர்களும் மிக நெருங்கிய நண்பர்கள். அபூ-யூசுப் மூலம் திக்சித் சேகு இஸ்ஸத்தீனுடன் தொடர்பு கொண்டு அஸ்ரப் அவர்களை மூளைச்சலவை செய்து ஒருவாறு வடகிழக்கு இணைந்த தேர்தலில் போட்டியிட சம்மதிக்கவைக்கிறார். கட்சிக்குள் கடும் பிரச்சினை எழுகிறது. அப்போதைய கட்சி செயலாளர்  பரிஸ்டர் ஒஸ்மான் குர்ஆனை எடுத்து விளக்கி இவ்வாறான செயல் ஹறாம் என கூறி தனது பதவியை இரஜினாமா செய்கிறார். அதைத்தொடர்ந்து மேலும் பல கட்சி முக்கியஸ்தர்கள் இராஜினாமா செய்கின்றனர். திக்சித் சொன்னவாறு சாட்டப்பட்டவரிடம் (சேகு இஸ்ஸதீனிடம்) பலகோடி (சுமார் 5கோடி) பணம் கையளிக்கப்படுகின்றது.

தற்போது "நக்குண்டார் நாவிழந்தார்" எனும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் மாறுகிறது. கட்சியின் டாம் வீதி காரியாலயத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மாவட்ட கச்சேரிகளில் தாக்கல்செய்ய வேட்புமனு தயாராகிறது. கட்சி காரியாலயத்தில் நின்றவர்கள், கொழும்பிலுள்ளவர்கள், கற்பனை பெயர்களிலும் வேட்புமனு தயாராகி அன்று காலை இந்தியாவின் ஹெலி மூலம் கிழக்கின் சகல கச்சேரிகளிலும் முஸ்லிம்காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் செய்கிறது. வடக்கில் தேர்தல் நடாத்தும் சூழல் அப்போது இல்லை. புலிகள் மிக பலம் பொருந்தி இருந்தார்கள். வடக்கில் வேட்புமன தாக்கல் செய்ய இந்தியாவின் ஹெலி மறுக்கப்படுகிறது. மு.கா. வடக்கில் வேட்புமனு தாக்கல் செய்தால் அங்கு தேர்தல் நடந்தாகவேண்டும். ஆனால் தேர்தல் நடாத்தக்கூடிய சூழல் அங்கு இல்லை. என்பதனால் திக்சித் திட்டமிட்டு ஹெலி வழங்க மறுத்தார். வடக்கில் தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் ஏகமனதாக தெரிவாகிறார்கள். கிழக்கில் தேர்தல் நடக்கிறது.

தமிழ் இயக்கங்களின் அனைத்து அநியாயங்களையும் அனுபவித்த கிழக்கு முஸ்லிம்கள் வடகிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்பது சேகுவுக்கு நன்கு தெரியும். இக்கால கட்டத்தில் இந்தியாவின் பணத்திற்கு அடிமையாகாது சமூக உணர்வுடன் திகழ்ந்த எம்.ஐ.எம் முகைதீன் அவர்கள் "முஸ்லிம்மாகாணம்" எனும் ஒன்றை உருவாக்கி அதற்காக நூல்களை எழுதி, தனக்கு அடக்கமான முறையில் கூட்டங்களை வைத்து செயல்பட்டு வருகின்றார். அப்போது அஸ்ரபும்,சேகுவும் இந்த முஸ்லிம் மாகாணத்தின் மணம், ருசி எதுவும் தெரியதவர்கள்.ஆனால் சேகு இஸ்ஸத்தீன் தொலைக்காட்சியில் தோன்றி "நடைபெற இருக்கும் வடகிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டி இட்டுள்ளது இத்தேர்தலை முஸ்லிம்கள் பகிஸ்கரிக்கக் கூடாது ஏனென்றால் இதில் நீங்கள் அளிக்கும் வாக்குகள்தான் முஸ்லிம் மாகாணத்திற்கு நீங்கள் வழங்கும் ஆணை"என்று மிகவும் உணர்ச்சியூட்டி பேசினார். முஸ்லிம்கள் நமக்கு ஒரு இஸ்லாமிய இராஜ்ஜியம் அமையப்போகிறது என்று நம்பி கட்சி பேதங்களை மறந்து ஒட்டுமொத்தமாக வாக்களித்தர்கள். அதை ஒரு "இலக்சன்" என்பதைவிட "கலக்சன்"என்று சொல்லலாம். இன்றைய நாள் முஸ்லிம்காங்கிரஸ் (சேகு இஸ்ஸதீன்) முஸ்லிம்களை பலகோடிக்கு விற்று முதன்முதலாக ஏமாற்றிய வரலாற்று துரோகம் நடந்த நாள்.

திக்சித்திடம் பெற்ற கூலிக்கு தனது கைமாறை செய்த பூரிப்பில் தலைவரும், தவிசாளரும் கைநிறைய காசுடன் 1989ம் ஆண்டைய பொதுத்தேர்தலுக்கு தயாராகிறார்கள். பொதுத்தேர்தல் நடக்கிறது அதிலும் முஸ்லிம் மாகாணத்திற்கே ஆணை கேட்கிறார்கள்.  பொதுத்தேர்தலில் அஸ்ரப் பா.உ வாகிறார். சேகு தோல்வியை தழுவுகிறார். உடனே தேர்தலில் போட்டி இடாத சேகு வடகிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவராகிறார். மாகாணசபையின் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கிறார். 1989 இறுதி காலத்தில் வரதராஜ பெருமாள் ஒரு தலைப்பட்ச ஈழப் பிரகடனம் செய்கிறார். முஸ்லிம் மாகாணத்திற்கு ஆணை பெற்று மாகாணசபை சென்ற சேகு அதைப்பற்றி ஒரு வார்த்தை தானும் பேசவில்லை.

ஆனால் வடகிழக்கு மாகாண சபை நிர்வாக காலத்தில் 1987 முதல் 1989 வரை இந்தியப்படையின் உதவியுடன் தமிழ்பயங்கரவாதிகள் யாழ்ப்பாணம்,சாவகச்சேரி,முல்லைத்தீவு,மூதூர், கிண்ணியா,ஓட்டமாவடி,ஏறாவூர்,காத்தான்குடி,கல்முனை(4முறை),சாய்ந்தமருது,மாளிகைக்காடு,சம்மாந்துறை,அக்கரைப்பற்று ஆகிய ஊர்களை தாக்கி சுமார் 300 முஸ்லிம்களை கொன்றனர், 989 பேர் காயப்பட்டனர்,131000பேர் அகதிகளாகினர்.40 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. 22 பாடசாலைகள் தாக்கப்பட்டன. மாகாண சபை உறுப்பினர்கள் மர்ஹூம் அலி உதுமான், மன்சூர் ஆகியோர் இக்காலத்தில் கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் பிரதேச விஸ்தரிப்பு வாதத்திற்கு இலங்கையை அடிபணியவைத்ததை தவிர இந்த இலங்கை-இந்திய ஒப்பந்தம் இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு எந்த தீர்வையும் தராது முடிவுற்றது. அதன்பின் சேகு இஸ்ஸத்தீன் "தேர்தலில் நில்லாமல் தான் திருச்சபை செல்ல வேண்டும் யார்குடி கெட்டால் என்ன இராஜ்ஜியம் தனக்கு வேண்டும்" எனும் மந்திரத்தை பாவித்து தந்திரமாக மூன்று முறை பாராளுமன்றம் சென்றார். முதல் தரம் ஐ.தே.க. தேசியப்பட்டியலில் சென்றார். அதற்கு அப்போதைய ஜ.தே.க.வின் பொது செயலாளர் காமினி அத்துக்கொறள அவர்களது இரத்தினபுரி வீட்டில்நடந்த 'ஸ்திரி யாகம்' உதவியது. ஜவாத் மரைக்கார் காலமாகிவிட்டார். மதிப்புக்குரிய செயின் வாத்தியார் உயிர் வாழ்கிறார். அதன்பின் அஸ்ரபின் "தின்ன" தோழனாகி அன்னை என அரசியல் மேடைகளில் வலம் வந்து பெற்ற எம்.பி.பதவி. அடுத்தது மகிந்தவின் ஆட்சியில் பெற்றது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஆலிஹி அவர்கள் ஹிறாமலை குகையில் இருந்து தனது புனிதத்தை போதிக்க மக்களிடம் வந்ததார்கள். குர்ஆன், ஹதீது என கட்சிக்கு யாப்பு எழுதிய சேகு அக்கட்சியை மக்களிடம் கொண்டுவந்து இந்தியனின் பணம் முதல் அனைத்தையும் அனுபவித்துவிட்டு மலைக்கு போய் குகையில் வாழ்ந்தார். தனிமை, இவர் தனக்கும், சமுகத்திற்கும் செய்த கறுமங்களை உணர்த்தும் அதற்காக அவைகளை இரைமீட்டி பச்சாதாபப்பட்டு இறையை இரஞ்சுவதற்குத்தான் மலைக்கு சென்றுள்ளாரென பலரும் நினைத்தனர்.

ஆனால் "நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்" என்பதைப்போல அவரது செயல்கள் இருப்பதை அவரது அறிக்கைகள்,பேச்சுகள் என்பன அவர் அன்று இந்தியனிடம் பெற்ற பணத்திற்கு கைமாறாக அல்லது இன்று வாங்கியதற்கு?? கைமாறாக வடகிழக்கு இணைப்பும் அதில் முஸ்லிம்களது இருப்பும் என்றும், சுயநிர்ணயம்,முஸ்லீம்தேசியம் என அடிக்கடி வார்த்தை மாறும் அறிக்கைகள்,பேச்சுகள் என்பன "வாலிபத்தில் தாசித் தொழில் செய்தவர்கள் வயது போனால் கூட்டிக்கொடுப்பார்களாம்.." எனும் அர்த்தத்தை உணர்த்துகிறது. இதை "சிறுமை புரியாத கம்பீரம்" என்று அழைக்கலாம்.

கேவலம்,கல்முனையில் ஒரு கல்விவலயத்தில, ஒரு பிரதேச செயலகத்தில், ஒரு மிருக வைத்தியசாலையில் ஒன்றாக இருக்க முடியாது தமிழ்,தமிழ் என தனித்து முஸ்லிம்களிலிருந்து பிரிந்து நிற்பவர்களுடன் என்ன சமஸ்டி,என்ன வடகிழக்கு இணைப்பு.

சேகு இஸ்ஸத்தீன் அவர்களால் முஸ்லிம் வாக்காளர்களை ஏமாற்றி இணைத்த வடகிழக்கை பிரிக்க எவ்வளவு கஸ்டப்பட்டோம். 'அல்ஹம்துலில்லாஹ்' அது நீதிமன்றத்தால் சட்டப்படி பிரிந்துவிட்டது. அதை யார் யாரது அஜந்தாவுக்காக மீண்டும் இணைத்து நமது கிழக்கு எனும் பாத்திரத்தில் உள்ள கைக்குத்து அரிசை அவர்களது வடக்கு எனும் பாத்திரத்தில் உள்ள ஊறல் அரிசுடன் கலந்து சமைத்து துப்பித் துப்பி தின்பதைவிட நாம் நமது கிழக்கின் கைக்குத்தரிசை தின்போம். அவர்கள் அவர்களது ஊறலரிசை தின்னட்டும். நீங்கள் 1987ல் செய்த மாமா வேலையை செய்யாமலிருந்தால் போதும். "கொயின்சை" போட்டால் பேசும் "டெலிபோன் பூத்"ஆகாமல். பள்ளி வா வா! வீடு போ போ !! எனும் வயசு.ஒரு மூத்தாப்பாவாக இருந்து பேத்தியின் திருமணத்தை ரசியுங்கள், மீண்டும் வாப்பா என்று சொல்லிக் கொண்டு வடகிழக்கை இணைக்கும் 'வலி'காறனாகாதீர்கள். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -