மன்னார் மர்ம கிணறு - 3 வருட மர்மம் வெளிச்சத்துக்கு வந்தது

ன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் கடந்த இரு வருடங்களுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழியை தொடர்ந்து இதன் அருகாமையிலுள்ள மூடப்பட்ட கிணறு ஒன்றிலும் மனித புதை குழி காணப்படும் சந்தேகம் இருப்பதாக காணாமல் போனவர்களின் உறவுகள் தங்கள் சட்டத்தரனிகள் ஊடாக மன்னார் நீதிமன்றில் வைத்த கோரிக்கையை தொடர்ந்து அதன் அகழ்வு பணி முற்றுப்பெற்றுள்ளது.

நாட்டில் யுத்த சூழ்நிலை மாறி அமைதி நிலை உருவாக்கப்பட்டபின் காணாமல் போனவர்கள், பாதுகாப்பு படையினரால் விசாரனைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு இதுவரைக்கும் தங்கள் வீடு வந்து சேராதவர்கள் பற்றி இவர்களின் உறவுகள் தேடுவதில் ஈடுபட்டு வருகின்ற வேளையில் கடந்த 23.12.2013 அன்று மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வீதியூடாக மாந்தைப் பகுதி மக்களுக்கு நீர் வழங்கல் வடிகால் சபை குடிநீர் விநியோகத்திற்காக குழாய்கள் நிலத்தடியில் பதித்துச் சென்ற சமயம் புதைகுழி ஒன்று கண்டபிடிக்கப்பட்டது. அப் புதைகுழி 23.12.2013 தொடக்கம் 05.03.2014 வரை 33 தடவைகள் அகழ்வு செய்யப்பட்டது.

இந்த புதைகுழியானது அன்றைய மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் சட்டவைத்திய நிபுணர் டீ.எல்.வைத்தியரத்தின தலைமையில் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கே.யோசப் மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கந்தேவத்த, மன்னார் உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி பெரமுன்ன, குற்ற விசாரணை பொறுப்பதிகாரி சமன்குமார, பிரதான பொலிஸ் பரிசோதகர் விக்கிரமசேகர, தொல்பொருள் ஆய்வு பணிப்பாளர் என்.கொடிதுவக்கு, தொல்பொருள் அகழ்வு உத்தியோகத்தர் விஐயரட்ன உட்பட முக்கியஸ்தர் சமூகமளித்திருந்த நிலையில் இவ் அகழ்வு பணி இடம்பெற்றது.

இவ் அகழ்வு பணியின்போது இவ் புதைகுழியிலிருந்து 84 மனித மண்டையோடுகளும் எச்சங்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து இது சம்பந்தமான வழக்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இவ் வழக்கில் காணாமல் போனவர்களின் சார்பாக சட்டத்தரனிகள் ஆஐராகி தங்கள் வாதங்களை முன்வைத்து வருகின்ற வேளையில் காணாமல் போனவர்களின் உறவுகள் சார்பாக சட்டத்தரனிகள் மன்றில் அறிக்கை ஒன்றை சமர்பிக்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு அருகாமையில் ஒரு கிணறு இருப்பதாகவும் அதற்குள்ளும் காணாமல் போனவர்களின் மனித எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டு அவ் கிணற்றை அடையாளப்படுத்தி அகழ்வு செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதற்கமைவாக கடந்த 26.08.2015 அன்று மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐh முன்னிலையில் சந்தேகத்திற்கிடமான கிணறு அடையாளம் காணப்பட்டு இவ் கிணறு அகழ்வு செய்யும்வரை அவ்வீதி போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்ட நிலையில் பொலிஸ் பாதுகாப்பும் இடப்பட்டிருந்தது.

பின் இவ் கிணறு 19.02.2016 அன்று அகழ்வு செய்வதற்கு மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தபோதும் அச் சமயம்; மன்னாரில் பெய்திருந்த மழைகாரணமாக அப்பகுதியில் வெள்ள நீர் காணப்பட்டதால் அக்காலக்கட்டத்தில் இவ் அகழ்வு பணியை மேற்கொள்ள முடியாது என மன்னார் பொலிசார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்

இதன் காரணமாக அன்றைய தினம் அகழ்வு செய்யவிருந்த இவ் சந்தேகத்திற்கிடமான கிணறு அகழ்வு செய்யப்படாத நிலையில் பின்தள்ளப்பட்டது.

பின் கடந்த ஏப்ரல் மாதம் 04,05,06 ஆம் திகதிகளில் மர்ம கிணறு அகழ்வு செய்யப்படும் என மன்னார் நீதிமன்றம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து 04.06.2016 அன்று இவ் வழக்கு மன்னார் நீதிமன்றில் அழைக்கப்பட்டு அன்றைய தினம் இவ் கிணற்றை அகழ்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் அவ் கிணற்று பகுதியை அகழ்வு செய்வதற்காக சம்பந்தப்பட்டவர்கள் சம்பவ இடத்தில் ஆயத்தமாக இருந்த போதும் அச்சமயம் சட்டவைத்திய அதிகாரிகள் அவ்விடத்தில் சமூகமளிக்காதமையால் அன்றும் இவ் அகழ்வு இடம்பெறவில்லை.

இதைத் தொடர்ந்து இவ் வழக்கு கடந்த 01.08.2016 திங்கள் கிழமை மன்னார் நீதிபதி ஆ.க.ஆசீர்வாதம் முன்னிலையில் விசாரனைக்கு அழைக்கப்பட்டு இதன் அகழ்வு பணி இடம்பெற இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட 13 திணைக்கள அதிகாரிகளையும் காலை 10.30 மணிக்கு சம்பவ இடத்தில் சமூகமளிக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.

இவ் கிணறு தோண்டும் பணி ஆரம்பமாவதற்கு முன் இவ் பணிக்காக சமூகமளித்திருந்தவர்கள் மத்தியில் இவ் கிணறு தோண்டும் பணிக்கு தலைமை வகித்த வைத்திய சட்ட நிபுணர் வைத்திய கலாநிதி ஆர்.ஏ.எஸ்.ராஐபக்: அகழ்வு பணி ஒழுங்கு சம்பந்தமான விடயங்களை தெரிவித்து உரையாற்றுகையில்,

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரப் பகுதில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் மனித எச்சங்கள் காணப்படாவிட்டால் தொடர்ந்து அதன் பணி தொடரும் எனவும், மனித எச்சங்கள் காணப்படின் அவை இடைநிறுத்தப்பட்டு பின் அகழ்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த அகழ்வு பணிக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யாதமையே காலதாமதம் ஏற்றட்டதாக அகழ்வு பணிக்கு தலைமை வகித்த வைத்திய சட்ட நிபுணர் ஆர்.ஏ.எஸ்.ராஐபக் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இம் மாதம் முதலாம் திகதி (01.08.2016) முற்பகல் 11.30 மணியளவில் குறித்த கிணற்றின் அகழ்வு பணி, நீதிபதி ஆ.கி.அலெக்ஸ்ராஐ முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டு மாலை 5 மணிவரை இடம்பெற்றது.

இவ் அகழ்வு பணியில் முதல்நாள் சுமார் 57 சென்றி மீற்றர் மண் அகழ்வு செய்யப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டது. பின் இரண்டாம் நாள் செவ்வாய்கிழமை (02.08.2016) 326 சென்றி மீற்றர் வரை அகழ்வு செய்யப்பட்டது.

கற்களும் மணலும் நிறைந்து காணப்பட்ட இவ் கிணற்றை பெக்கோ மூலமே தோண்ட வேண்டிய நிலையில் கிணற்றுக்குள் இருந்த நீரை இயந்திரத்தின் மூலம் வெளியேற்றியே துப்பரவு செய்யப்பட்டது.

பின் மூன்றாம் நாள் நடைபெற்ற அகழ்வின்போது 434 சென்றி மீற்றர் ஆழத்தில் இவ் கிணறு முற்று முழுதாக தோண்டப்பட்டு இவ் சந்தேகத்துக்குரிய கிணற்றின் அகழ்வு பணி பூரணப்படுத்தப்பட்டது.

ஒரு சில சிறு சிறு எலும்புத் துண்டுகள், 1994ம் ஆண்டு வெளியிடப்பட்ட 25 சதம் காசு குத்தி ஒன்று, வெடிக்காத ரி56 ரவை ஒன்று, சிறு சிறு கம்பிகள் கயிறு துண்டு போன்ற சில தடயப் பொருட்கள் பரிசோதனைகளுக்காக எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் புதன் கிழமையுடன் (03.08.2016) இவ் கிணறு தோண்டும் பணி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நீதிபதி அங்கு கட்டளை பிறப்பிக்கையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைத்திய சட்ட நிபுணருக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கும்படி பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்ததுடன் இவ் கிணற்றை தோண்டும்போது சேதமாக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக புனரமைப்பு செய்யும்படியும் கூறினார்.

நீதிமன்றின் கட்டளைக்குப்பின் இவ் கிணற்றை மக்கள் பாவனைக்கு விட நடவடிக்கை மேற்கொள்ளும்படி மன்னார் பிரதேச சபை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் இதன் விசாரனையை எதிர்வரும் 05.09.2016 வரை ஒத்திவைத்துள்ளார்.

இவ் கிணற்றுக்குள் மனித எச்சங்கள் காணப்படும் என நீண்ட காலமாக இவ் பகுதி மக்களிடம் இருந்து வந்த சந்தேகம் கடந்த புதன் கிழமையுடன் தீர்க்கப்பட்டபோதும் மனித எச்சங்களுக்கு அடையாளமாக நம்பிக்கையூட்டும் பிரதான எச்சங்கள் தென்படவில்லை.

இங்கு கண்டு பிடிக்கப்பட்ட சிறு சிறு எலும்புத் துண்டு எச்சங்கள் மனித உடலைச் சார்ந்ததா? அல்லது பறவைகள் மிருகங்களின் எச்சங்களா? என்பது பகுப்பாய்வுக்கு பின்பே மன்றில் வெளியிடப்படும்.

இவ் அகழ்வு பணி முடியும் வரை காணாமல் போனவர்களின் சார்பாக ஆஐராகி வரும் சட்டத்தரனிகள் வீ.எஸ்.நிரன்ஐன், திருமதி ஞானராஐ ரணித்தா ஆகியோர் இங்கு சமூகளித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -