நிந்தவூர் உயிர் வாயு மின் நிலையத்தினால் நிந்தவூர் வாழ் மக்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக 2016.09.19ம் திகதியன்று நிந்தவூரில் உள்ள எனது பிராந்திய காரியாலயத்தில் நிந்தவூர் அட்டப்பளம் பிரதேச RDS, பள்ளித்தலைவர்கள், பொதுமக்கள் அடங்கிய குழுவினர் என்னை சந்தித்து மனு ஒன்றினை தந்தனர்.
இவ் மனுவில் பின்வரும் பிரச்சினை பற்றி கூறப்பட்டிருந்தது .
1.இவ் உயிர் வாயு மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் புகையினால் அப்பிரதேச மக்களுக்கு தோல் நோய், சுவாச நோய் என்பன வருவதாகவும்2.பயிற்செய்கை பாதிப்படைவதாகவும்3. கிணற்றின் நீர் மட்டம் குறைவடைந்து குடி நீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய முதற்கட்டமாக நிந்தவூர் பிரதேச செயலாளரை தொடர்புகொண்டு இவ்விடயம் பற்றி ஆராயப்பட வேண்டும் என கேட்டுகொண்டதுடன் அரசாங்க அதிபருக்கும் இது தொடர்பாக அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன். அத்துடன் மீண்டும் ஒரு முறை தொடர்பு கொண்டு இப்பிரச்சினையின் உண்மைத்தன்மையை அறியும் வகையில் பக்க சார்பற்ற குழு ஒன்றை அமைத்து ஒரு கூட்டம் ஒன்றினை ஒழுங்குபடுத்துமாறும் கேட்டுக்கொண்டேன்.
இதற்கமைய 2016.09.25 ம் திகதியன்று நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் அவர்களது தலமையில் இலங்கை முதலீட்டு சபை அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர். அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி ஆனையாளர், அம்பாரை மாவட்ட உதவி அரசாங்க அதிபர், நிந்தவூர் பிரதேச அமைப்புக்களின் உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினரால் இப் பிரச்சினை சம்மந்தமாக ஆராயப்பட்டது. ("இக் கால கட்டத்தில் எனக்கு நடைபெற்ற இருதய சத்திர சிகிச்சை காரணமாக இக் கூட்டத்திலேயோ இவ் விடயத்திலேயோ கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக வருந்துகின்றேன் ")
இக் கூட்டத்தின் படி சுற்றாடல் அதிகார சபையினால் 2 வாரங்களுக்குள் இவ் மின் நிலையத்தின் தொழிநுட்பம் சம்மந்தமான அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவ் அறிக்கையினை தொடர்ந்து மீண்டும் இக்கூட்டம் கூடி மேலதிக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் இவ் உயிர் வாயு மின் நிலையத்தினால் ஏற்படும் சூழல் தாக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளரினால் மின் நிலைய முகாமையாளரிடம் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.
நிந்தவூர் வாழ் மக்கள் வாக்களித்த பிரதிநிதி என்ற வகையிலும் ஒருங்கமைப்பு கூட்ட தலைவன் என்ற வகையிலும் எனது பூரண உடல் சுகமின்மைக்கு மத்தியில் 2016.10.02ம் திகதியன்று மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் ஆகியோருடன் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இவ் விடயம் தொடர்பாக நான் கலந்துரையாடல் ஒன்றினை நடார்த்தியிருந்தேன். அக் கலந்துரையாடலில் இவ் விடயம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதுடன் பக்கசார்பின்றி உண்மை நிலை பற்றி உங்கள் அறிக்கையினை மிக விரைவாக தர வேண்டும் எனவும் கேட்டுகொண்டேன்.
எனவே இவ்விடயம் சம்மந்தமாக பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் எச்சந்தர்ப்பத்திலும் எனக்கு வாக்களித்த என் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினை எனக்கு ஏற்படும் பிரச்சினையை போன்றதாகும். எனவே இப் பிரச்சினைக்கு தீர்வு எடுக்க பூரண முயற்ச்சியினை எடுப்பேன் என கூறிக்கொள்வதோடு இவ் விடயம் தொடர்பில் சுமுகமான முடிவு வரும் வரை பொறுமை காக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் சமூக வலையத்தளங்களில் இவ் விடயத்தினால் எனக்கும் பிரதேச செயலாளருக்கும் முறன்பாடு ஏற்பட்டதாகவும் இதனால் அவரை இடமாற்ற முயற்சி செய்வதாகவும் வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்கு முரணானதாகும். அத்துடன் பிரதேச செயலாளர் திருமதி R. U. Abdul Jaleel அவர்கள் என்னால் முன்வைத்த அபிவிருத்தி திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி நிந்தவூர் அபிவிருத்திகளுக்கு பங்காற்றிய ஒருவராவார்.அவருக்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட பதவி உயர்வின் காரணமாக அவருடன் சேர்த்து அம்பாறை மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர்களுக்கு பதவி உயர்வு நடைபெறவுள்ளமையே இதன் உண்மைத்தன்மையாகும். அத்துடன் அவரால் நிந்தவூர் மக்களுக்கு அவரது சேவை காலத்தில் வழங்கிய நேர்மையான சேவைக்காக நான் பாராட்டுகின்றேன்.
எனக்கு வாக்களித்த மக்களுக்காக மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில் எனது பூரண ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என்பதை அம்பாறை வாழ் மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.
பைசால் காசிம்,
சுகாதார பிரதி அமைச்சர்.