உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் குடும்பத்தினரால் கவுரவகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்படுவதற்கு முன் குறித்த பெண் பதிவு செய்து வைத்திருந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோ ஓடும் ரயிலின் கழிப்பறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பெண், என் குடும்பத்தினர் என்னை கொல்வதற்காக சொந்த கிராமத்திற்கு அழைத்து செல்கின்றனர். நான் பெரிய ஆபத்தில் உள்ளேன். எனக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு என் குடும்பத்தினரே பொறுப்பு. நான் இம்ரானை திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் என பதிவு செய்துள்ளார்.
குறித்த வீடியோ வைரலாக இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் வீடியோவில் தோன்றியவர் சோனி(வயது-26) என தெரியவந்துள்ளது. அவரின் சொந்த கிராமமான Hathras சென்று விசாரித்த போது சோனி சில தினங்களுக்கு முன் இறந்துவிட்டதாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து சோனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். தகவல் அறிந்து தலைமறைவாகியுள்ள சோனியின் பெற்றோர் மற்றும் நான்கு சகோதரர்களை பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும், சோனி குறிப்பிட்ட இம்ரான் என்ற நபரை குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.