சிலாவத்துறை மீனவர்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து மகிந்த அமரவீரவிடம் அமைச்சர் ரிஷாட் பிரஸ்தாபம்..!

ஊடகப்பிரிவு-
தென்னிலங்கை மீனவர்களுக்கு மன்னார் சிலாவத்துறை காயக்குழி பாடுவில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை முறைகேடான நடவடிக்கை என கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீரவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று 10 சுட்டிக்காட்டினார். தென்னிலங்கை மீனவர்கள் பாடுகளை அமைத்து கொட்டில்களைக்கட்டி அந்தப்பிரதேசத்தை உரிமையாக்குவதன் மூலம் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க நேரிடுமென அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல்வள திணைக்கள பணிப்பாளர் நாயகம் கொழும்பில் இருந்து கொண்டு மன்னார் கடல் பிரதேச நிலவரங்களை கருத்திற்கெடுக்காமல் 89 தென்னிலங்கை மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கி பாடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளமை அந்தப்பிரதேசத்தில் அசாதாரண நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முசலி பிரதேச செயலாளர், கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர், மீனவர் சங்கங்கள் ஆகியோருக்கு தெரிவிக்கப்படாமல் பணிப்பாளர் நாயகம் எடுத்த முடிவு மன்னார் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பிழையான ஒரு விடயமென்றும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ரிஷாட், அமைச்சர் மகிந்தவீரவை வேண்டிக்கொண்டார்.

மன்னார் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளான செல்வம் அடைக்கலநாதன் எம் பி, மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், ஆகியோர் பிரதேச செயலகத்திற்கு சென்று இது தொடர்பான எதிர்ப்பை வெளியிட்ட போது அவ்வாறு நடைபெறாதென உறுதிமொழி வழங்கப்பட்டது. எனினும் அது மீறப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார். 

யுத்தகாலத்தில் குறிப்பிட்ட தென்னிலங்கை மீனவர்கள் சிலர் இந்தப்பாடுகளுக்கு வந்து தொழிலில் ஈடுபட்டனர். எனினும் தற்போது அமைதி பிறந்த பின்னர் 26 ஆண்டுகளுக்கு பின்னர் மன்னார் மாவட்ட மீனவர்கள் இங்கு வந்து மீனவத்தொழிலில் ஈடுபடுகின்றனர். குறைந்த மீன் வளங்களைக் கொண்ட இந்தப் பிரதேசத்தில் தென்னிலங்கை மீனவர்களும் வந்து தொழில் புரிவது உள்ளூர் மீனவர்களை பெரிதும் பாதிக்குமெனவும் அமைச்சர் ரிஷாட் எடுத்துரைத்த போது, இந்த விடயம் தனக்கு தெரியாதெனவும் தெரிவித்த அமைச்சர் மகிந்த அமரவீர இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -