இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் நான்கில் மூன்று பங்கினை தானே நிறைவு செய்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எஞ்சியிருந்த இறுதி ஒரு பங்கினை மட்டுமே நிறைவு செய்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த அரசாங்கத்தினால் சிதைந்த இலங்கையை கட்டியெழுப்ப வும் புத்தெழுச்சி பெற செய்வதற்கும் ஐக் கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் எவ்விதமான தவறும் இல்லை எனவும் தெரிவித்தார்.
மீரிகம பகுதியில் இடம்பெற்ற மக்கள சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலேயே யுத்தத்தின் மூன்று பங்கு நிறைவடைந்து விட்டது. மிகுதியிருந்த சொட்ப பகுதியினையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவு செய்திருந்தார். அவ்வாறிருக்கையில் சிலர் யுத்தத்தை கடந்த அரசாங்கம் நிறைவு செய்தமையினாலேயே மீண்டும் ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தை மக்கள் வழங்கினர் என்றும் யுத்தத்தின் நாயகனாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சித்திரிக்கவும் முனைந்தனர்.
உண்மையாக விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சியும் ஒரு பங்கு வழங்கியிருந்தது. நான் ஆட்சிக்கு வரும் முன்னரும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் நான்கில் மூன்று பங்கு யுத்தம் நிறைவுபெற்று விட்டது என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். நாம் மேற்கொண்ட முயற்சிகளின் பின்னரே யுத்தத்தை நிறைவு செய்ய அவரால் முடிந்ததே தவிர தனித்து அவரால் யுத்தத்தை ஒருபோதும் வெற்றிக்கொண்டிருக்க முடியாது. அத்தோடு யுத்தத்திற்கான ஆயுதங்களை எமது அரசாங்கமே கொள்வனவு செய்திருந்தது.
எனவே நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் யார் வேண்டுமானாலும் இணைந்து செயற்பட தயாராக உள்ளேன். நாட்டின் நன்மைக்காக என்னை அர்ப்பணித்து செயற்பட தயாராகவுள்ளேன் என்றார்.