’கட்டார் சென்ற ஹக்கீமிடம் உலமாக்கள் முன்வைத்த கோரிக்கைகள் இவைதான்’

கௌரவ ரஊப் ஹகீம் (பா .உ )
தலைவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சர் அவர்களுக்கும் , கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில்2016/11/20 ம் திகதி  காத்தார் நாட்டில் உள்ள “நியுலங்கா ஹோட்டலில்” நடைபெற்ற கலந்துரையாடலின் போது உலமா அமைப்பின் சார்பாக முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்களும், கோரிக்கைகளும். 

முன்வைத்து உரையாற்றியவர் 
அஸ்ஷேய்க்: எம்.எல்.பைசால் ( காஷிபி ) 
உதவித் தலைவர் 
கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் அமைப்பு.

அன்புடையீர் 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கௌரவ அமைச்சர் ரஊப் ஹகீம் (பா .உ ) அவர்களே, இங்கு வருகை தந்திருக்கும் பிரமுகர்களே, கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் அமைப்பின் நிருவாக உறுப்பினர்களே,சகோதரர்களே உங்கள் அனைவரையும் கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் அமைப்பின்சார்பாக வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 

எமது நாட்டின் அரச பிரதிநிதிகளாக வருகை தந்திருக்கும் தங்களை கத்தார் வாழ் இலங்கை உலமாக்கள் அமைப்பின் பிரதிநிதிகளாகிய நாங்கள் தங்களுடன் கருத்துப்பரிமாற்றம் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமையினையிட்டு அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வமர்வு நிறைவானதாகவும் அல்லாஹ்வுக்கு விருப்பமுடையதாகவும் இருக்க வல்ல அல்லாவை பிரார்திக்கின்றேன்.

கௌரவ அமைச்சர் அவர்களே, 

பொருளாதாரத்தினை ஈட்டிக் கொள்வதற்காக எமது நாட்டிலிருந்து பலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அதில் மத்திய கிழற்கு நாடுகளை நாடி வருகின்றவர்களின் விகிதம் அதிகமாக காணப்படுகின்றதை தாங்கள் அறிவீர்கள். இந்நாடுகளில் கத்தார் நாடு முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று தொழில் புரியும் விருப்பத்தினை விடவும் கத்தார் நாட்டிற்கு தொழில் பெறுவதற்காக வருகின்றவர்களின் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாகும். இந்த வகையில் இலங்கை அரபுக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற மௌலவிகளான நாங்கள் இந்நாட்டில் தொழில் புரிந்து வருகின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.

500 க்கும் மேற்பட்ட ஆலிம்கள் இந்நாட்டு அரச, தனியார் நிறுவனங்களில் பல துறைகளில் பணிபுரிந்து வருகின்றமை சிறப்புக்குரியதாகும். எடுத்துக் காட்டாக மக்கள் தொடர்பாளர்களாகவும் ,தஃவா நிறுவனங்களின் தாயிகளாகவும், மனிதவள முகாமைத்துவ நிருவாகிகளாகவும் , தகவல் தொழிநுட்பம் மற்றும் கணக்காளர்கள் போன்ற பல பணிகளைக் குறிப்பிடலாம்.

ஆலிம்கள் எப்பொழுதும் சமூக அமைப்பாக இருந்து சமூக சேவைகளிலும் மார்க்க விவகாரங்களிலும் முதன்மையாக செயற்பட்டு வருகின்றமையினை நாம் அறிவோம்.

1924 ம் ஆண்டு முதல் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை இலங்கையில் ஆலிம்களுக்கான ஒரு சபையாக இருந்து அது சமூகத்திற்கு ஆற்றி வரும் பணிகளையும், பல ஆலிம்கள் பல அமைப்புகள் மூலமாக பல பிரதேசங்களில் சமூகப் பணி புரிந்து வருகின்றமையும் ஆலிம்கள் எமது நாட்டில் சமூக அமைப்பாக இருந்து செயற்படுகின்றார்கள் என்பதற்கு சிறந்த உதாரணங்களாகும்.

இந்நிலையில் எமது நாட்டை சேர்ந்த குறிப்பிட்ட துறைகளை சார்ந்தவார்கள் கத்தார் நாட்டில் தாம் சார்ந்த துறையினரின் நலன், அதன் சேவை பற்றி சிந்தித்து செயலாற்றும் போது ஆலிம்களின் குரல்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டிய அவசியம் பலராலும் சிந்திக்கப்பட்டது.

இலங்கையில் நிறுவன ரீதியாக பல செயற்பாடுகளில் முதன்மையாக நின்று செயற்பட்ட ஆலிம்களின் வளம் ஒன்று திரட்டப்பட்டு ஆக்கபூர்வாமான செயற்பாடுகளில் பங்களிப்புகளை செலுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டதன் விளைவே இந்த “இத்திஹாதுல் உலமா” அமைப்பாகும் அல்ஹம்துலில்லாஹ். இதன் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்த ஆலிம்களுக்கு அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக என பிரார்தித்துக் கொள்கின்றேன். 

17 அரபுக்கல்லூரிகளின் பழைய மாணவர்கள் அமைப்பின் கத்தார் கிளைகளைச் சேர்ந்த ஆலிம்கள் இலங்கை ஆலிம்கள் என்ற பெயரில் இலங்கைக்கு வெளியில் ஓர் அமைப்பாக இருந்து செயற்படுகின்றமை வரலாற்றுப் பதிவாகும். இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டதனால்த் தான் அல்லாஹ் உங்களை சந்திப்பதற்கும், ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் காரணமாக அமைத்துள்ளான்.

கடந்த ஒரு வருட காலமாக எங்களது பணி தொடர்கின்றது. “இலங்கையின் தேசிய நலனிலும், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் அபிவிருத்தியிலும் பங்களிப்புச் செலுத்தக் கூடிய உலமா சமூகமொன்றைக் கட்டியெழுப்புதல்” என்ற தூர நோக்கினைக் கொண்டு பயணிக்கின்றோம்.

வெளிநாட்டில் பணிபுரியும் எமது ஆலிம்களின் திறன்களை வளர்த்து, அவர்களிடையே நல்ல கருத்து ஒற்றுமையினை ஏற்படுத்தி, நாட்டிற்கு செல்கின்ற போது தாம் பெற்ற அனுபவத்தினைக் கொண்டு அவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது எமது உயர் இலட்சியமாகும்.

மொழி வளத்தினை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள், புதிதாக தொழில் தேடி வரும் ஆலிம்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள், தகவல் தொழில் நுட்ப அறிவினை வளர்ப்பதற்கான பயிற்சி வகுப்புக்கள், தஃவா ரீதியான ஈடுபாடுகள், மட்டுமல்லாது அனர்த்த காலங்களின் போது எமது நாட்டிற்கான உதவிகள் போன்ற நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எமது பணி மென்மேலும் சிறப்புற அல்லாஹ்வை பிரார்த்தித்துக் கொக்கின்றோம்.

கௌரவ அமைச்சர் அவர்களே 

எமது நாட்டின் ஆலிம்கள் இங்கு வருகை தருகின்ற போது அவர்களை சந்தித்து பல விடயங்களைப் பற்றி கருதுப் பரிமாற்றம் செய்யும் வழக்கம் எங்களிடம் உள்ளது. நாங்கள் வெளிநாட்டில் பணி புரிந்தாலும் எமது நாட்டின் அன்றாட விடயங்களில் கவனம் செலுத்தி சமூகம் சார்ந்து எமது கருத்துக்களை உரியவர்களுக்கு எத்திவைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்தர்ப்பத்தில் எமது நாட்டில் ஏற்பட்டு வருகின்ற சில விடயங்கள் பற்றி தங்களின் கவனத்திற்கு எடுத்துக்கூறி சில கருத்துக்களை தெரியப்படுத்தலாம் என விரும்புகின்றோம்.

பல்லின சமூகத்தினைக் கொண்டுள்ள எமது நாட்டில் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் கூட இனங்களுக்கிடையில் அவ்வப்போது குறிப்பிட்ட சில குழுக்களினால் பிரச்சினைகள் உருவாகி வருகின்றமை எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்ற அபாய நிலையினை சிறுபான்மையினர் எதிர்கொண்டு வருவதை அவதானிக்கலாம்.

முஸ்லிம் , தமிழ், சிங்களம் என்ற இன, மொழி ரீதியான பாகுபாட்டுடன் கூடிய சிந்தனையினை திட்டமிட்டு சிலர் இனங்களுக்கிடையில் புரிதலின்மையினை ஏற்படுத்தும் நோக்குடன் வளர்த்து வருகின்றனர். நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையுடன் அடங்கிப்போய் இருந்த குழுக்கள் இன்று மீண்டும் தலைதூக்கி இருப்பது ஆரோயமாகத் தென்படவில்லை.

