கரீம் ஏ. மிஸ்காத்-
புத்தளம் நகரம் மாவட்டத்தின் நிர்வாகக் கேந்திரமுடைய நகரமாகும். பல்லாயிரக் கணக்கான மக்களைக் கொண்ட இந்த நகரத்தின் அடிப்படை வசதிகளை திறம்பட மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது புத்தளம் நகர சபையாகும்.
ஆனால் இந்த நகர சபைக்கு பதில் கடமை மேற்கொள்வதற்காக வண்ணாத்திவில்லு உதவி பிரதேச செயலாளர் 2 நாட்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இது யானைப் பசிக்கு சோளப் பொறி போன்ற செயலாகும்.
தொடர்ந்தும் புத்தளம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தப்பட்டு வருகிறது. இதனால் நகர சபை நிர்வாக செயற்பாடுகள் தொய்வு நிலையில் இருப்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. நகர சபை உறுப்பினராக இருந்ததால் யதார்த்த நிலையை தன்னால் நன்கு புரிந்து கொள்ள முடியும். இதனால் அங்கு பணி புரியும் அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளிகள் பல அசெளகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர். மக்களுக்கோ இரட்டிப்பு அசெளகரியங்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகள் கொண்ட நிர்வாகமும் இல்லை. நிரந்தர செயலாளரும் இல்லை. இது மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததற்கு ஒப்பானதாகும்.
ஆகவே வண்ணாத்திவில்லு உதவி பிரதேச செயலாளரை அங்கு உரியவாறு பணி புரிய சந்தர்ப்பம் வழங்கிவிட்டு இதற்கு உடனடித் தீர்வாக நகர சபையின் பிரதான நிர்வாக உத்தியோகத்தரை(A.O) பதில் செயலாளராக நியமிக்க மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிரி தஸநாயக்க, வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என முஹ்ஸி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.