இறக்காமம் நிருபர் - எஸ்.எம்.சன்சீர்-
சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள இறக்காம கோட்டப் பாடசாலைகளின் நீண்ட காலமாக நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறு வேண்டி அனைத்துப் பாடசாலைகளின் பெற்றோர்கள் கவனயீர்;ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் தொடர் தேர்ச்சியாக நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக் குறையினை நவிர்த்தி செய்யும் முகமாக பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் அவைகள் பயனற்றவைகளாகவே இருக்கின்றன. அதற்காகவே நேற்று (திங்கள்) முதல் சகல பாடசாலைகளும் பிரதேசத்திலுள்ள சகல பாடசாலை மாணவர்களையும் பாடசாலைக்குச் செல்லாது பெற்றோர்கள் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பிரதேசத்தின் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம், அனைத்து பாடசாலை அபிவிருத்திக் குழுக்கள், பிரதேச நலன் விரும்பிகள், கல்வி நலன் விரும்பிகள் ஆகியோர் கடந்த 30ஆம் திகதி இறக்காமம் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் ஒன்றுகூடி பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றி திங்கள் முதல் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தினை ஆரம்பித்து எல்லாப் பள்ளிவாசல்கள் ஒலிபெருக்கியிலும் அறிவிப்புச் செய்யப்ட்டது.
இதன்படி 5 அம்சங்களைக் கொண்ட பேரணி இடம்பெற்றது.
1.இம் மாதம் 4ஆம் திகதி வழங்கப்படவுள்ள டிப்ளோமா பெற்ற கல்விக் கல்லூரி ஆசிரியர்களை எமது பிரதேசத்தில் நியமனம் செய்யப்ட வேண்டும்.
2.வெளி மாவட்டம், வெளி மாகாணங்களில் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த 11 ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களை எமது பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்து தரல்.
3.இறக்காமக் கோட்டத்தில் 34 ஆசிரியர்களின் தேவைகளை உடனடியாகப் பெற்றுத் தருமாரும்.
4.இறக்காமக் கல்விக் கோட்டத்தினை தனியான கல்வி வலயமாக மாற்றுமாரும்
5.தனி வலயம் உருவாகும் வரை அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்துடன் எமது கல்வி கோட்டத்தை இணைத்துத் தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக நேற்று முதல் பாடசாலை பகிர்ஷ்கரிப்புச் செய்து வகுப்பறைகள் வெறிச்சோடிக் கிடப்பதுடன் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக பிரதேசத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் தொடர்ந்தும் மக்களை விழிப்பூட்டும் நோக்கில் ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்புச் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.