சமயத்தலங்களின் பாதுகாப்புக் கூட சில தீய விஷமிகளால் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருப்பதும், பகிரங்கமாக சிறுபான்மை இனங்களை அழித்து விடுவோம் என்று அறைகூவல் விடுகின்ற சிலரின் நடவடிக்கைகள் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றமையும் நன்றாகத் தெரியவில்லை.

இதே வேளை நூற்றாண்டு பழமை வாய்ந்த முஸ்லிம் தனியார் சட்டத்தினை பொது சட்டத்தின் கீழ் உள்வாங்கி குறிப்பாக திருமண சட்ட ஏற்பாடுகளில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான எத்தனங்கள் இடம்பெற்று வருவதாக சில தகவல்கள் அறியக் கிடைக்கின்றன. 

மேலும் புதிய அரசியல் அமைப்பிற்கான ஏற்பாடுகள் துரிதப் படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அது இனப்பிரச்சினையினைக்கான தீர்வாகவும் அமைகின்ற போது முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு அவர்களுக்கான ஏற்பாடுகள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் நியாயமான கோரிக்கைகள் எந்தளவு கவனத்திற் கொள்ளப்பட இருக்கின்றன போன்ற பல விடயன்கள் பால் முஸ்லிம் சமூகம் தெளிவினை வேண்டிநிற்பதையும் நாம் அறிவோம் .

மதிப்புக்குரிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அவர்களே, 

முஸ்லிம் மக்களின் அதிக பட்ச ஆதரவினைக் கொண்ட கட்சியின் தலைவாராகிய நீங்கள் இச்சமூகம் எதிர்கொண்டிருக்கும் தற்போதைய சவால்களுக்கு நியாயமான தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பினை தாங்கள் சுமந்துள்ளீர்கள் என நாங்கள் நம்புகின்றோம். 



தேசிய அரசினை உருவாக்குவதற்கு கணிசமான பங்களிப்பினை செலுத்திய கட்சி என்ற வகையிலும் அவ்வரசினை ஆதரித்த முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி என்ற பொறுப்பிலும் இருக்கும் தாங்களும் தங்களது கட்சியும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளை அரவணைத்து உரிய தீர்வினை நோக்கி நகர்வீர்கள் என எதிர்பார்கின்றோம்.

கத்தார் நாட்டில் பல நாட்டவர்கள் தொழில் புரிந்து வருகின்றனர். அவர்கள் எல்லோரும் மிக ஒற்றுமையுடன் இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள். இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் நன்றாகவே இணைந்து பயணிக்கின்றனர். மனிதர்கள் என்ற உணர்வே இவர்கள் எல்லோரையும் ஒன்றிணைகின்றது. எமது நாட்டைச் சேர்ந்த சகல இனத்தவர்களும் இங்குதான் பணிபுரிகின்றனர் இலங்கையர்கள் என்ற பிணைப்பே எங்களை ஒன்றிணைகின்றது. மொழி ரீதியாகவோ அல்லது சமய ரீதியவாவோ எந்த வேற்றுமையும் எங்களுக்குள் வருவதும் இல்லை அவ்வாறு கருத்து வேற்றுமை இடம் பெற்றதாக எங்களுக்கு அறிய கிடைக்கவும் இல்லை எல்லோரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் சங்கமிக்கின்றோம் அல்ஹம்துலில்லாஹ்.

மதிப்புக்குரிய தலைவர் அவர்களே 

ஆலிம் சமூகத்தினை பிரதிநித்துவப்படுத்தும் நாங்கள் தங்களின் மேலான கவனத்திற்கு சில கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளோம். அவை தங்களால் நடை முறைப்படுத்தப்படும் போது சமூகத்தின் தேவை நிறைவிற்குள்ளாகி “ஸதகத்துல் ஜாரியா” அந்தஸ்தினை ஏற்படுத்தும் அதே வேளை தங்களது திட்டங்களுக்கு உதவியாகவும் முஸ்லிம் சமூகத்திற்கு பயனுள்ளதாகவும், நாட்டி ன் தேசிய ஒற்றுமையில் பெரும் பங்களிப்பு செலுத்தக்கூடியதாகவும் அமையும் இன்சா அல்லாஹ்.


நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம் சமூகம் வாழ்ந்து கொண்டிரிருக்கின்றது. இந்நிலையில் இனரீதியான சதித்திட்டிங்களுக்குள் எமது சமூகம் சிக்கி பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலைமை உருவாகும் என்ற அச்ச உணர்வு எமது ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஊசலாடிக் கொண்டிருகின்றது. இதனை தவிர்ப்பதற்கு முயற்சியகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு முஸ்லிம் தலைவர்கள் மீதுள்ளது. எமது நாட்டின் ஜனாதிபதியின் தலைமையில் அரச, எதிர்க்கட்சிகளின் பங்கு பற்றுதலுடன் சமயத் தலைவர்கள் அடங்கலாக பல்லின சமூக ஒற்றுமை பிரகடனம் ஒன்றை வெளியிட்டு எரிந்து கொண்டிருக்கும் நெருப்பினை அணைக்க துணை செய்தல் அவசியம் இதற்கான ஏற்பாட்டினை தாங்கள் செய்ய வேண்டும் எனக் கோருகின்றோம்.

வெளிநாட்டில் பணிபுரிவதற்காக ஆலிம்கள் நாட்டினை விட்டு சென்று கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் வெளிநாடு பற்றி அடிப்படையான அறிவு ,தகவல்கள் இன்றி சிரமம்படுவதையும், அசௌகரியங்களுக்குள்ளாவதையும் காணலாம். இதனை தவிற்கும் முகமாக எமது நாட்டில் ஆலிம்களை மையமாகக் கொண்ட பயிற்சி நிலையத்தினை ஆரம்பிப்பது பற்றி தங்களிடம் கருத்துப்பரிமாறுகின்றோம்.அரபுக்கல்லூரிகளில் இருந்து பட்டம் பெற்று வருகின்றவர்களில் வெளிநாட்டு தொழில் வாய்ப்பினை பெறுவதற்காக முன் வருவோர்களையே இதன் பயனாளிகளாக கொள்ளமுடியும் , மொழியறிவு ,தகவல் தொழில் நுட்ப அறிவு, குறிப்பிட்ட நாடுகளின் நிருவாகம் ,தொழில் துறைகள் போன்ற தகவல்களை ஆலிம்களுக்கு வழங்கும் போது இன்சா அல்லாஹ் அது மிகவும் பயனுள்ளதாக அமையும். 

எமது அமைப்பு கத்தார் வாழ் இலங்கை ஆலிம்களைக் கொண்டதாகும். எங்களது செயற்பாடுகள் மூலமாக இவ்வமைப்பினை உயிரோட்டமுள்ளதாக செயற்படுத்திக் கொண்டிருக்கும் அதே வேளை உதித்தியோகபூர்வமான பதிவினை பெற்றுக்கொண்ட அமைப்பாக இருப்பதன் மூலம் அங்கீகாரம் உள்ளதாக அமையும் என எதிர்பார்க்கின்றோம். இதனை கத்தார் இலங்கை தூதரகத்தில் வெளிநாட்டு அமைச்சின் மூலமாக பதிவதற்கு தாங்கள் ஆவன செய்து தருமாறு அன்பாய் கேட்கின்றோம். 

எமது நாட்டில் முஸ்லிம் சமூகத்தினை மையமாகக் கொண்ட சர்வதேச தனியார் பாடசாலைகள் அதிகமாக இயங்கி வருகின்றன. அதன் மூலம் எமது நாட்டு முஸ்லிம்களும், ஏனைய சமயத்தவர்களும் பயன் பெற்று வருகின்றனர். முஸ்லிம் சமூகம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இஸ்லாத்தினை கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கைக்குட்பட்டதாகும். இதனால் தான் எம் முன்னோர்களால் இலங்கையில் முஸ்லிம் அரச பாடசாலைகள் ஆரம்பித்து வைக்கபப்ட்ட வரலாற்றினை காண்கின்றோம். இந்நிலையில் கத்தார் நாட்டில் தொழில் ரீதியாக சுமார் 500 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் தமது பிள்ளைகளை இஸ்லாமிய சூழலில் வளர்பதற்காக இலங்கை முஸ்லிம் பாடசாலையினை கோருகின்றனர். தற்போதுள்ள பாடசாலையில் பல இனத்தவர்களும் கல்வி கற்பதனால் தமது கலாசார ரீதியான தனித்துவத்தினை எமது மாணவர்கள் இழந்து விடும் நிலையினை அவதானிக்கின்றோம். எனவே சர்வதேச பாடசாலைகள் தொடர்பில் அதிக அனுபவத்தினைக் கொண்ட எமது கல்விமான்களை கத்தார் நாட்டில் இலங்கை முஸ்லிம் சமுகம் சார்ந்த பாடசாலையினை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி கலந்து ஆலோசிக்குமாறு தங்களை வேண்டி நிற்கின்றோம்.

