அந்த மரங்களும் தந்த சுகங்களும்...!

அந்த மரங்களும் தந்த சுகங்களும்...
+++++++++++++++++++

பூவரசம் இலை பறித்து
புறப்பக்கம் உருட்டி விட்டு
ஊவென்று ஊத எழும்
ஒலியினில் மனம் துள்ளும்.

மல்லிகை செவ்வரத்தை
மலர்களின் அடி வாயை
உள்ளுக்குள் இழுத்து உறுஞ்ச
உள்ளத்தில் தேன் கசியும்

ஓலையைக் கிழித்தெடுத்து
உருளோசு காப்பு மற்றும்
மாலையும் செய்து வாழ்ந்த
மாலைகள் மகிழ்ச்சி தரும்.

கமுக மட்டை அடியினிலே
கால் நீட்டி உட்கார
சுமுகமான நட்பு வட்டம்
சுகம் தர இழுத்துச் செல்லும்.

முருங்கையிலே கம்பு வெட்டி
மூலையில் காலாய் நாட்டி
விரிக்கின்ற பாய்த் துண்டில்
விளையாட்டு மெய் மறக்கும்.

முள்ளு முருங்கை கொட்டையினை
முழுசாக நிலம் தேய்க்க
சுள்ளென்று சூடாகும்.
சொல்லாமல் சுடுவான்கள்.

காகஞ் சொண்டி இலை பறித்து
காணாமல் கொண்டு வந்து
தேகத்தில் பூசும் போது
தீப் புண்ணாய் தோல் எரியும்

குண்டுமணி பொறுக்கி அதை
கும்பலாய் சேர்த்த பின்னால்
எண்ட உண்ட என்று அங்கு
எழும்பும் பாகப் பிரிவினை

குரும்பட்டி சேர்த்தெடுத்து
குறுக்கால ஈர்க்கில் குற்றி
குறும்பாக சுற்றும் போது
குறும் பாவாய் அது சுவைக்கும்.

ஓடி விழுந்து முழங்காலில்
உரசுப் பட்டு காயம் வர
கூட உள்ள கூட்டாளி
கொத்து இலை பிழிந்து வைப்பான்

மாடி வீடு கட்டியதால்
மரங்களெல்லாம் அழிந்து போச்சு
மடிக் கணணி டச் போணால்
மர ஆட்டம் மறந்து போச்சு.

இடைக்கிடை நினைவு வரும்
இறந்து போன செவ்வரத்தை
கிடைக்குமா மீண்டும் என்று
கெஞ்சும் உள் நெஞ்சம்.
Mohamed Nizous.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -