எம்.எம்.ஜபீர்-
2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அல்-அஸ்ஸாதிக் வித்தியாலயத்தின் காணி கொள்வனவிற்கான நிதி திரட்டும் சனசமூக நடை பயணம் நேற்று (09) பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முஸாரத் தலைமையில் பாடசாலை முன்பாக ஆரம்பமானது.
பொத்துவில் பழைய தபாலக முன் வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி சங்க கட்டித்தில் 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தரம் 01 தொடக்கம் 04 வரையான வகுப்புகளில் 242 மாணவர்கள் கல்வி பயின்று வரும் இப்பாடசாலை கிராம அபிவிருத்தி சங்க கட்டிடம் மற்றும் அருகிலுள்ள தனியார் கல்வி நிலையம் ஆகியவற்றிலுள்ள தகர கொட்டில்களில் தற்காலிகமாக இயங்கி வருகின்றது.
பொத்துவில் புத்திஜீவிகள் அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் இணைந்து இதற்கென காணி கொள்வனவு செய்யும் பொருட்டு நேற்று (09) காலை ஆரம்பமான மூன்று நாள் சனசமூக நடை பவனி எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையவுள்ளது.
அரசாங்கத்தினால் புதிய கட்டிடம் ஒன்றை வழங்க முன்வந்தபோதும் அதனைக் கட்ட அங்கு போதிய இடமில்லையால் இடப்பற்றாக்குறைக்கு தீர்வாக அருகிலுள்ள தனியார் காணியைக் கொள்வனவு செய்வதற்காக நிதி திரட்டும் மூன்று நாள் சனசமூக நடை பவனி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ரி.எல்.ஏ.மனாப், பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.பி.வசந்த குமார, புத்திஜீவிகள் அமைப்பின் தலைவர் டாக்டர் ஏ.யூ.ஏ.சமட், புத்திஜீவிகள் அமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் எஸ்.எம்.எம்.முஸாரப், முன்னாள் பிரதேச சபையின் உபதவிசாளர் ஏ.எல்.ரவூப், சட்டத்தரணி எஸ்.ஏ.முனாஸ் காரியப்பர், அல்-அஸ்ஸாதிக் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல்.எம்.பிர்தௌஸ், புத்திஜீவிகள் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் பலர் கலந்து கொண்டனர்.