ஜுனைட்.எம்.பஹ்த்-
மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸலாம் ஜும்ஆ பள்ளி நிருவாகத்தின் ஏற்பாட்டில் வட்டியில்லா சிறு கடன் நிதி வழங்கும் திட்டமொன்று 26.08.2016 ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று ஜும்ஆ தொழுகையினை தொடர்ந்து ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
‘ஸலாமா’ எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டத்தின் காரியாலயம் மட்டக்களப்பில் அமைந்துள்ள ஜாமியுஸ் ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயல் கட்டடத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இத் திட்டத்தின் முதற்கட்டமாக குறித்த பள்ளிவாயல் மஹல்லாவை சேர்ந்த மக்களுக்கு வட்டியில்லா சிறு கடன் நிதி வழங்கப்படவுள்ளதுடன் எதிர்காலத்தில் ஏனையோர்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிவாயல் நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இக்காரியாலய திறப்பு விழா நிகழ்வில் பள்ளிவாயல் நிருவாகத்தினர்,காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இஸ்லாம் தடை செய்துள்ள ஹராமான வட்டியை இல்லாது ஒழிப்பதற்கும் இதில் இருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்குமான இம் முயற்சி பலரது பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது...