கௌரவ. மரியாம்பிள்ளை அண்டனி ஜெகநாதன் வடக்கு மாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அவர்கள் இறையடி சேர்ந்தார்கள் என்ற செய்தி என்னை என்னை மிகவும் மனவேதனை கொள்ளச் செய்திருக்கின்றது. மாகாணசபையின் உள்ளேயும் வெளியேயும் மிகவும் நெருக்கமான ஒரு அன்பரை நாம் இழந்திருக்கின்றோம்.
பொதுவாக வடக்கு முஸ்லிம்களின் விடயத்தில் மிகவும் வெளிப்படையாகப் பேசுகின்ற ஒருவரை இன்று நாம் இழந்திருக்கின்றோம், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்களின் விடயங்களில் மிகவும் நேர்மையான கருத்துக்களை முன்வைக்கும் ஒருவரே எங்களுடைய வடக்கு மாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் கௌரவ. மரியாம்பிள்ளை அண்டனி ஜெகநாதன் அவர்கள். அவர் என்னிடம் அடிக்கடி சொல்கின்ற ஒருவிடயம் முஸ்லிம் பிரதேசங்களில் ஜெகநாதன் மாஸ்டர் அவர்களைப் பற்றி குறையாகப் பேசிவிட்டு அந்த ஊரை விட்டு வெளியே செல்ல முடியாது, முல்லைத்தீவின் ஒவ்வொரு முஸ்லிம் கிராமமும் என்னோடு மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டவர்கள்.
ஒரு சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு நீராவிப்பிட்டி முஸ்லிம் கிராமத்தில் ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியொன்றில் நான் கலந்துகொண்டிருந்தேன்; அங்கு உரையாற்றிய கௌரவ. மரியாம்பிள்ளை அண்டனி ஜெகநாதன் அவர்கள் முல்லைத்தீவு முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவுகள் இன்றிருக்கும் பலருக்குத் தெரியாது. அவர்கள் முல்லைத்தீவில் முஸ்லிம்கள் புதிதாக குடியேற்றப்படுகின்றார்கள் என்ற கதையை கூறித்திரிகின்றார்கள், இதனையே முதலமைச்சரிடமும் கூறியிருக்கின்றார்கள், இவர்கள் எல்லோரும் துரோகிகள், காட்டிக் கொடுத்தவர்கள், கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது முஸ்லிம்களின் வாக்குகளை விலை கொடுத்து வாங்க முயற்சிக்கலாம் என்று சிலர் எனக்கு ஆலோசனை கூறினார்கள், நான் அவர்களிடம் சொன்னேன் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் களத்தில் இருக்கின்றபோது அவர்களுடைய வாக்குகளை நான் விலைக்கு வாங்கும் இழி செயலை ஒருபோதும் செய்யப் போவதில்லை. அவர்களுடைய வாக்குகளை அவர்கள் முஸ்லிம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்குப் பயனபடுத்த நாம் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டேன், அப்படியிருந்தும் சுமார் 250ற்கும் மேலான முஸ்லிம் மக்களின் வாக்குகள் கூட்டமைப்பிற்கும் எனக்கும் புத்தளத்தில் இருந்த வாக்குச் சாவடிகளில் அளிக்கப்பட்டிருந்தன. இதுவே முஸ்லிம் மக்களிடம் எனக்கிருக்கும் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
முஸ்லிம் மக்களுக்கு அவர்களுடைய கிராமத்திற்கு அருகில் உள்ள காணியை நான் விற்றேன் என்பதற்காக என்னை பலரும் பலவாறு விமர்சித்தார்கள்; அதற்கு அஞ்சுபவன் நான் அல்ல, இப்போதும் கூறுகின்றேன் முஸ்லிம் கிராமத்திற்கு அண்மையில் இருக்கும் இன்னுமொரு கிராமத்தையும் முஸ்லிம் மக்களுக்கே கொடுக்க வேண்டும் என்று அதன் உறுதியின் மேல் நான் எழுதி சிலபோது நான் மரணித்தாலும் அந்தக் காணிகள் முஸ்லிம் மக்களுக்கு உரியன என்று எழுதி வைத்திருக்கின்றேன்.
முல்லைத்தீவில் முஸ்லிம்களுக்கு என்று நீண்ட வரலாறு இருக்கின்றது. அதை எவராலும் அழிக்க முடியாது, முஸ்லிம்களும் தமிழ் மக்களும் மிகவும் நல்லுறவோடு வாழ்ந்தவர்களே. மீண்டும் அவ்வாறான சூழ்நிலை எமக்கு அவசியமாகும், அதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என்றும் குறிப்பிட்டார். அவ்வாறான மிக முக்கிய உரையொன்றின் பின்னர் இறைவன் அவரை சில காலமே இந்த உலகில் உயிர்வாழ அனுமதித்திருக்கின்றான் போலும்.
அவரது மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரது துயரோடும் நானும் இணைந்துகொள்கின்றேன்.