வெளிநாட்டில் பணிபுரியும் எமது நாட்டவர்களின் நலன் கருதி இலங்கையில் நடைபெறும் SLAS,SLES போன்ற பொதுப்பரீச்சைக்ளுக்கு தூதரகத்தின் மூலம் விண்ணப்பித்து, அதன் ஊடாக தோற்றுவதற்கும், அரச தொழிலுக்காக விண்ணப்பிப்பதர்க்கும் ஏற்பாடுகளை செய்து தர முயற்சிக்குமாறு இந்த சந்தர்ப்பத்தில் தங்களை கோருகின்றோம். 

எமது நாட்டிற்கு அந்நிய செலாவணியினை ஈட்டுவதில் அதிக பங்களிப்புகளை வழங்கும் எமது நாட்டவர்கள் வெளிநாட்டில் தொழில் புரிவதனால் தேர்தல் காலங்களில் வாக்களிக்கும் உரிமையினை இழந்திருக்கின்றார்கள்.எனவே அவ்வுருமையினை வெளிநாடுகளில் இருந்தவாறே பிரயோகிக்க சந்தர்பத்தினை ஏற்படுதித் தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

இலங்கை முஸ்லிம்களுக்கான ஷரீஆ சட்ட திருத்த செயற்பாடுகளின் போது அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் ஆலோசனையினைப் பெற்று விடயத்தினை கையயாள்வதே பொருத்தமாகும்.மார்க்க விடயங்களுடன் சம்பந்தப்பட்ட சட்ட ஏற்பாடாக இருப்பதனால் புத்தி ஜீவிகளின் கருத்துக்களைப் பெற்று அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் இறுதி அங்கீகாரத்துடன் சட்ட திருத்தத்தினை முன்னெடுக்குமாறு கத்தார் வாழ் இலங்கை ஆலிம்கள் அமைப்பு தங்களை வேண்டிக்கொள்கின்றது.

முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைவரான நீங்கள் இஸ்லாமிய நாடுகளுடன் தொடர்பு பட்டு முஸ்லிம் சமூகத்திற்கு எப்பொழுதும் சமுக நல செயற்பாடுகளில் முன்னின்று உழைப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்யின் நிருவாகத்தின் கீழ் கல்வி, சமூக சேவை என்ற ஒரு பிரிவினை நிறுவி அல்லது ஏற்கனவே உள்ள அமைப்பினை இயங்கு நிலைக்கு மாற்றி தேவையுடைய மக்களுக்கு உதவுவதற்கான ஏற்பாடுகள் பற்றி சிந்திக்குமாறு ஆலோசனை வழங்குகின்றோம்.

இலங்கை அரபுக்கல்லூரிகள் ஆலிம்களை உருவாக்குவதில் சிறந்த பங்களிப்புகளை வழங்கிக்கொண்டிருக்கின்றது.பரோபகாரிகளின் ஈடுபாட்டுடன் அல்லாஹ்வின் உதவியினால் இக்கல்லூரிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன அல்ஹம்து லில்லாஹ். அரசியல் ரீதியான உதவிகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே அரபுக்கல்லூரிகளுக்கு கிடைக்கின்றன. இதனால் நவீன சவால்களை அரபுக்கல்லூரி மாணவர்கள் எதிர்கொண்டு தங்களது அறிவினை மேம்படுத்துவதற்கான வசதி வாய்புகளை எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் கல்வியறிவினை மேம்படுத்த வேண்டிய நவீன வசதிகளுடன் கூடிய நூலக வசதிகளை ஏற்படுத்துவதற்கு தங்களது அமைச்சின் மூலம் உதவிகளை புரியுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

இலங்கை அரபுக்கல்லூரிகள் வழங்கும் சாண்றிதழ்களை வெளிநாட்டு அமைச்சிடம் உறுதிப்படுவதற்கான வாயிப்புகள் அரிதாக இருப்பது சாண்றிதழ்களைப் பெற்றுள்ள உலமாக்களுக்கு பெரும் ஏமாற்றமாகும். இதனால் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகின்றனர். எனவே அரபுக்கல்லூரிகள் வழங்கும் சாண்றிதழ்களை தரப்படுத்தி இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய தரப்பாரினை ஆலோசிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

எமது நாட்டில் சிறுவர்களுக்கு மார்க்க அறிவினை கற்றுக் கொடுப்பதற்காக வேண்டி அறநெறி பாடசாலைகள் முக்கிய பங்களிப்புச் செலுத்துகின்றன. தத்தம் இனத்தவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் தமது சமய அறிஞர்களிடம் சென்று சமய சூழலில் மார்க விளக்கங்களையும், ஒழுக்க விழுமிய வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் எமது முஸ்லிம் மாணவர்களின் மார்க அறிவினை மேம்படுத்துவதற்காக நடைபெறும் அஹதிய்யா பாடசாலைககளை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்களை அஹதிய்யா பாடசாலைகளின் நிருவாகங்கள் எதிர்கொள்கின்றன. தனியார் வகுப்புகள் என்றும், பாடசாலைகளின் பிரதியக வகுப்புகள் என்றும் மாணவர்கள் அழைக்கப்படுவதனால் சீராக முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. சில போது அதிபர்களின் ஒத்துழைப்பும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு காண முடியாதுள்ளது. எனவே ஞாயிற்றுக் கிழமையினை அஹதிய்யா, அறநெறி வகுப்புக்களை சீராக நடாத்துவதற்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் தனியார் வகுப்புக்களை தவிர்பதற்கான சட்ட ஏற்பாடுகளைச் செய்து மாணவர்களின் இஸ்லாமிய வழிகாட்டல் நிகழ்ச்சித் திடத்தினை ஊக்குவிக்க உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற அல் ஆலிம் பாடத் திட்டத்தினை தமது பாடத் திட்டங்களில் உள்வாங்கி கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அரபுக்கல்லூரிகளில் கல்வி கற்ற மாணவர்களின் உயர்கல்வியினை மேம்படுத்தவும் ,அவர்களின் திறனை வளர்பதற்காகவும் பயிற்சி கல்லூரி ஒன்றினை அமைப்பது பற்றியும், இஸ்லாமிய வழிகாட்டல் விடயங்களை ஆய்வு செய்வதற்கான இஸ்லாமிய ஆய்வு மையம் ஒன்றினை ஏற்படுத்துவது தொடர்பாகவும் உரியவர்களை கலந்து ஆலோச்சிக்குமாறு தங்களை இந்த சந்தர்ப்பத்தில் நினைவு படுத்திக் கொள்கின்றோம். 

முஸ்லிம்களின் விவகாரங்களை கவனத்திற்கொள்ளும் முஸ்லிம் விவகார அமைச்சின் செயற்பாடுகளை பரவலாக்கம் செய்வது பற்றியும் அதன் பங்களிப்புகளை சமூகத்திற்கு முழுமையாக பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் சம்பந்தமாகவும் உரிய அமைச்சரை ஆலோசசிகுமாறு தங்களிடம் வேண்டிக்கொள்கின்றோம்.

எமது பள்ளிவாசல்களின் கடமை புரியும் இமாம்கள், முஅத்தின்களின் வாழ்கை தரத்தினை உயர்த்துவதற்காக கவர்சிகரமான சம்பளத்திட்டம் இன்றி பள்ளிவாசல் நிருவாகிகளால் அவை முறையாக பேணப்படாத நிலை பரவலாக காணப்படுகின்றது. இதனை நிபர்திப்பதற்காக பள்ளிவாசல் நிருவாகிகள், முஸ்லிம் விவகார அமைச்சர் அடங்கலாக உரிய திடத்தினை வகுத்து அவர்களை சமூ கத்தின் உயர் நிலையில் பார்கப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு முஸ்லிம் கட்சியின் தலைவர் என்ற வகையில் உரிய பங்களிப்பினை செலுத்தி தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், அல்லது நாட்டில் புதிய அரசியல் சாசன திருத்தத்தின் போது முஸ்லிம் சமூகத்திற்கு பொதுவான நன்மைகளையும், குறிப்பாக கிழக்கு மாகாண மக்களின் உரிமையினை பாதிக்காத வகையிலும் அது அமைவதை முஸ்லிம் சமூகம் சார்பாக களத்தில் உள்ள நீங்கள் சமூகத்தின் குரலாகவும், அதன் அரணாகவும் இருந்து பெற்றுக் கொடுக்குமாறு இந்த இடத்தில தங்களின் மேலான பார்வைக்கு முன்வைத்து தங்களை வலுப்படுத்துகின்றோம்.

கௌரவ அமைச்சர் அவர்களே 

எமது நாட்டு அரபுக்கல்லூரிகளில் பட்டம் பெற்று வெளிநாடுகளில் பணி புரியும் போதே எமது அரபுக்கல்லூரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நவீன கல்வி திட்டத்தில் அவர்களால் முன்னோக்கிப் பயணிக்க முடியாமல் இருக்கும் நிலைமையினை மீட்டிப்பார்கின்றோம். 

எமது அரபுக்கல்லூரிகள் மொழிப்படங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது அதுபற்றி நாங்கள் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றோம்.

இலங்கையில் ஆலிம் சமூகத்தினை அபிவிருத்தித்தி செய்வதற்கு சில ஆக்கபூரவமான செயற்திடடங்களை முன்வைத்து கருத்துப் பரிமாற்றங்களை முன்னெடுக்கின்றோம், 

இந்நிலையில் வெளிநாட்டில் இலங்கை என்ற பெயரினை தாங்கி செயற்படும் எங்களுக்கு தங்களது ஆலோசனைகளை முன்வைக்குமாறும் எங்களால் முவைக்கப்பட்டிருக்கும் அல்லது சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் விடயங்களில் முடிந்த பங்களிப்பினை செலுத்துமாறும் தங்களை கேட்டுக்கொள்கின்றோம். 

கௌரவ அமைச்சர் அவர்களே 

நாட்டில் தற்பொது இடம் பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் ஆரோக்கியமாகத் தென்படுபடவில்லை. ஆட்சி அதிகாரத்தில் சமூகம் சார்பாக பலர் இருந்த போதிலும் நாளுக்குநாள் நிலைமை மோசமாகிக்கொண்டே செல்கின்றது,நாட்டில் பதற்றமான சூழ்நிலை அதிகரித்து கொண்டே வருகின்றது. சுதந்தரத்திற்கு முற்படட காலங்களில் முஸ்லிம் சமூகம் பற்றி சொல்லப்படட இனவாத கருத்துக்கள் புதிய தொணியில் வலம் வந்து கொண்டிருக்கின்றன, 22 முஸ்லிம் பிரதிநிதிகள்,மாகாண அமைச்சர்கள், மற்றும் முதலமைச்சர் இருந்தும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக விதைக்கப் பட்டுக்கொண்டிருக்கும் நச்சு விதைகளை தணிக்க முடியாத நிலை உருவாகி வருகின்றது. அபிவிருத்தியினை பற்றி பேசும் அரசியல்வாதிகள் முஸ்லிம் மக்களின் இருப்புக்கு பாரிய சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுக் கொண்டிருப்பதை மறந்து செயற்படுகின்றார்களா என்று சிந்திக்கத் தூண்டுகின்றது. 

இச்சூழ்நிலையில் தாங்கள் ஆட்சியின் முக்கிய பங்குதாரர்களாக இருந்து கொண்டு பலமாக குரல் கொடுத்து வருகிண்றீர்கள் அல்லாஹ் தங்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தினை தரவேண்டும் எனப் பிரார்திப்பதுடன் அனைத்து முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளையும், புத்தி ஜீவிகளையும் உள் வாங்கி தேசிய ரீதியாக இதற்கான தீர்வினை நோக்கிப் பயணிக்குமாறு மீண்டும் வலிவுறுத்துகின்றோம். 

“அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக!” (ஆல இம்ரான் 26)

என்று அல்லாஹிவின் வசனங்களை நினைவிற்கொண்டு இவ்வாய்பினை ஏற்படுத்தி தந்த அல்லாஹ்வுக்கு நன்றி கூறி முடிகின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -