பணம் பெற்றுக்கொண்ட முறையினை வெளிப்படுத்த முடியாத மேலும் ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக எதிர்வரும் நாட்களில் நீதிமன்றில் உத்தரவு பெற்றுக்கொள்ள நிதி மோசடி விசாரணை பிரிவு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாராவது ஒரு நபர் தன்னிடம் உள்ள சொத்து எவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்டதென கூற தவறினால், பணம் தூய்மையாக்கல் சட்டத்தின் கீ்ழ் அந்த சொத்து அரசாங்கத்திற்கு பறிமுதல் செய்யப்படவுள்ளது. அத்துடன், சொத்திற்குரிய நபருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு அந்த சட்டத்தில் பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி விசாரணை பிரிவின் முன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 300 முறைப்பாடுகளில் கிட்டத்தட்ட 100 முறைப்பாடுகளில் கோடி கணக்கில் சொத்துக்களை பெற்றுக் கொண்டுள்ள உரிமையாளர்கள் அதனை பெற்றுக் கொண்ட முறையினை விளக்குவதற்கு தவறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல்வாதிகள், அமைச்சின் செயலாளர்கள், நிறுவனங்களின் பிரதானிகள், கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபை மற்றும் பல அரசாங்க அதிகாரிகளினால் தவறான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்துக்களை அவர்கள் தங்களின் உறவினர்களின் பெயர்களில் எழுதி வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த நபர்கள் இவ்வாறு சொத்து கிடைத்த முறையினை விபரிப்பதற்கு தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய குறித்த முறையில் சொத்துக்களை பெற்றுக் கொண்டவர்கள் அந்த சொத்துக்கள் பெற்று கொண்ட முறையினை தெரிவிக்கவில்லை என்றால் அதனை பறிமுதல் செய்வதற்காக நீதிமன்ற அனுமதியை கோருவதற்கு நிதி மோசடி விசாரணை பிரிவு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் முறைப்பாடுகளுக்கு தொடர்புடைய நபர்களில் பலர் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கணக்குகள் தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவு வெளிவிவகார அமைச்சின் ஊடாக தகவல் பெற்று கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் கோடி கணக்கில் பணம் வைப்பு செய்துள்ளதாகவும், இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றில் தகவல் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.