கடந்த பௌர்ணமி தினம் 17-8-2016 புதன்கிழமை வலம்புரி கவிதா வட்டத்தின் 29வது கவியரங்கு வகவத் தலைவர் என். நஜ்முல் ஹுசைனின் நெறிப்படுத்தலில் கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது. கவிஞர், பாடலாசிரியர் ஈழத்து ரத்தினம் அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் ஆய்வாளர் தம்பி ஐயா தேவதாஸ் சிறப்பதிதியாக கலந்து உரையாற்றினார்.
செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அண்மையில் மறைந்த கவிஞர் ஞானக்கூத்தன் மற்றும் கவிஞரும் பாடலாசிரியருமான நா. முத்துக்குமார் ஆகியோருக்கான மௌன பிரார்த்தனையும் நடைபெற்றது. இவ்விரு கவிஞர்கள் பற்றிய குறிப்புகளை கவிஞர் மேமன்கவி தெரிவித்தார். இலங்கையில் தமிழ் சினிமா ஆய்வுத்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வரும் திரு. தம்பி ஐயா தேவதாஸ் சினிமா பாடலாசிரியராக மிளிர்ந்த ஈழத்து ரத்தினம் பற்றி சிறப்புரையாற்றினார்.
'இந்திய சினிமாத்துறையிலே ஈடுபாடு காட்டி வந்த ஈழத்து ரத்தினம் அவர்களுக்கு அன்று சினிமா பாடல் துறையில் மிகவும் புகழ் பெற்றிருந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 'எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள்' என்ற திரைப்படத்திலே பாட்டெழுத வாய்ப்பெடுத்துக் கொடுத்தார். அப் படத்திலே இடம்பெற்ற 'டைட்டில் பாடல்' எமது கவிஞர் ஈழத்து ரத்தினம் அவர்களுடையதுதான். டி.எம்.எஸ்.சௌந்தரராஜன் அதனைப் பாடியிருந்தார். தென்னிந்தியாவிலே வாழ்ந்து கொண்டு பல தென்னிந்திய திரைப்படங்களில் உதவியாளராக பணிபுரிந்துள்ளார். தென்னிந்திய பிரபல டைரக்டர் பாலு மகேந்திரா மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவரது நண்பரான ஈழத்து ரத்தினம் மகேந்திராவின் சஞ்சிகையிலே எழுதி வந்திருக்கிறார். இலங்கையைச் சேர்ந்த பலர் தென்னிந்திய சினிமா துறையினில் பணிபுரிந்துள்ளனர்.
எனினும் மற்றைய துறைகளில் வாய்ப்பு கிடைத்தபோதும் ஈழத்து ரத்தினத்துக்கு மட்டுமே அங்கே பாட்டெழுதும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது நம் நாட்டின் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தென்னிந்தியாவிலிருந்து இலங்கை வந்த ஈழத்து ரத்தினம் இலங்கையின் தமிழ் சினிமா தலையெடுத்த போது அதிகமான பாடல்கள் எழுதும் வாய்ப்பினை பெற்றுக்கொண்டார். 'இன்றும் இலங்கை திரைப்படங்களில் இடம்பெற்ற எமது மனது மறக்காத பாடல்களின் சொந்தக்காரராக அவர் விளங்குகிறார். அவர் முதன் முதலாக பாடல் எழுதிய இலங்கைத் திரைப்படம் 'குத்து விளக்கு' ஆகும். 'ஈழத்திரு நாடே என்னருமை தாயகமே.....' என்ற பாடல் மிகவும் பிரபலம் வாய்ந்தது. 'வாடைக்காற்று' திரைப்படத்தில் இடம்பெற்ற 'வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே... நல்ல வாழ்க்கை உண்டு எங்களுக்கு ஓடத்திலே' என்ற பாடல் இன்றும் காதுகளிலே ரீங்காரம் செய்து கொண்டிருக்கின்றன. அது செங்கை ஆழியானின் பாராட்டைப் பெற்ற பாடலாகும்.; 'அவள் ஒரு ஜீவநதி' 'அநுராகம்' போன்ற பல படங்களில் இவரது மனது மறக்காத பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கையின் தமிழ் மெல்லிசைப் பாடல் வரலாற்றிலும் அதிக பாடல்களை எழுதிய பெருமை ஈழத்து ரத்தினத்தையே சாரும்.
தென்னிந்தியாவிலேயே அவர் காலமானார். இவ்வாறான ஒரு பாடலாசிரியரையும் கௌரவித்து அரங்கு அமைத்த வகவத்தினை மனதார பாராட்டுகிறேன்' என்றார். வகவத்தின் 29 வது கவியரங்கிற்கு கவிஞரும் பாடகருமான கவிக்கமல் ரஸீம் தலைமை தாங்கினார். கவிஞர்கள் போருத்தொட்ட ரிஸ்மி, கனிவுமதி, வெலிமடை ஜஹாங்கீர், மஸ்கெலியா பபியான், வெலிகம கலைமகன் பைரூஸ், ஈழகணேஷ், கம்மல்துறை இக்பால், பாணந்துறை நிஸ்வான், எம்.எஸ்.தாஜ்மஹான், பிரேம்ராஜ், கல்முனை முபாரக், எம்.ஐ.இஸ்ஸதீன், எம்.எச்.எம். நவ்சர், ச.தனபாலன் ஆகியோர் கவிதை பாடினர். ஸ்தாபக உறுப்பினர் கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனி, பொருளாளர் கலையழகி வரதராணி ஆகியோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மருதூர் ஹஸன், த.மணி, இர்ஷாத் ஏ.காதர், லங்காசிரி சர்மா, ஏ.எம்.எஸ். உதுமான், ரவூப் ஹஸீர், வெலிப்பன்னை அத்தாஸ், கே.பத்மநாதன், எஸ்.சிவன், ஜே.கே.நஜிமுதீன், எஸ்.ஏ.கரீம், ஏ.ஆர்.டி.முஸம்மில், எம்.எம்.எம். நூறுல் ஹக், கே.மோகன்குமார், முல்லை முஸ்ரிபா, ஸாதிக் ஷஹான் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.